பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 17 என்ன பண்டா ஐயா கடைப்பக்கமே காணேல்ல…. என்று கூறியபடி சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தார் கந்தையா அண்ணன் ..

பெட்டிக்கடைப் பேச்சு – 17

என்ன பண்டா ஐயா கடைப்பக்கமே காணேல்ல…. என்று கூறியபடி சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தார் கந்தையா அண்ணன் ..

நயீம் நானாவுடன் கடைக்குப் பக்கத்திலே வந்து கொண்டிருந்த புஞ்சிபண்டா ” அப்பி எலெக்சன் பிஸினெ ..” என்று தேர்தல் வேலை இருந்ததாக சொல்லியபடி பெஞ்ஜில் அமர்ந்தார்…

”என்ன நடக்குது அரசியல் விளையாட்டுகள் ஆரம்பமாகியாச்சு போல….என்று கதையை ஆரம்பித்தார் கந்தையா அண்ணன் ..

” அதானே பொலிடிக்ஸ் …நிறைய மினிஸ்டர்மார் உள்ளுக்கு போக போறாங்க போல….அமைச்சு நிதிய மிஸ்யூஸ் பண்ணின ஆக்கள் எண்டு ஒரு கோஷ்டிய உள்ள போட போறாங்களாம்…சஜித் மினிஸ்டரா இருந்தப்போ மத்திய கலாசார நிதியத்தில நிதி துஷ்பிரயோகம் நடந்ததா ஏற்கனவே மைத்ரி அமைச்ச கொமிசன் சொல்லி இருந்ததே..இப்ப அத தூசு தட்டி எடுக்க போறாங்களாம்…ஏற்கனவே சம்பிக்க ரணவக்க ,ராஜித ஆக்கள் சிக்கலில இருக்கிறப்போ இன்னும் கொஞ்ச பேர் பெயரும் அடிபடுது….” என்றார் பண்டா ஐயா..

” அரசியல் பழிவாங்கல் எண்டு வந்துட்டா இனி காரணம் தேடி பிடிக்கலாம் தானே… ” என்று அதற்கு பதிலளித்தார் கந்தையா அண்ணன் ..

” அப்போ போயா தினத்தில கோர்ட்ஸ திறந்து பெசில் ராஜபக்சவ விசாரிச்சது…அதெல்லாம் என்னவாம்… செய்யுறது தான் திரும்பி வரும்… எல்லாம் மாறி மாறி நடக்கும்…எல்லாரும் ஆட்சியில இருக்கும்போது தாங்க தான் நிரந்தரமா இருக்கப்போறதா நினைச்சு நடப்பாங்க..பிறகு எல்லாம் மாறும்போதுதான் தெரியும்…” என்று பெருமூச்சோடு சொன்னார் பண்டா ஐயா..

” ஆனா நல்லா பாருங்க…சஜித் ஆதரவு எம் பி மார் தான் கைது செய்யப்படுறாங்க…இதுக்கெல்லாம் பின்னாடி ரணில் இருக்கலாம்…யார் கண்டது…இப்போ இனி கட்சித் தலைமை பிரச்சினை கொஞ்ச நாளைக்கு வராது தானே…” என்று தனக்குள் இருக்கும் சந்தேகத்தை நயீம் நானா சொன்னபோது கந்தையா அண்ணனும் பண்டா ஐயாவும் கொல்லெனச் சிரித்தனர்.

”அது இருக்கட்டும் ஒரு சங்கதி சொல்லட்டுமா…சஜித் மாத்தயா கோட்டாபய மாத்தயாவுக்கு ரெலிபோன்ல பேசினாராம்…சிறுத்தைகள் பத்தி ஒரு ஆய்வு நடத்திறதாகவும் அத புத்தகமா வெளியிடப் போறதாகவும் சொன்ன சஜித் அந்த வேலைகளுக்காக காட்டுப்பகுதிக்கு போக அனுமதி கேட்டாராம்…சரி பார்ப்போம்னு கோட்டா சொன்னாராம்..” என்று ஒரு கொசுறு செய்தியை சொல்லி முடித்தார் நயீம் நானா…

” முஸ்லிம் மினிஸ்டர்மார் அரசாங்கத்தில இல்லாதது பத்தி பேசணும்…பாருங்க இந்த முற ஹஜ் போற ஆக்கள கவனிக்க யாருமில்ல….” குறைப்பட்டார் நயீம் நானா..

” கொஞ்ச முஸ்லிம் பிசினஸ்கார ஆக்கள் மஹிந்தவ சந்திச்சு இந்த ஹஜ் மெட்டர பத்தி பேசினாங்களாம்…. அதுக்கு பொறுப்பா ஒரு முஸ்லிம் பொலிட்டீஷியன் ஒராள போடணும்ன்னு சொல்ல மஹிந்த ஏலவே ஏலாது எண்டு சொல்லிப்போட்டாராம்…இங்க பாருங்க ஹாஜியார் நீங்க முஸ்லிமா இருக்கலாம் ஆனா முஸ்லிம் ஆக்கள் கொஞ்ச பேர் ஹஜ் பேர வச்சு செஞ்ச யாவாரம் எல்லாம் எனக்கு தெரியும்…சாதாரண முஸ்லிம் ஒரு ஆளுக்கு ஹஜ் போற மாதிரியா வச்சிருக்காங்க…ஒருத்தருக்கு கோட்டா கிடைச்சா அவரு அத சப் கோட்டா கொடுத்து பிஸ்னஸ் பார்க்குறது…இனி அப்படி ஏலா …கஷ்டப்பட்ட மக்கள் அங்க போக கூடியமாதிரி இருந்தா தான் அந்த கோட்டா கிடைக்கிறதிலயும் ஒரு நன்மை இருக்கு…இனி எங்கட சவூதி எம்பாஸடர் அதெல்லாம் பார்க்கட்டும்..ஹஜ் பேர வச்சு பிஸினஸ் செய்ய நான் இனி இடம் கொடுக்கமாட்டன்…எண்டு அந்த ஆக்களுக்கு தெளிவா சொன்னாராம் மஹிந்த….” என்று நீட்டி முழக்கி விபரித்தார் பண்டா ஐயா…

” அது எண்டா சரியான பேச்சு…” என்று உடனடியாக பதில் கொடுத்தார் நயீம் நானா….

” கூட்டமைப்பு என்ன செய்யுது….?” கந்தையா அண்ணனை பார்த்து கேட்டார் பண்டா ஐயா

” கூட்டமைப்பு இந்த முறை வடக்கு கிழக்கிற்கு வெளியே போட்டி போடப் போகுது…கொழும்பு ,கம்பஹா மாவட்டங்களில் கூட்டமைப்பு போட்டி போட ஏற்பாடுகள செய்யுற அதேசமயம் கொழும்பில பிரபல சட்டத்தரணி ஒருவர களம் இறக்க கூட்டமைப்பு யோசிச்சிருக்காம்…என்னெண்டா இனி யூ என் பிக்கு போற தமிழ் வாக்குகள் கூட்டமைப்புக்கு போகலாம்…” என்று அதற்கு பதிலளித்தார் பண்டா ஐயா

” மறுபக்கம் யூ என் பிக்குள்ள இந்த முறை பங்காளிக் கட்சிகள தனியா போட்டியிட வச்சா நல்லம் எண்டு பார்க்கிறார் ரணில்…அப்படி இல்லாட்டி பெரிய கூட்டணி ஒண்ட அமைச்சு அந்த கூட்டணிக்கு அனுர குமார திஸாநாயக்கவ பொறுப்பா வச்சு ஜே வி பியையும் சேர்த்து ஒரு வியூகத்த அமைக்க யோசிக்கிறாராம் ரணில்.மறுபக்கம் ரிசார்ட் ,ஹக்கீம் கூட்டணி ஒன்று அமையவும் பேச்சு நடக்குது.ஆனா அதுக்கு ரிசார்ட் தரப்பில பெரிய விருப்பம் இல்லையாம்…மஹிந்த ஆக்கள் சட்டத்தரணி அலி சப்ரிய தேசிய பட்டியலுக்கு கொண்டுவந்து அவருக்கு ஒரு பவர்புல் மினிஸ்ட்ரிய கொடுக்க போறாங்களாம்…இலங்கை வங்கி தலைவரா அலி சப்ரிய போட ஏற்பாடு நடந்தது…ஆனா அவர் நெஷனலிஸ்ட்ல வர இருக்கதால இப்போதைக்கு பதவி ஏதும் எடுக்காம இருக்குமாறு மேலிடத்தில் இருந்து சப்ரிக்கு ரிக்வஸ்ட் போயிருக்கதா கேள்வி…” என்று தகவல் சொன்னார் நயீம் நானா…

” முஸ்லிம் கொங்கிரசுக்குள்ள எப்படியாம் நிலைம…? கேட்டார் கந்தையா அண்ணன் …

” எல்லா கட்சிகள போலவும் அங்கேயும் கொஞ்சம் உள்ளுக்குள்ள பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது… போன கிழமை புத்தளத்தில ஒரு கலியாண வீடு…மாப்பிள்ளை பொத்துவில் ஊர்க்காரர்..அதனால ஹாரீஸ் எம் பி பங்சனுக்கு போனாராம் …தேர்தலுக்கு பிறகு நடந்த கட்சிக் கூட்டங்களில ஹாரீஸ் கலந்து கொள்ளேல்லத் தானே… அண்டைக்கு புத்தள கலியாணத்துக்கு லீடர் ஹக்கீம் வந்திருந்தாராம்…ஹா.. எப்படி ஹாரீஸ் ..உங்கட கவர்ன்மென்ட் தானே வந்திருக்கு எண்டு ஜோக் அடித்தாராம் ஹக்கீம் …இல்லையில்ல இது எண்ட கவர்ன்மென்ட் இல்ல…ஆனா எங்கட கவர்ன்மெண்டா மாத்தியிருக்கலாம் எல்லாம் கோட்டை விட்டுட்டம் …எண்டு பதில் கொடுத்தாராம் ஹாரீஸ்… இனி புது வியூகங்கள அமைச்சு செய்ய பேசணும் எண்டு ரெண்டு பேரும் பேசி இருக்காங்களாம்…” என்று உள்ளக தகவல்களை சொன்னார் நயீம் நானா…

” சஜித் பிரேமதாச கொழும்பில எலெக்சன் கேக்க ஐடியா பண்ணியிருக்காராம்…ஆனா ரணில் அதுக்கு உடன்படேல்லையாம் …இம்முறை சுதந்திர தின தேசிய விழாவ சுதந்திர சதுக்கத்தில நடத்தப்போற அரசாங்கம் இனி கொழும்பு மாவட்டத்தை கையில வச்சிருக்கிற வியூகத்த வகுத்திருக்காம் …முன்னாள் மேயர் ஒமர் காமில் தாமரை மொட்டில கொழும்பில எலெக்சன் கேக்கப்போறதா தகவல்…முன்னாள் மேயர் இப்போதைய கவர்னர் முஸம்மில் குருநாகலில எலெக்சன் கேக்கப் போறாராம்…போற போக்கைப் பார்த்தா இந்த முறை தேர்தல் ரணகளமா இருக்கும்…” என்றார் கந்தையா அண்ணன்…

” இந்திய பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றுக்கு போகும்போது படி ஏறும்சமயம் வழுக்கி விழுந்த வீடியோ இணையங்களில உலாவிச்சே …இங்கயும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.ப்ரைமினிஸ்டர் மஹிந்த இரத்தினபுரிக்கு போன கிழமை ஹெலியில ஏறப் போகும்போது படியில் தடக்கி விழப் பார்த்தாராம்..உடனே எயார்போஸ் ஆக்கள் பாஞ்சு அவரை பிடிச்சு போட்டாங்கள்…” என்று பண்டா ஐயா கொசுறுத் தகவலை சொன்னார்…

”ஜனாதிபதி ஐயா இப்போ திடீர் திடீரென சில அமைச்சுக்களை பார்க்க போக ஆரம்பிச்சுட்டார்…மினிஸ்டர்மாருக்கு சொல்லாம கொள்ளாமல் அவர் செல்வது தான் மேட்டர்….அதேபோல மேலதிகநேர கொடுப்பனவை நிறுத்த ஓடர் போட்டிருக்காராம்…ஒரு திணைக்களம் ஒன்றில ஓவர்டைமா மாதம் 15 கோடி கொடுபடுதாம்…உடனே அதை நிப்பாட்ட சொல்லி ஓடர் போயிருக்குது …இனி மினிஸ்டர்மார் கெபினெட் பேப்பர வாசிக்காம கெபினெட்டுக்கு வரக்கூடாது என்றும் ஓடராம் …சப்ஜெக்ட் தெரியாம வந்து போறதில அர்த்தம் இல்லையென்று தானாம் அந்த ஓடர்…. இதைவிட.. அரசியல்வாதியோட கையாள் ஒருவர் அரிசி இறக்குமதி செய்யப் போய் மாட்டி நிற்கிறாராம்…இனி தனியார் ஆக்கள் இறக்குமதி செஞ்சு கொமிசன் அடிக்கிற கேம் நடக்காதெண்டு சொல்லிப்போட்டாராம் பிரசிடெண்ட்…” என்றார் கந்தையா அண்ணன் ..

வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் ஏனாம் தாமதம் ? கேட்டார் நயீம் நானா…

”சார்ள்ஸ் அம்மையார நியமிக்க கெபினெட் ஓகே சொல்லியாச்சு…ஆனா அவவுக்கு ஒரு சின்ன சிக்கல் ..அமைச்சின் செயலாளரா அவ எப்பொய்ண்ட் ஆகி ஒரு மாசம் முடிஞ்சா தான் அவாக்குரிய பென்ஷன் அந்த செயலாளர் சம்பளப்படி கிடைக்கும்..வற கிழமையோட அந்த ஒரு மாதம் முடியத்தான் அவ அங்க விடுப்பு பெறுவா…இப்போவே ஆளுனரா பதவி எடுத்தா இப்போ வகிக்கும் செயலாளருக்குரிய பென்ஷன் பிறகு கிடைக்காது…வாற கிழமை அவ செயலாளர் பதவிய துறந்து கவர்னரா பதவி எடுப்பா…வடக்கில ஆளுனரா வார முதல் தமிழ் பெண்மணி அவா…” என்று அதனை விளக்கினார் கந்தையா அண்ணன்…

‘சரி…கிளம்புவம் ….என்று நயீம் நானா கூற புஞ்சிபண்டாவும் எழுந்தார்… கந்தையா அண்ணன் கடையை கூட்டி சுத்தம் செய்ய தும்புத்தடியை தேடினார்…