பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 16 மழை தூறலுக்கு மத்தியிலும் கடையை திறந்து பொருட்களை ஒதுக்கிக் கொண்டிருந்தார் கந்தையா அண்ணன்…

பெட்டிக்கடைப் பேச்சு – 16

மழை தூறலுக்கு மத்தியிலும் கடையை திறந்து பொருட்களை ஒதுக்கிக் கொண்டிருந்தார் கந்தையா அண்ணன்…

நயீம் நானாவும் புஞ்சிபண்டாவும் கடையை எட்டியவாறு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

‘சைக்கிளை விட்டுப் போட்டு நடந்தே வந்தம்…எப்படி கந்தையா அண்ணே… பொலிடிக்ஸ் என்ன சொல்லுது….” கேட்டார் நயீம் நானா…

” புஞ்சிபண்டா ஐயே…கியாண்டக்கோ …” என்று பந்தை பண்டாவின் பக்கம் போட்டார் கந்தையா அண்ணன் ….

” மொக்குத் ஸ்பெஷல் நேஹ் மாத்தையோ…எல்லாம் எலெக்சன் நியூஸ் தான்…ஆளாளுக்கு கடும் வேலையில….

மஹிந்த மாத்தயா கோட்டபாயவோட கடும் பிஸி …எலெக்சனில அவங்களுக்கு கூடுதலா ஆதரவு இருக்கதா ஆய்வுகள் சொல்லுறதாம்…எலெக்சன் கருத்துக்கணிப்புகள் பல மாதிரியும் வருது…போன கிழம எலெக்சன் கொமிஷன் தலைவர் ஒரு விஷயம் சொன்னது கவனிச்சிங்களோ….இந்த எலெக்சனில 85 வீத வாக்களிப்பு நடக்குமெண்டு அவர் சொன்னார்… அப்படி நடந்தா கோட்டாவுக்கு கூடுதல் வாக்கு கிடைக்குமெண்டு மஹிந்த க்ரூப் திடமா நம்புது…சரத் பொன்சேகாவுக்கு தமிழ் முஸ்லிம் ஓட்டுக்கள் கிடைச்சத வச்சு ஒரு கணக்கு நடக்குது…அதுபோல வடக்கு கிழக்கில தமிழ் ஓட்டுக்கள் சஜித்துக்கு பெரிசா கிடைச்சாலும் அது பெரும்பான்மையா இருக்காது என்று சொல்லுறாங்க…” என்றார் பண்டா ஐயா

” அது ஏன் அப்படி சொல்லுறாங்க அய்யே ?” கேட்டார் கந்தையா அண்ணன் …

” இல்ல அஞ்சு கட்சிகள் ஒண்டா சேர்ந்து கோரிக்கைகள் கொஞ்சம் முன்வச்சிருக்காங்களே …அந்த கோரிக்கைகள கோட்டா தரப்பில ஏற்கமாட்டாங்க… விமல் வீரவன்ச கூட அத சொல்லியிருக்கார்…அது ஸுவர் தானே…இப்போ அத சஜித் ஏத்தா அவருக்கு சவுத்ல ஓட்டு குறஞ்சு போய்டும்…. ஏற்காட்டி வடக்கு கிழக்கில அவருக்கு பாதிப்பு வரலாம்…அதேபோல பார்த்தீங்களா யூ என் பி சீனியர்மார் யாரும் சஜித்துக்கு பெரிசா ஆதரவை தெரிவிக்காம இருக்காங்க …ஒழுங்கான ஏற்பாடுகள் இல்லாம சஜித் பக்கம் கொஞ்சம் பிரசாரம் மந்த கதியில போகுதாம்….யார் எதை செய்றதெண்டு தெரியாம ஒருங்கமைப்பு வேலைகள் நடக்கிறதால சஜித் தரப்பு கொஞ்சம் அப்செட்டா இருக்குதாம்…ரணிலின்ர அண்ணனோட ரீ என் எல் கூட சஜித்துக்கு எதிரா தான் செய்திகள போடுதாம்….எப்படியோ கடைசியா போன திங்கக்கிழம கட்சியில முக்கியமான ஆக்கள கூப்பிட்ட ரணில் பிரசாரம் ரொம்ப வீக் ஆ இருக்கதா சொன்னாராம்….கோட்டாபய பக்கம் கொஞ்சம் ஆதரவு அலை கூடி இருக்கப்படியால அடுத்த ரெண்டு கிழமைக்குள்ள வேகமா செயற்படாட்டி கோட்டை விட வேண்டி வருமெண்டு சொன்னாராம் ரணில் …” என்று விபரித்தார் பண்டா ஐயா…

நயீம் நானா தனது பங்குக்கு பேச ஆரம்பித்தார்….

” ஒங்களுக்கு தெரியுமா எங்கட முஸ்லிம் மினிஸ்டர் ஒரு ஆள் தான் சஜித்துக்கு கொழும்பில கோல்பேஸ் கூட்டம் நடக்க பண உதவி செஞ்சாரு….ஆனா அந்த மினிஸ்டரையே அங்க பேச விடல …அவர் பேசினா சிங்கள ஒட்டு குறைஞ்சிடுமாம்….இப்பவே இப்படி கொண்டிஷன் போடலாமா….மறுபக்கம் சஜித்தோட நிக்கிற முஸ்லிம் கொங்கிரசுக்குள்ள ஹரீஸ் இன்னும் செட்டில் ஆகெல்லையாம்..காத்தான்குடி கூட்டத்துக்கு வரசொல்லி லீடர் ஹக்கீம் ஹாரீச கேட்டாராம்…ஆனா ஹாரீஸ் போகேல்லையாம்…சஜித்துக்கு ஆதரவா மேடைகள்ல பேசமாட்டன் எண்டு ஒரே போடு போட்டுட்டாராம் ஹாரீஸ்….ரீ என் ஏ சஜித்துக்கு ஆதரவு கொடுக்கிறது சும்மா இல்ல…வெளங்கும் கொஞ்சம் சொணங்கும் … எண்டு ஹாரீஸ் சொன்னாராம் ” என்று நயீம் நானா சொல்லி முடித்தார்…

” தொண்டமான் நல்ல நேரம் ஒண்ட பார்த்து தான் நேத்து மஹிந்த தரப்போட ஒப்பந்தம் போட்டாராம்…இந்தியாவில இருந்து சுபநேரம் பார்த்து கொடுத்ததுக்கு ஏத்தபடிதான் தொண்டா சைன் பண்ணினாராம்…மலையகத்தில தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் தொண்டமான் அணிக்கும் தான் பைட் இருக்கு…ஆனா ரெண்டு தரப்பும் அப்பாவி தொழிலாளர் சம்பள பிரச்சினைய வச்சு தான் அரசியல் நடத்துறாங்க..மக்களுக்கு ஒண்டும் நடந்ததா தெரியேல்ல…” என்று குறைபட்டார் கந்தையா அண்ணன்..

” அதென்ன கோட்டாபய ராஜபக்ச பெயரை வாக்குசீட்டில தேர்தல் ஆணைக்குழு சரியா பிரிண்ட் பண்ணேல்லையாமே …எலெக்சன் கொமிசனுக்கு முறைப்பாடு பண்ணியிருக்காங்க மஹிந்த க்ரூப்….” கேட்டார் நயீம் நானா..

” போன ஞாயிறு காலைல தமிழ் பத்திரிகை ஆக்கள மஹிந்த ராஜபக்ச சந்திச்சார்…அப்போ இந்த பெயர் பிழைகள பத்தி ஒருத்தர் மஹிந்தட்ட சொல்ல மஹிந்தவும் உடனே எலெக்சன் கொமிஷனருக்கு போனை போட்டு இத பத்தி கேட்டராம் …பிறகு அங்க இருந்த ஒரு ஜேர்னலிஸ்ட் ஒரு ஆளிட்ட போனை கொடுத்த மஹிந்த அந்த தமிழ் பெயர் எப்படி வரோணும் எண்டு விளக்க சொன்னாராம்..அதுக்குப் பிறகு தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு விளக்கம் வழங்கப்பட்டதாம்… ” விபரித்தார் பண்டா..

” அதென்ன… எங்கட சுமந்திரன் எம் பிய சந்திச்ச கதை ஒண்டையும் மஹிந்த சொன்னாராமே …” கேட்டார் கந்தையா அண்ணன் …

” சுமந்திரன் எம் பி தன்னை சந்திச்சதா சொன்னாலும் அது உத்தியோகபூர்வமாக நடந்த சந்திப்பில்ல .ஆனா கூட்டமைப்போட ஒப்பீஷியலா சந்திப்பு நடக்கும் எண்டு மஹிந்த சொன்னாராம்…” என்று அதற்கு பதிலளித்தார் பண்டா ஐயா…

” மஹிந்த ராஜபக்சவும் – மைத்திரியும் நேத்து ப்ரெசிடெண்ட் ஒப்பீஸ்ல ரொம்ப நேரம் தனிய பேசினாங்களாம் ….கோட்டாவுக்கு கூடுதல் ஆதரவெண்டு இன்ரெலிஜெண்ட் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறதா இந்த சந்திப்பில சொன்ன மைத்ரி கோட்டாவுக்கு 55 வீதமும் சஜித்துக்கு 35 வீதமும் இருக்கதா சொன்னாராம்…யாழ்ப்பாணத்தில போன கிழம ஆயுதங்கள் கிடைச்ச சம்பவம் எல்லாம் இருக்கிறபடியால பாதுகாப்பு பத்தி இங்க பேசப்பட்டிருக்கு…கூடுதலான பாதுகாப்ப கோட்டாவுக்கு கொடுக்க ஓடர் போட்டிருக்காராம் மைத்ரி….ஆனா இந்த புள்ளி விபரங்கள் முன்ன பின்ன ஆகலாம்…சந்திரிகா அம்மா பீல்டில இறங்க போறா…குமார் வெல்கம போல ஆக்கள சேர்த்து அவ பிரசாரம் பண்ணினா அது மஹிந்த தரப்புக்கு பாதிப்பை கொடுக்கும்….மறுபக்கம் சஜின் வாஸ் குணவர்தன ராஜபக்ச குடும்ப சொத்து ரகசியங்கள் தெரிஞ்ச ஒரு ஆள்.அவர் முதலாம் தேதில இருந்து சஜித்துக்கு ஆதரவா மேடைகளில ஏற போறதா தகவல்..அப்படி ஒரு க்ரூப் வெளியே எதிர் பிரசாரம் செஞ்சா மஹிந்த தரப்புக்கு அது பாதிப்ப தரலாம்…” நயீம் நானா விபரித்தார்…

”சிங்கள ஓட்டுக்கள மட்டும் நம்பி இருக்கிறது சரிதானா?அப்படி வெல்லும் வாய்ப்பிருக்கா?” அப்பாவியாக கேட்டார் கந்தையா அண்ணன்…

” ராஜபக்ச கேம்ப் ஐஞ்சு மாவட்டங்களில சிங்கள ஓட்டுக்கள ரொம்ப பீட் பண்ணலாம் எண்டு ஒரு கணக்குப் பண்ணுது… குருநாகல் ,கம்பஹா, மொனராகலை, அனுராதபுரம் ,பொலநறுவை மாவட்டங்கள் தான் அந்த அஞ்சு…பிறகு மாத்தளை ,அம்பாந்தோட்டை ,இரத்தினபுரி மாவட்டங்களில கூடுதல் ஒட்டு கிடைக்கலாமென நினைக்கிறாங்க…அப்படி அந்த மாவட்டங்களில் கூடுதல் வாக்கு கிடைச்சா தமிழ் பகுதிகளில சஜித்துக்கு கிடைக்கிற ஓட்டுக்கள இங்க சமப்படுத்தலாம்னு நினைக்கிறாங்க…மறுபக்கம் நூத்துக்கு நூறு வீதம் தமிழ் ஆக்களோ முஸ்லிம் ஆக்களோ சஜித்தோட நிக்கப் போறதில்ல…அப்படிதான் மஹிந்த தரப்பு யோசிக்குது …” என்றார் பண்டா ஐயா…

”அப்போ மகாவமிசத்த பின்பற்றி தான் இலங்கை அரசியல் இருக்குது எண்டு தம்பி பிரபாகரன் ஒருக்கா தனது உரையில சொன்னது உண்மையா இருந்தா கோட்டாபய தான் வெல்லுவார் … சிங்கள மக்கள் நூத்துக்கு நூறு வீதம் கோட்டா வர வேண்டுமெண்டு ஓட்டுப்போட்டா வேற எப்படி அதனை பார்க்கிறது….?” என்று ஆதங்கத்துடன் சொன்னார் கந்தையா அண்ணன் …

”என்ன அண்ணே… உலக நாடுகள் எல்லாம் என்ன சொல்லுது…அமைதியா இருக்குதே…” கேட்டார் புஞ்சி பண்டா

” போன எலெக்சனில நல்லாட்சியை அமைக்கிறம் எண்டுபோட்டு கைய சுட்டுக்கொண்ட பல நாடுகள் இம்முற அமைதியா இருக்கிறதா கேள்வி…. எல்லா நாடுகளுக்கும் இங்க பிரச்சின …அமெரிக்காவுக்கு சோபா ஒப்பந்த பிரச்சின ….இந்தியாவுக்கு சீனாவின்ர ஆதிக்கம் பத்தின பிரச்சின …அதனால எல்லாம் கொஞ்சம் நிலமைய அமைதியா பார்த்துக்கொண்டிருக்காங்க…உண்மையா தமிழ் ஆக்களுக்கு எதாவது செய்யணும் எண்டு நினைச்சா உந்த நாடுகள் பிரதான கட்சி ஆக்கள சந்திச்சு தமிழர் பிரச்சினைய தீர்க்குறதுக்கு எதாவது யோசனைய தேர்தல் விஞ்ஞாபனத்தில முன்வைங்கோ எண்டு சொல்லலாம் தானே…தமிழன் எக்கேடு கேட்டா என்ன..தங்கட அலுவல் நடந்தாச் சரி ஏன்டா மாதிரி தான் உவங்கள் இருக்கிறாங்கள்…” என்று விசனத்துடன் சொன்னார் கந்தையா அண்ணன் …

”மைத்ரி சேர் கதை என்னவாம்…?” கேட்டார் நயீம் நானா..

” ஜனாதிபதி உத்தியோகபூர்வ மாளிகையில இருந்த தன்னுடைய பொருட்கள் எல்லாத்தையும் பெக் பண்ண சொல்லிட்டாராம் மைத்ரி…அவரோட இருந்த நெருக்கமான ஆக்கள் கூட இப்போ பேச்சு வழக்க குறைச்சு கொண்டனராம்.. பலாலி எயார்போர்ட் திறக்க போன மைத்ரி அங்க சுமந்திரன் எம் பிய கண்டு.. என்னப்பா எங்களை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறீங்களே எண்டாராம்…அதுக்கு சிரிச்சபடி பதில் கொடுத்த சுமந்திரன்… இல்ல எக்ஸெலென்ஸி உங்கள கண்டுகொண்டு தான் இருக்கிறம் எண்டாராம்…ரணிலோட முகம் கொடுத்து ஒழுங்கா பேசெல்லையாம் மைத்ரி…அடுத்த பார்லிமெண்ட்ல தேசியப்பட்டியலில உள்ள போவார் போல…மஹிந்தவோட அதான் டீல் ” என்று அதற்கு பதிலளித்தார் புஞ்சி பண்டா

” அதத்தான் ஐயா எங்கட கண்ணதாசன் அப்போவே சொல்லியிருக்கார் …உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவிட்டால் நிழலும் கூட மிதிக்கும் எண்டு…..அப்போவே இருக்கிற இடத்தில இருந்திருக்கோணும்…” என்று சிரித்தபடி சொன்னார் கந்தையா அண்ணன் …

” சரி நேரமாகுது…அடுத்த சனிக்கிழம சந்திப்பம்..” என்று கூறி நயீம் நானா கூற பண்டா ஐயாவும் அவருடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினார் …