பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 15 “என்ன கந்தையா அண்ணன்… எலெக்சன் என்ன மாதிரி போகுது…” சைக்கிளை நிறுத்தியபடி கேட்டார் நயீம் நானா….

பெட்டிக்கடைப் பேச்சு – 15

“என்ன கந்தையா அண்ணன்… எலெக்சன் என்ன மாதிரி போகுது…” சைக்கிளை நிறுத்தியபடி கேட்டார் நயீம் நானா…. கூடவே பேப்பரை பார்த்தபடி வாங்கில் அமர்ந்தார் புஞ்சிபண்டா…

“ என்ன… ஒரே கலாதியா போகுது… பண்டா ஐயா உங்கட ஆக்களுக்கு என்ன …எல்பிட்டிய தேர்தல் வெத்தின சந்தோசம்…” சிரித்தபடி சொன்னார் கந்தையா அண்ணன்…

“ அது லேசுப்பட்ட கேம் இல்ல.. பாருங்க ஐயே…கவர்ன்மென்ட் நல்லா சம்பளத்த கூட்டி நிவாரணங்களை கொடுத்தும் தபால் வாக்குகள் போயிருக்கு… அத்தோட 17 வட்டாரங்களிலயும் மஹிந்த க்ரூப் வென்றிருக்கு.. அப்போ அதில வந்துருக்கிற சுதந்திரக் கட்சியும் மஹிந்த கட்சியோட சேர்ந்தா அது ஏறுமுகம் தான்…மத்தபடி இது யூ என் பிக்கு கொஞ்சம் தாக்கத்தை கொடுக்கும்… ஆனாலும் சொல்ல ஏலாது…” என்று பதில் கொடுத்தார் பண்டா ஐயா…

“ ஆனா யூ என் பி கூட்டத்தை பார்த்தீங்களோ… அது லேசுப்பட்ட கூட்டமில்ல …” சடாரென பதில் கொடுத்தார் கந்தையா அண்ணன்…

“ அது சரி… கவர்ன்மென்ட் பஸ்கள போட்டு ஆக்கள கூட்டி வந்து நிரப்பினா அது ஒரு தற்காலிக ஜொலி தான்… அப்படி பார்த்தா போன முறை மஹிந்த ஜனாதிபதியா இருந்தப்போ கூட்டம் நிரம்பி வழிஞ்சது… ஆனா வெத்தினாரா… இல்லையே.. சஜித்தோ கோட்டாவோ மக்கள் கூட்டத்த கூட கூட்டி காட்டுறது வெறும் ஷோவாதான் இருக்கும்…” என்றார் பண்டா ஐயா…

“சரி… அப்படி கூட்டம் கூடிய ஒரு இடத்தில ஏன் தமிழ் முஸ்லிம் தலைவர்மார் பேசெல்ல… இங்கயே தைரியமா பேச முடியாத தலைவர்மார் எப்படி சஜித்தோட எதிர்காலத்தில பேசப்போறாங்க..” கேட்டார் பண்டா ஐயா..

“ எல்லாம் பேசத் தான் இருந்தாங்களாம்…கேள்விப்பட்டன்…ஆனா என்னத்த பேசுறது எண்டத்தில கொஞ்சம் யோசனை… சில விஷயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் போட வேணும்… அது பேசி முடிவெடுக்கப்படோணும்…அதுக்குள்ள பேசி ஏதும் சர்ச்சையானா கூடாதெண்டுபோட்டு தான் யாரும் பேசெல்லையாம்… மறுபக்கம் இன்னொரு கதையும் உலாவுது.. மினிஸ்டர்மார் ரிசார்ட் – ஹக்கீம் பேசுற நேரம் ஊளையிட ஒரு கோஷ்டி அனுப்பப்பட்டிருந்ததாம்…அப்படி ஊளையிட்டா அந்த வீடியோவை எடுத்து போட ஒரு க்ரூப் ரெடியா இருந்ததாம்… சோ… அப்படியெல்லாம் முதல் கூட்டத்தில் சர்ச்சை வந்திடக் கூடாதெண்டு தானாம் பேசுறத தவிர்த்தாங்களாம்…” என்றார் நயீம் நானா…

“சரி… அப்படியெண்டா இனி கூட்டங்களிலயும் அப்படி பேச மாட்டாங்களா…?” கேட்டார் கந்தையா அண்ணன்…

“ முஸ்லிம் ஏரியாக்களில மட்டும் முஸ்லிம் மினிஸ்டர் மார் பேசுவாங்க போல… சிங்கள ஏரியாகளில நடக்கிற கூட்டங்களுக்கு போனாலும் முஸ்லிம் மினிஸ்டர்மார் பேசுற வாய்ப்பில்ல…கூட்டணி என்றாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி தான் போகோணும்.. அது எலெக்சன் ஸ்ட்ரெட்டேஜி…” என்று அதற்கு விளக்கமளித்தார் நயீம் நானா…

“ ஓ அப்படி போகுதோ கத… அது சரி ரணில பிரதமரா நியமிப்பீங்களா என்று ஜேர்னலிஸ்ட் ஆக்கள் கேட்டா… இது பார்லிமென்ட் எலெக்சன் இல்ல… ப்ரெசிடெண்ட் எலக்சன் எண்டு சொல்லும் சஜித் எப்படி பொன்சேகாவுக்கு பாதுகாப்பமைச்சர் பதவிய கொடுப்பேன்னு உறுதியளிப்பார் ? கேட்டார் பண்டா ஐயா…

“ கோட்டாபய பக்கம் உள்ள பழைய ஆமி ஆக்கள் கொஞ்ச பேர் பொன்சேகாவோட பேசி வளைச்சு போட்டாங்களாம்… ஏற்கனவே சஜித்த வேட்பாளரா அறிவிக்கிறதில கோபமா இருந்த பொன்சேகா மஹிந்த கோஷ்டிக்கு ஆதரவளிக்க தயாரா இருந்தாராம்… அத கேள்விப்பட்ட சஜித் க்ரூப் பொன்சேகாவை பேசி தாஜா பண்ணியிருக்குது. மலிக் தனியே பொன்சேகாவோட பேசி சமாளிச்சாராம்…. “எனக்கு உங்க உத்தரவாதம் மேல நம்பிக்கை இருக்கு அதனால பப்லிக்கா ஒரு அறிவிப்பை விடுங்க… தேசிய பாதுகாப்புக்கு என்ன விட யார் இருக்கா ?” என்று பொன்சேகா சொல்ல சஜித்தும் பொன்சேகாவும் சமரசமாக ஏற்பாடு செஞ்சாராம் மலிக். கொழும்பில கூட்டம் நடந்த அண்டைக்கு சஜித்தும் பொன்சேகாவும் ஒண்டா சந்திச்சு பேசி களனி விகாரைக்கு போனார்களாம்… அதன் பிறகு தான் அறிவிப்பு வந்ததாம்.. சஜித் பகிரங்கமா அறிவிச்சாராம்..” என்றார் நயீம் நானா..

“பிரேமதாச புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததாகவும் வீடு கட்டிறவருக்கு நாட்ட செய்ய முடியுமா… என்றும் கேட்டவர்தானே பொன்சேகா.. சரி ஓ லெவல் பாஸ் ஆகாத ஒருவர் எப்படி ஜனாதிபதியாகலாம் எண்டு கேட்டவர் ரவி கருணாநாயக்க … எல்லாம் இப்போ ஓகே வா ?” சிரித்தபடி கேட்டார் பண்டா ஐயா…

“ என் மஹிந்தவோட சேரவே மாட்டேன் எண்டு சொன்ன மைத்திரியும்..இந்த கூட்டு நடக்காது எண்டு சொன்ன சுதந்திரக் கட்சி ஆக்கலும் கூட்டணி அமைக்கேல்லையா… அப்படிதான் அரசியலில நிரந்தர நண்பனும் இல்ல நிரந்தர பகையாளியும் இல்ல…” என்று அதற்கு சிரித்தபடி பதில் கொடுத்தார் கந்தையா அண்ணன்…

“ கோட்டாபயவுக்கு எதிரான நீதிமன்ற விசாரணை இனி தேர்தல் முடியும் வரைக்கும் இல்ல கண்டீங்களோ.. அப்பீல் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகும் அதுக்குப் பிறகு நேத்து ராஜபக்ச மியூசியம் கேஸ் தள்ளிப்போட்ட பிறகும் ராஜபக்ச கேம்ப் உற்சாகமா இருக்குதாம்.. அப்பீல் கேஸ் கோர்ட் தீர்ப்பு முடிஞ்ச பிறகு மஹிந்த வீட்டில கேக் வெட்டினாங்க தானே… அப்போ மஹிந்த கோட்டாவ பார்த்து… “ இன்றைக்கு  இலங்கை பிரஜை இல்லையெண்டு கோர்ட்ஸ் சொல்லியிருந்தா நீங்க மிரிஹான தான் போயிருக்கோணும்…” எண்டு சொன்னாராம்… ஏனெண்டா அகதிகள தடுத்து வைக்கிற இடம் மிரிஹானையில தான் இருக்குது.. அதுக்கு சிரிச்சு கொண்டே கோட்டா “இல்லை மஹிந்த அய்யா நான் ஓல்ரெடி மிரிஹானையில தான இருக்கிறன்…” என்று சொன்னாராம்.. கோட்டாட வீடு மிரிஹானையில் இருக்குது அதத்தான் அப்படி சொன்னாராம்..” என்றார் பண்டா ஐயா..

“ சரி… என்னவாம் தொண்டமான் கத… யாரோட சேருவாராம்…?” கேட்டார் நயீம் நானா..

“ அவர் எல்லா பக்கமும் பார்த்து பேசினார்.. சஜித் ஆக்கள சந்திச்சார்.. மஹிந்த ஆக்களோட பேசாம யூ என் பி யோட கூடுதலா பேசினார்.. யோசித்த ராஜபக்ச கலியாண வீடு தாஜ் சமுத்திரால நடந்ததுக்கு கூட அவர் போகேல்ல.. ஆனா கடைசியா நேத்து பசில் ராஜபக்சவ சந்திச்சு பேசினாராம் தொண்டா… அடுத்த எலெக்சனில இரண்டு தேசியப்பட்டியல் , தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போல நிறைய கோரிக்கைகள தொண்டமான் முன்வைச்சாராம்…நடப்ப பார்த்தா அநேகமா தொண்டா கோட்டாவுக்கு ஆதரவை வழங்குவார் போல.. இருந்தாலும் இண்டைக்கு கொழும்பில இந்திய தூதுவர சந்திக்கிறார் தொண்டமான்…அதுக்கு பிறகு தான் எல்லா முடிவும்…” என்றார் புஞ்சி பண்டா..

“ அப்போ முஸ்லிம் காங்கிரஸ் நிலைமை எப்படி …? ரிசார்ட் எப்படி ? கேட்டார் கந்தையா அண்ணன்..

“ முஸ்லிம் காங்கிரஸ் சஜித்துக்கு சப்போர்ட் பண்ணினாலும் அம்பாறை எம் பி ஹாரீஸ் தேர்தல் வேலைகள கவனிக்காம இருக்கிறதா கட்சித் தலைமை கவலைப்படுதாம் .. இது விஷயத்தில ஹரீஸூக்கும் ஹக்கீமுக்கும் இடையில வாய்த்தர்க்கம் கூட ஏற்பட்டதா கேள்வி.. எத்தனையோ முஸ்லீம் பொடியங்க சிறைக்குள்ள இருக்காங்க.. பாதுகாப்பமைச்சர அறிவிக்கிற சஜித்துக்கு அப்பாவி பொடியன்கள விடுவிக்க முடியும்னு அறிவிக்க முடியாதா? கல்முனை பிரதேச செயலகம் – வடக்கு கிழக்கு  இணைப்புக்கு கூட்டமைப்போட சஜித் இணங்கியிருக்கார். அதனால நிபந்தனை இல்லாம எப்படி சப்போர்ட் பண்றது…? எண்டு தான் ஹாரீஸ் கேக்குறாராம்..பார்ப்போம் என்ன நடக்குதுன்னு……. ரிசார்ட் கூட கொஞ்சம் நிதானமா தான் விஷயங்கள கையாளுறாராம்..” விபரித்தார் நயீம் நானா..

“ அப்போ தமிழ் முற்போக்கு கூட்டணி என்னவாம்..?” கேட்டார் புஞ்சி பண்டா..

“ அவங்க அமைதியா இருக்கிறாங்க.. தொண்டமானை யூ என் பிக்குள்ள வர விடாம தடுத்திட்டாங்க.. மறுபக்கம் மினிஸ்டர் திகாம்பரம் தீபாவளி முற்பணமா தோட்டத் தொழிலாளருக்கு ஐயாயிரம் ரூபா கொடுக்க ஒரு கெபினெட் பேப்பர் போட்டிருக்காராம்.. அடுத்த கிழம அது பாஸ் ஆகினா மக்களுக்கு கொடுக்கப்படுமாம்.. எதோ மக்களுக்கு நன்மை நடந்தா சரி…” என்றார் கந்தையா அண்ணன்…

“ஹிஸ்புல்லாஹ் தனிய போட்டியிட்டு கோட்டாவுக்கு சப்போர்ட் பண்ணலாம் எண்டுபோட்டு அதிருப்தியா இருக்கிற வியாழேந்திரன சஜித் பக்கம் இழுக்க ஒரு பேச்சு நடக்குதாம்… ஆனால் அப்படி மாறப்போறதில்லையெண்டு வியாழேந்திரன் மஹிந்த பக்கத்துக்கு உறுதியளிச்சிருக்காராம்..” சொன்னார் புஞ்சி பண்டா…

“ மைத்ரியோட கதை என்ன ?” சிரித்தபடி கேட்டார் கந்தையா அண்ணன்…

“ மஹிந்தவுக்கு சப்போர்ட் பண்ண படியா சந்திரிகா செம பிரெஷர போடுறாவாம்.. ஆனா இந்த முடிவ எடுக்காட்டி நானும் நீங்களும் தான் சுதந்திரக் கட்சியில இருக்கோணுமெண்டு சந்திரிகாவுக்கு மைத்ரி சொல்லிப்போட்டாராம்… எப்படியோ அந்தம்மா கேமை கேக்க போகுது…மறுபக்கம் அவர் தேர்தலில நடுநிலை வகிச்சதுக்கும் காரணம் இருக்குதாம்… மஹிந்த ஆக்கள் தேர்தல் மேடைகளில இந்த அரசாங்கத்த விமரிசிச்சா தனக்கு தர்மசங்கடம் தானே.. அரசின் தலைவர் தானே.. அதான் ஒதுங்கி இருக்காராம்.. அடுத்த பார்லிமெண்ட்ல தேசியப்பட்டியல் ஊடா வந்து ஸ்பெஷல் மினிஸ்டர் போஸ்ட் ஒண்ட எடுக்க போறாராம்.. அதுக்குள்ள சரத் பொன்சேகாவ பாதுகாப்பமைச்சரா போடப்போற சஜித்தின் அறிவிப்பு அவருக்கு கடுப்ப ஏற்படுத்தியிருக்காம்… தான் வேணாம் எண்டு ஒதுக்கி வச்ச ஆள இப்படி போட போறதா சொன்னது தனது ஆதரவு கிடைக்காதனாலே சஜித் செஞ்ச வேலை எண்டு கருதுறாராம் மைத்ரி.. இனி அவரும் எதோ தன்பங்குக்கு பேசுவார்..” என்று அதற்கு பதில் கொடுத்தார் புஞ்சிபண்டா..

“சரி… கிளம்புவம்… அதுக்கு முதல் ஒரு மேட்டர்… யோஷித்தவின்ர கலியாண வீட்டில ராஜபக்ச குடும்ப உறவினர் ஒரு ஆள் பசில் ராஜபக்சவை சந்திச்சு கட்சி அமைப்பாளர் பதவி ஒன்ற கேட்டு செமையா வாங்கிக் கட்டிக் கொண்டாராம்… தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க எல்லாருக்கும் இனி பதவி குடுக்க முடியா… பட்டது போதும் என்னோட இருக்கிற பொடியன்கள பகைச்சு எதையும் செய்ய மாட்டேன்.. இப்படித்தான் தெரிஞ்ச ஒரு அரசியல்வாதி ஒரு மாவட்ட அமைப்பாளர் பதவிய கேட்டு அவருக்கு கொடுத்தோம்.. போன எங்கட ஆட்சியில அவர் அந்த ஊர்ல ஒரு நாள் ஆற்றில அரைநிர்வாணமாய் குளிக்க மக்கள் ஆத்திரப்பட்டு அந்த ஊர் வாக்குகளே இல்லாம போனது…அந்த தவற இனி செய்யமாட்டேன்..” என்று போட்டாராம் பசில்.. அந்தாள் திரும்பி பேசாம போய்ட்டதாம்..எல்லாமே பாடம் தான்…” என்று சிரித்தபடி சொன்னார் நயீம் நானா…

“ சரி அடுத்த சனிக்கிழமையும் வாங்கோ..” என்று கூறியபடி கந்தையா அண்ணன் வெற்றிலையை துப்பவும் பண்டாவுடன் நயீம் நானா புறப்படவும் நேரம் சரியாக இருந்தது…

 

( Cartoon – Mani SriKanthan )