பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 14 ”என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே….” என்று பாடியவாறு பேப்பர் கட்டுக்களை கந்தையா அண்ணன்…

பெட்டிக்கடைப் பேச்சு – 14

”என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே….” என்று பாடியவாறு பேப்பர் கட்டுக்களை கந்தையா அண்ணன் அடுக்கிக் கொண்டிருக்க நயீம் நானாவும் புஞ்சிபண்டாவும் சைக்கிளில் வந்து கடைவாசலில் இறங்கினர்.

” என்ன பண்டா ஐயா கோர்ட்ஸ் பக்கம் போயிருந்தீங்க போல…ஆளையே காணேல்ல …என்று பேச்சைக் கொடுத்தார்…கந்தையா அண்ணன்..

”ஒவ் ஒவ்…புள் பிஸி …வெட கொடாய்…. போய் பார்க்கத்தானே வேணும்….” என்று அதற்கு வெற்றிலையைத் துப்பியபடி பதிலளித்தார் பண்டா…

” என்ன தான் நடந்தது வாப்பா அந்த கேஸ்… கோட்டாவுக்கு சான்ஸ் இல்ல எண்டு தான சொன்னாங்க… பிறகு எப்படி இப்படி வந்தது…..?” நயீம் நானாவும் ஆர்வத்துடன் கேட்டார்….

” கோட்டாவுக்கு பிரஜாவுரிம ஸ்ரீ லங்கால இல்ல எண்டு கோர்ட்ஸ் அறிவிக்கோணும்…அதானே கேட்டாங்க….இதில முக்கியமா ரெண்டு விஷயங்கள கோர்ட்ஸ் பார்த்ததா கேள்வி…ஒண்டு …அவருக்கு ஏற்கனவே அமெரிக்க சிட்டிசன்சிப் கென்சல் ஆகியிருக்கு …. அப்போ இப்போது அவர் இலங்கை பிரஜை இல்லை எண்டு அறிவிச்சா… அவருக்கு எந்த நாடும் இல்லாத அகதி ஆளாகிடுவார்…. அப்போ ஒன்று அவர தடுப்பு முகாமுக்கு அனுப்பனும் அல்லது சிட்டிசன்சிப் கொடுக்கணும்…

இரண்டாவது…. கோட்டா இலங்கை பிரஜை இல்லை எண்டு அறிவிச்சா அங்கேயும் ஒரு சிக்கல் இருக்கு…
அவர் பாதுகாப்பு செயலாளரா இருந்தவர்…அந்த பதவியானது கெபினட் ,பார்லிமென்ட் எல்லாத்திலயும் எப்ரூவ் பண்ணி தான் கொடுத்திருக்கு…இலங்கை பிரஜை ஒரு ஆள் தான் அந்த பதவியை வகிக்கலாம்….சரி…கோட்டா இலங்கை பிரஜையாக அப்போ இருக்கேல்ல எண்டு இப்போ கோர்ட்ஸ் சொன்னால்… கோட்டா செயலாளரா இருந்து பல நாடுகளோட செஞ்ச ஒப்பந்தங்களுக்கு என்ன நடக்கும்? இராணுவ பயிற்சி ,பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்கள செஞ்ச ஒரு ஆள் இலங்கை பிரஜை இல்லையென்று இப்போ தீர்ப்பு வந்தா அந்த ஒப்பந்தங்கள் கென்சல் ஆகிடுமா? அது தனிநபர் ஒப்பந்தம் இல்லாட்டியும் கூட கையொப்பமிட்ட ஆள் இலங்கை பிரஜை இல்ல…அவர் அமெரிக்க பிரஜையாக அப்போது இருந்தார் எண்டா அதுவும் சிக்கல் தானே….இது ரெண்டையும் யோசிச்சு தான் கோர்ட்ஸ் ஒரு முடிவுக்கு வந்திருக்கோணும்….” என்று நீட்டி முழங்கினார் பண்டா ஐயா ..

” அதுவும் சரிதான்…இந்த கேசில கோட்டா தோல்வியடைஞ்சா அவர வச்சு செய்ய யூ என் பி ஆக்கள் பார்த்தாங்க…ஆனா எல்லாம் மாறிடுச்சே…” என்று அதற்கு பதிலளித்தார் கந்தையா அண்ணன்..

” எனக்கென்னவோ இது சஜித்துக்கு எதிரா செஞ்ச சதி போலவே இருக்குது…. வழக்கு போட்ட ரெண்டு ஆட்களும் ரணிலுக்கு நெருக்கமான ஆக்கள்… கோட்டாவுக்கு எதிரா தீர்ப்பு வராதெண்டு தெரிஞ்சும் இவங்கள் போட்டு ஒரு ஆதரவு அலைய உருவாக்கியிருக்காங்களோன்னு நினைக்காத தோணுது… அதிலயும் காமினி வியாங்கொட பிரான்ஸ் நாட்டு பிரஜையாம்..இப்படியான ஆக்கள போட்டு கேஸ அபுல் பபுல் ஆக்கி இப்போ தேவையில்லாத வேலைய செஞ்சிருக்காங்க…சஜித் அலை இப்போ ஒருபக்கம் ஒதுங்க இப்போ கோட்டா சுனாமி அத அடிச்சிட்டு போயிட்டுது …” என்று சலிப்புடன் சொன்னார் நயீம் நானா…

” எப்படியோ சமல் ராஜபக்சவ போட்டது ஏனாம்..? மஹிந்த க்ரூப் பயந்து போய் தானே போட்டது?” கேட்டார் கந்தையா அண்ணன்…

” அதுக்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்குது…கோட்டாவோட கேஸ் பாரமா இருக்கும்னு நினைச்ச மைத்ரி… மஹிந்த தரப்புக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினாராம்…கோட்டாவுக்கு ஏதும் கேஸ் ஆகினா பொது வேட்பாளரா தான் நிற்க தயாரெண்டும் கட்டுப்பணத்த கட்டி வைக்கவா என்றும் கேட்கப்பட்டதாம்..இதென்னடா வம்பாப் போச்சு எண்டு நினைச்சு தான் அலறியடிச்சுக் கொண்டு போய் சமல் ராஜபக்ச பெயரில கட்டுப்பணம் கட்டினாங்களாம் மஹிந்த ஆக்கள்….ஏற்கனவே கை சின்னத்தில அல்லது பொதுச் சின்னத்தில போட்டி போட்டா ஆதரவு தரலாமென மஹிந்தவுக்கு சொல்லியிருந்த மைத்ரி கப்பில கடா வெட்ட பார்த்திருக்கார் ..அதுவும் பெய்லியரா போச்சு….” என்று சிரித்தபடி சொன்னார் பண்டா ஐயா…

” எப்படியோ மைத்ரி இண்டைக்கு ஒரு முடிவை எடுக்கத் தான வேணும்? நேத்து இரவு ஒரு கூட்டம் நடந்ததாமே…?” கேட்டார் கந்தையா அண்ணன்..

” ஆமா …கட்சி ஓர்கனைஸர் ஆக்கள ஜனாதிபதி மாளிகையில சந்திச்ச மைத்ரி… அங்க பேசும்போது ரணிலுக்கு செம டோஸ் கொடுத்தாராம்… யூ என் பி சம்மேளனத்தில ஹேமா பிரேமதாச கைய பிடிச்சு கொண்டு போனாரே ரணில்…அதே உலக மகா நடிப்பு எண்டு சொன்னாராம் மைத்ரி…தன்னோட தாயாரை ஒரு நாலாவது பன்சலைக்கு கையை பிடிச்சு கூட்டிக் கொண்டு போயிருப்பாரா ரணில்…இதெல்லாம் நாடகம்…சஜித் வென்றாலும் எக்ஸக்கட்டிவ் பிரெசிடென்சி முறைய இல்லாமலாக்கி எக்ஸெக்கட்டிவ் ப்ரைமினிஸ்டர்…அதாவது நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமரா வர ட்ரை பண்ணுறார் ரணில்…அதான் நிபந்தனைகளை போட்டு நிறைவேற்றியிருக்கிறார்…அந்தாளுக்கு பதவி மோகம் ஆட்டுது..அதான் நடிப்பு… என்றெல்லாம் ரணிலை போட்டுத் தாக்கினாராம் மைத்ரி…” என்று அதிரடியாக தகவல்களை சொன்னார் பண்டா ஐயா..

” அப்போ மைத்ரி ஆக்கள் சஜித்துக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்கள் போல..” சடாரெனக் கேட்டார் நயீம் நானா..

” நேத்தைய கூட்டத்தில பேசின சுதந்திரக் கட்சி ஆக்கள் தாமரை மொட்டு சின்னத்தில போறது நல்லா இல்ல…எங்கட கட்சிக்கு மஹிந்த விட்டுக்கொடுப்புக்களை செய்யணும் எண்டு சொன்னாங்களாம் …பைசர் முஸ்தபா ,திலங்க போல ஆக்கள் மஹிந்த தரப்புக்கு சப்போர்ட் பண்ணி பேசினாலும் அவங்க தேசியப்பட்டியலில வந்த ஆக்கள் எண்டபடியா மக்கள் பிரதிநிதிகளிட்ட கேக்கோணும் எண்டு முடிவாகியதாம்..அதனால் இண்டைக்கு இரவு மத்திய குழு கூடுது…அநேகமா இண்டைக்கு முடிவெடுப்பாங்க…மைத்திரியின் தீர்ப்பு தான் இறுதி முடிவு…” என்று அதற்கு விளக்கமளித்தார் பண்டா ஐயா…

”எனக்கென்னவோ மைத்ரி சொல்றதிலயும் ஒரு நியாயம் இருக்கு…திடீரென ஹேமா பிரேமதாசாவ மேடைக்கு கூட்டி வந்த ரணில் ஒரு விளையாட்ட காட்டியிருக்கலாம்…எல்லாமே ராஜபக்ச பெமிலி ராஜபக்ச பெமிலி எண்டு சொல்ரீங்களே..இதோ இப்போ சஜித்தும் அப்படித்தான் …மேடையில அம்மா…முன்வரிசையில் மனைவி..அக்கா… சொந்தக்காரங்க எண்டு ஐவரும் குடும்ப அரசியல நடத்தவே ரெடி ஆகுறார் மஹிந்த போல எண்டு காட்டவும் ரணில் யோசிச்சிருக்கலாம் இல்லையா…” என்று சத்தமாக சிரித்தபடி சொன்னார் நயீம் நானா..

” நானா..காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்னு கேள்விப்பட்டிருக்கீங்களா..அதுபோலத்தான் உங்கடையும் மைத்ரியிடயும் நினைப்பு… நல்லதா நினைங்கப்பா..” என்று அதற்கு மறுத்தான் கொடுத்தார் கந்தையா அண்ணன் …

”என்னவாம் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கள்…முஸ்லிம் காங்கிரஸ் என்ன நிலைம..ரிசார்ட் ஐயாட சத்தத்தையே காணேல்ல… ” கேட்டார் பண்டா ஐயா..

” தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கள் சஜித்துக்கு ஆதரவு கொடுக்க தீர்மானிச்சாச்சு…மறுபக்கம் தொண்டமான் யூ என் பி உள்ளே வர பார்க்குறார்… ஆனாலும் அவங்க அத பெரிசா எதிர்ப்பாங்களான்னு தெரியேல்ல..ஏன்னா.. இப்போ எல்லாரோட ஆதரவும் தேவைன்னு மலிக் சொல்லி இருக்காராம்… மறுபக்கம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள்ள ஹாரீஸ் எம் பி கொஞ்சம் அதிருப்தியா இருக்காராம்…சஜித்தோட நடந்த சந்திப்பில் கூட அவர் பெரிசா சந்தோசமா இருக்கேல்லையாம்…எங்கட மக்களுக்கு பிரச்சினை இல்லையா..சஜித்துக்கு ஏன் நிபந்தனையில்லா ஆதரவு கொடுக்கோணும் என்ற நிலைப்பாட்டில ஹாரீஸ் இருக்காராம்… மறுபக்கம்… நிபந்தனையில்லாம சஜித்துக்கு ஆதரவு கொடுக்கிறதா எண்டுபோட்டு ரிசார்ட் மினிஸ்டர் யோசிக்கிறாராம்…” என்று விபரித்தார் நயீம் நானா…

” அப்படித்தான் … கட்சிகளுக்குள்ள பல கருத்துக்கள் இருக்கும்..எல்லாம் பேசித்தான் தீர்க்கோணும்..கடைசியா கட்சி எடுக்கும் முடிவுக்கு யாரும் கட்டுப்படோணும்…” என்று அதற்கு பதிலளித்தார் கந்தையா அண்ணன்…”

” போன செவ்வாய்க்கிழம.. மஹிந்தவ சந்திக்க போனாராம் டக்ளஸ் எம் பி… அங்க முன்னாள் மினிஸ்டர் ஜயலத் ஜெயவர்தனாவோட மகன் காவிந்த ஜயவர்தன மஹிந்தவோட நிண்டத கண்டு டக்ளஸ் அதிர்ந்து போய்ட்டாராம்…என்னடா இந்த அரசியல் குழப்பத்தில இது என்ன எண்டு டக்ளஸ் யோசிச்சுக் கொண்டு நிக்க..அவர் கிட்ட வந்த காவிந்த எம் பி… சேர்…எனக்கு 26 ஆம் திகதி கல்யாணம்…அதுக்கு கார்ட் வைக்கத் தான் இங்க வந்தன் …உங்களுக்கும் கார்ட் வைக்க வர இருக்கிறன் எண்டு சொன்னாராம்… அதுக்கு உடனே வாழ்த்த தெரிவிச்ச டக்ளஸ்.. ஜயலத் ஜெயவர்தனவுக்கும் தனக்கும் இருந்த தொடர்புகள காவிந்தவோட பகிர்ந்து கொண்டாராம்…” என்று உள்வீட்டு தகவலை பகிர்ந்துகொண்டார் பண்டா ஐயா…

”தொண்டமானின் நிலைமை என்ன? ” கேட்டார் நயீம் நானா…

” சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகம் தொண்டமான் கோட்டாபயவை தன்னோட மகன் ஜீவன் தொண்டமானுடன் போய் சந்திச்சாராம்.. பல விஷயங்களை பேசினாலும் ஒரு முடிவில்லையாம்…இப்போ இந்தியாவில சிகிச்சை எடுக்கிற தன்னோட மைத்துனர பார்க்க போயிருக்கிற தொண்டமான் திங்கள் நாட்டுக்கு வருகிறாராம்…அண்டைக்கு கட்சி கூட்டத்த கூட்டி ஒரு முடிவ எடுப்பாராம்..முந்தாநாள் வரை சஜித் பக்கம் நிண்ட தொண்டா நேத்து கோட்டாவுக்கு சார்பா தீர்ப்பு வந்த பிறகு இப்போ கோட்டா பக்கம் போக பேசுறதா தகவல்…” எண்டு விபரம் சொன்னார் கந்தையா அண்ணன் ..

” எப்படியோ வடக்கு கிழக்கு புத்திஜீவிகள் ஒண்டா சேர்ந்து பொது தமிழ் வேட்பாளர் ஒருவர போட போறாங்களாம்…பேச்சு நடக்குது.. இண்டைக்கு முடிவு தெரியவரும்…ஏற்கனவே இந்த யோசனைய சம்பந்தன் ஐயாட்ட சொல்ல அவர் அதுக்குரிய பதில சொல்லாதபடியால இப்போ இந்த ஏற்பாடு நடப்பதா கேள்விப்பட்டன்..” என்று கூறியபடி புறப்படத் தயாரானார் நயீம் நானா.

” இருங்களேன்…ரீ ஒன்று குடிச்சுட்டு போங்களேன்..’ என்று அவர்களை நிறுத்தினார் கந்தையா அண்ணன் .