பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு -13 “ எலெக்சன் எப்படி போகுது நானா…” சைக்கிளை விட்டு இறங்கமுன் நயீம் நானாவிடம் கேட்டார் கந்தையா அண்ணன்…”

பெட்டிக்கடைப் பேச்சு -13

“ எலெக்சன் எப்படி போகுது நானா…” சைக்கிளை விட்டு இறங்கமுன் நயீம் நானாவிடம் கேட்டார் கந்தையா அண்ணன்…”

சைக்கிளை விட்டு இறங்கியபடி புஞ்சிபண்டாவும் நயீம் நானாவும் வர அரசியல் பேச்சு ஆரம்பமானது…

“ சஜித் வேட்பாளரா போடுற பிரச்சின தீர்ந்துட்டுது.. அதுவும் லேசா முடியல்ல… ரணில் அதுக்குள்ள பெரிசா கேம் ஒண்டு போட்டிருக்காரு…” என்று ஒருவித நமட்டுச் சிரிப்புடன் சொன்னார் நயீம் நானா…

“கொஞ்சம் விவரமா சொல்லப்பா..” என்று அதற்கு பதிலளித்தார் கந்தையா அண்ணன்…

“ கண்டிஷன் எல்லாம் போட்டு ஒருபக்கம் சஜித்துக்கு வேட்பாளர் பதவியை கொடுக்க மறுபக்கம் கூட்டமைப்பு – ஜே வி பி எல்லாம் சஜித்துக்கு எதிரா கேம கேக்க போறாங்க… பிரேமதாச தான் தங்கட பொடியன்கள கொன்று குவிச்சாங்க எண்டு சொல்லி டெமேஜ் பண்ணப்போகுது ஜே வி பி… மறுபக்கம் எழுத்தில உத்தரவாதம் தராட்டி சப்போர்ட் பண்ண மாட்டோம் எண்டு கூட்டமைப்பு சொல்லப்போகுது..மெதுவா பந்த பாஸ் பண்ணிப்போட்டு ரணில் சைலன்ஸா இருக்கார்….” என்று சொல்லிச் சிரித்தார் நயீம் நானா..

“ சரி… எழுத்தில குடுத்தா என்னவாம்.. நீங்க அதத்தான் செய்யப்போறீங்க எண்டு சொன்னா உறுதியா சொல்லலாமே.. அது நம்பிக்கைய கொடுக்கும் தானே…” என்றார் கந்தையா அண்ணன்.

“ நல்ல கத கந்தையா அய்யே… அவரோட அப்பா புலிக்கு ஆயுதம் கொடுத்த போல மகன் இப்போ பெடரல் கொடுத்து இல்லாத பிரச்சினைய உருவாக்குவாரா? ரி என் ஏ வோட அக்ரிமெண்ட் போனா சிங்கள ஆக்கள் குழம்புவாங்க.. இப்போ இருக்க நிலமைல தமிழ் முஸ்லீம் ஓட்டுக்கள விட சிங்கள வோட்டுக்களே அவருக்கு முக்கியம்…” என்று அதற்கு பதிலளித்தார் பண்டா ஐயா…

“ சஜித் கதை என்ன… இப்போ மைத்ரியோட உறவில்லையோ..?” நக்கலாக கேட்டார் கந்தையா அண்ணன்…

“ வேட்பாளரா நியமிக்கப்பட்ட நாள் நைட் மைத்ரிய சந்திக்க போனாராம் சஜித்… குட்லக் எண்டு வாழ்த்தினாராம் மைத்ரி.. எனக்கு சப்போர்ட் பண்ணுங்க எண்டு சஜித் கேக்க… சரி பார்ப்பம் எண்டு சொன்னாராம் மைத்ரி.. கட்சி ஆக்கள் மஹிந்த தரப்புக்கு சப்போர்ட் பண்ண சொல்லிக்கொண்டு இருப்பதால இண்டைக்கு மஹிந்த – கோட்டாவ சந்திச்ச பிறகு முடிவ சொல்லுவாராம் மைத்ரி… அநேகமா கோட்டாவோட செட் ஆகுவார் போல…” என்றார் புஞ்சிபண்டா…

“ சின்ன சின்ன கட்சிகளோட நிலைமை என்னவாம்?..” கேட்டார் நயீம் நானா…

“ பிரதான இரண்டு முஸ்லீம் கட்சிகள்… தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்தோட நிக்குது…
அத்துரலியே ரத்தன தேரர் சஜித்தோட செட் ஆகுற நிலைமை இருக்கு.. முஸ்லீம் மினிஸ்டர்மார் பதவி விலக காரணமா இருந்த.. டாக்டர் ஷிஹாப்தீன் கேசிலயும் சண்டைபிடிச்ச ரத்தன தேரர் உள்ளுக்க வாறது கொஞ்சம் குழப்பமாம்.. முஸ்லீம் காங்கிரஸ் நாளைக்கு இரவு 7 மணிக்கு கட்சியின் விசேட உயர்பீடத்த கூட்டியிருக்காம்..பார்ப்பம்..” என்றார் கந்தையா அண்ணன்..

“ தொண்டமான் நடுநிலை வகிப்பார் போல….” கேட்டார் கந்தையா அண்ணன்…

“ அதை ஏன் கேக்குறீங்க.. சஜித்துக்கு ஆதரவு கொடுக்க மலிக், மங்கள ஆக்களோட தொண்டமான் பேசி ஒரு 30 அம்ச கோரிக்கை முன்வச்சாராம்..ஆனா அது எப்படியோ மினிஸ்டர் திகாம்பரம் காதுக்கு போக அந்தாள் மலிக்க போனில எடுத்து செம டோஸ் போட்டதாம்.. நீங்க சி டபிள்யு சிய எடுங்க நாங்க வேற வழிய பார்க்கிறம் எண்டு திகா சொல்ல மலிக் ஆடிப்போய்…ஐயோ அவசரப்படாதேங்கோ… தொண்டா எங்களுக்கு வேலையில்ல எண்டு போனை வச்சுட்டாராம்… அதுக்குள்ள ஆறுமுகம் கோட்டாவுக்கு போனை போட்டு பேசி யூ என் பியில தன்ன கூப்பிடுறதாகவும் இன்னென்ன கொண்டிஷன் நிறைவேத்தப்படணுமெண்டு விளக்கினாராம்… அது பசில் அண்ணனுடன் கதைக்க வேண்டுமெண்டு கோட்டா போனை வச்சுட்டாராம்… சிறுபான்மை கட்சிகளோட நிலைமை இப்படி கிடக்கு…” என்று சிரித்தபடி சொன்னார் புஞ்சிபண்டா..

“ டக்ளஸ் எம் பி சொன்ன யோசனை ஒண்ட கோட்டாபய ராஜபக்ச பின்பற்றுறாராம்… கூட்டங்களில பேசும்போது “தமில” அல்லது “த்ரவிட” என்று தமிழ் ஆக்கள சொல்லுறது நல்லா இல்லை.. அது திராவிடம் போல இருக்கிறபடியால் தமிழர் என்று சொல்லுமாறு டக்ளஸ் கேட்டாராம்… சரி எண்டுபோட்டு “தமிழர்” எண்டுதானாம் கோட்டா பாவிக்கிறார்..” என்று இன்னொரு தகவலை சொன்னார் கந்தையா அண்ணன்..

“ யோசித்த ராஜபக்சவை திருப்பி கடற்படையில சேர்க்க அனுமதி கொடுத்தது மைத்ரி அவருக்கு வழங்கின கல்யாண பரிசோ..” என்று நயீம் நானா சத்தமாக சிரித்தபடி சொன்னதை கேட்டு புஞ்சிபண்டாவும் நயீம் நானாவும் சேர்ந்து சிரித்தனர்…

“ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..” என்றார் கந்தையா அண்ணன்…”

“ இண்டைக்கு பகல் மஹிந்த – கோட்டா – பசில் ஆக்கள் மைத்ரி ஐயாவ பார்த்திருக்காங்க… நல்ல கூலான மீட்டிங்காம்… பல விஷயங்கள பேசி முடிச்சிருக்காங்களாம்… அநேகமா சுதந்திரக் கட்சிய கூப்பிட்டு ஒரு முடிவ மைத்ரி எடுப்பார் போல… ஆனா அதுவும் லேசுப்பட்டதில்ல..சந்திரிக்கா அம்மா லேசில விடமாட்டா.. ஆனா ஒரு ரெண்டு பேர் தான் அவாவோட நிப்பாங்க…” என்று இன்றைய சந்திப்பை பற்றிச் சொன்னார் நயீம் நானா…

“கூட்டமைப்பு நிலைமை என்னவாம்..?” கேட்டார் புஞ்சிபண்டா…

“ இந்த முறை கூட்டமைப்பு ஆக்கள் கொஞ்சம் கறாரா இருக்கிறாங்க…எழுத்துமூல உத்தரவாதம் தாற ஒருத்தரோடத்தான் அவங்க பேசுவாங்க… இப்போதைக்கு கோட்டாவோ அல்லது சஜித்தோ அப்படி ஒரு உத்தரவாதம் தர தயாரா இல்ல… அப்படியெண்டா மக்கள் விரும்பியபடி தீர்மானம் எடுக்கட்டும் எண்டு விடுவாங்களோ எண்டு தெரியேல்ல…பொறுத்துப் பார்ப்பம்….” என்று அதற்கு பதிலளித்தார் கந்தையா அண்ணன்..

“சரி மழை வரும் போல… பிறகு சந்திப்பம்..” என்று கூறியபடி நயீம் நானா எழும்ப புஞ்சி பண்டாவும் புறப்பட்டார்..