பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 12 !கந்தையா அண்ணன் கடையை திறக்கவும் நயீம் நானாவும் புஞ்சிபண்டாவும் சைக்கிளில் வந்து இறங்கவும் நேரம் சரியாக இருந்தது…

 

கந்தையா அண்ணன் கடையை திறக்கவும் நயீம் நானாவும் புஞ்சிபண்டாவும் சைக்கிளில் வந்து இறங்கவும் நேரம் சரியாக இருந்தது…

“ என்ன பண்டா ஐயா… தேர்தலும் அறிவிச்சாச்சு.. எல்லாம் பரபரப்பா போகுது போல…” ஊதுபத்தியை கொளுத்தியபடி கேட்டார் கந்தையா அண்ணன்..

“ ஜனாதிபதி ஐயா தன்னோட பதவிக்காலம் குறித்து சுப்ரீம் கோர்ட்ல கருத்த கேக்க போறதாம்… அதனால தான் அரக்கப்பரக்க நேத்து எலெக்சன் டேட்ட அறிவிச்சிருக்குறார் மஹிந்த தேசப்பிரிய மாத்தயா… ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்காலம் பத்தி சுப்ரீம் கோர்ட் அனுமதி குடுத்திருக்கும் போது புதுசா ஒரு பொய்ண்ட்ட முன்வச்சு மைத்ரி எதாவது கேம் ஆடுவார் எண்டுதான் மஹிந்த கொமிஷனர் தேர்தல அறிவிச்சிருக்கார்…இப்போ மைத்ரி மாத்தயா சுப்ரீம் கோர்ட் போனா சுப்ரீம் கோர்ட் எலெக்சன் கமிசனிட்ட அபிப்பிராயம் கேக்கும்… நாங்க தேர்தல அறிவிச்சிட்டம்.. சுப்ரீம் கோர்ட் முன்னம் ஒருக்கா குடுத்த தீர்ப்புபடி அறிவிச்சாச்சு எண்டு எலெக்சன் கொமிசன் அதுக்கு பதில் கொடுக்கும்… அப்போ சுப்ரீம் கோர்ட்டால ஒன்னும் பண்ண ஏலாது.. அதான் மேட்டர்…” என்று தனது அரசியல் சாணக்கியத்தையும் அரசியல் தகவலறிந்த ஞானத்தையும் வெளிப்படுத்தினார் புஞ்சி பண்டா…

“ அப்படியோ சங்கதி… எப்படி பார்த்தாலும் மைத்ரி – மஹிந்த பெயர்களுக்கு எப்போவும் ஏழாம் பொருத்தமாத்தான் இருக்குது போல..” என்று நக்கலாக ஒரு நமுட்டுச் சிரிப்பை சிரித்தார் கந்தையா அண்ணன் ..

“இன்றைக்கு ரணில் ஐயா தன்னோட ஆட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள பின்னேரம் 6 மணிக்கு சந்திக்கவிருக்கிறாராம்.. ஒரே ரணகளமா இருக்கும் போல…” சொன்னார் நயீம் நானா..

“ ஆமா.. இன்றைக்கு பெரிய களேபரம் இருக்கு… ஆனா அப்படி சத்தம் போட்டு ரணில மடக்க ஏலாது … சரி இன்றைக்கு ரணில் ஐயா கரு மாத்தியாட பெயர சொன்னா மத்த ஆக்கள் என்ன செய்றது? அவர் வேணாம் தனியே போறம் எண்டுபோட்டு யாரும் சொன்னால் சரி போங்க எண்டு ரணில் விட்டுவிடுவார்.. ஏனெண்டா சஜித் ரீம் தனியே போனா மண்கவ்வும்… அதிலயும் மைத்ரியோட சேர்ந்துபோனா நாடு இருக்கிற நிலமைல சஜித்துக்கு இருக்கிற சப்போர்ட்டும் கிடைக்காது சிங்கள மக்களிட்ட… மறுபக்கம் தமிழ் முஸ்லீம் தலைவர்மார் ரணில பகைச்சா அவங்களுக்கு அடுத்த பார்லிமென்ட் எலெக்சனில பெரிய ஆப்பு வரலாம்.. ஸோ.. மத்த கட்சிகள் தனியே போறது பத்தி ரணில் யோசிக்க மாட்டார்… தமிழ்க் கூட்டமைப்போட ரணில் நெருக்கமா இருக்கிறார்… அதான் தைரியமா கேமை கேக்கிறார்…” என்று விபரித்தார் கந்தையா அண்ணன்…

“ அப்போ ஒரு முடிவு இன்றைக்கு வராதா…?” ஆர்வமாக கேட்டார் நயீம் நானா..

“ இங்க பாருங்க நயீம் நானா… கரு தான் ரணிலோட ஒப்ஷன்… ஊழல் மோசடி இல்லாத ஆள்…அரசியல் நெருக்கடி காலத்தில தைரியமா இருந்த ஒரு ஆள்.. முக்கியமா எக்ஸெகட்டிவ் பிரெசிடென்சி நீக்கப்படோணும் எண்டு சொல்லுறார்…. அதுதான் சஜித்த விட கரு நல்லம் எண்டு ரணில் நினைக்கிறார்… நேத்து எலெக்சன் அறிவிச்ச பிறகு தன்னோட கட்சி ஆட்கள கூப்பிட்டு பேசிய ரணில் பிறகு மிட்நைட் சில மினிஸ்டர்மாருக்கு போனை போட்டு கதைச்சாராம்… திகாம்பரம் மினிஸ்டருக்கு இரவு பன்னிரண்டரை மணி போல போன் செஞ்ச ரணில்- “என்ன சஜித் ஆக்கள் தனியா போற திட்டமோ..? உங்கட திட்டம் என்ன ?” என்று கேட்டாராம். “சஜித்துக்கு தான் சேர் மக்கள் ஆதரவு இருக்குது.. உங்கட கட்சி என்ன முடிவு எடுக்குதோ அதை நாங்க பார்த்துக்கொண்டிருக்கம்” என்று சொன்னாராம் திகா. “ சரி வாங்க பின்னேரம் கூட்டத்தில பேசுவம்..” எண்டு சொல்லி போனை வச்சாராம் ரணில்… சஜித் க்ரூப் தனியே போறத தான் ப்ரைமினிஸ்டரும் வெய்ட் பண்ணி பார்குறார் போல…” என்று விபரித்தார் கந்தையா அண்ணன்..

“ சஜித் மினிஸ்டர் வாழைப்பழ சின்னத்தில போட்டி போட ஒரு ஏற்பாடு நடக்குது.. இன்றைக்கு ஒரு முடிவு கிடைக்காத பட்சத்தில ஆதரவாளர்கள கூட்டி அலரி மாளிகையை முற்றுகையிடவும் சிறிகொத்தவை சுற்றிவளைக்கவும் ஒரு திட்டம் சஜித் தரப்புக்கு இருக்குதாம்… ரணிலை வீட்டுக்காவலில வைக்க யோசனையாம்.. அதேநேரம் பழைய கேஸை காட்டி ரணில ஜெயிலுக்குள்ள போடவும் ஒரு பேச்சு போயிருக்குது.. ஆனா இதெல்லாம் லேசுப்பட்ட வேலையில்ல பாருங்கோ…” என்று தனக்கு தெரிந்த விபரத்தை சொன்னார் நயீம் நானா…

“ நேத்து பார்லிமென்டில் வடக்கு அரசியல் கட்சி தலைவர் ஒருவரை அமைச்சர் நவீன் திசாநாயக்க சந்தித்தாராம்… “மாமா கரு போட்டி போட போகிறார்.. உங்களுக்கு தெரியும்தானே அவர் நீதியான மனுஷன்… தமிழ் மக்களுக்கு தீர்வ கொடுப்பார்… உங்கட சப்போர்ட் வேணும் எண்டாராம்… பார்ப்பம்.. எண்டு அந்த தலைவர் மெதுவா நழுவி வந்துவிட்டாராம்… அப்படிப்பார்த்தா கரு கிட்டத்தட்ட கன்போர்ம் தான்…” என்ற கந்தையா அண்ணன்-
“ நிறைவேற்று அதிகார முறையை இல்லாமலாக்க ஒரு ஏற்பாடு நடந்ததே.. என்னாச்சு…” என்று தொடர்ந்து விடுப்புக் கேட்டார்.

“ அதுக்கு கூட்டமைப்பு ஜே வி பி எல்லாம் சப்போர்ட்… ஆனா முஸ்லிம் காங்கிரஸ் சப்போர்ட் இல்லையாம்.. மறுபக்கம் ரவி கருணாநாயக்க எம் பி மஹிந்த ராஜபக்சவோட போனில் பேசி சப்போர்ட் கேட்டாராம்… ஆனா கடைசி நேரம் வந்து இப்படி கேட்டா நான் என்ன செய்யுறது… கட்சி ஆக்கள் அத விரும்ப மாட்டது எண்டு மஹிந்தவும் கைய விரிச்சு போட்டாராம்… இண்டைக்கு விசேட கெபினெட் கூடி இதப்பத்தி பேசி பார்லிமென்ட்ல விவாதிக்க போறாங்க.. ஆனா அதுக்கு மூன்றிலிரண்டு மெஜோரிட்டி வேணும்.. பிறகே சர்வசன வாக்கெடுப்புக்கு போகலாம்..அநேகமா அதுக்கு வாய்ப்பில்ல…” என்றார் புஞ்சிபண்டா…

“ மஹிந்த நேத்து செமத்தியா மைத்ரிக்கு கொடுத்திருக்கார் டோஸ்…” என்று புதிய சப்ஜெக்ட்டை ஆரம்பித்தார் நயீம் நானா..

“தாமரைக் கோபுர நிர்மாண ஒப்பந்தத்தில இருநூறு கோடி மோசடி நடந்ததா மைத்ரி சொல்லுது… அது பொய்யெண்டு மஹிந்த சொல்லுது.. நேத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதிகாரிகள கூப்பிட்டு மைத்ரி சப்பல் பேச்சு கொடுத்தாராம்.. ஒழுங்கா உண்மைய மட்டும் சொல்லுங்க.. உங்க பேச்சுக்கள நம்பி எப்படி பேசுறது எண்டு பேச்சு கொடுத்தாராம்… உண்மையா அப்படி மோசடி நடந்ததா எண்டு இப்போ தேடப்படுதாம்..” என்று அதனை விளக்கினார் புஞ்சிபண்டா..

“ அது சரி.. அடிச்சவன் 200 கோடியா அடிச்சிருப்பான்.. இதெல்லாம் ரொம்ப குறைஞ்ச தொகையா இருக்கே…” என்று சிரித்தபடி குசும்புக் கடி கடித்தார் கந்தையா அண்ணன்…

“ அது இருக்கட்டும்… முந்தநாள் தோட்டத் தொழிலாளர் பிரச்சினையை பத்தி டக்ளஸ் எம் பி பார்லிமெண்டில் பேசி தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு வெட்கமே இல்லையா? என்று கேட்டிருந்தாரே…நேத்து டக்ளஸ் எம் பியை பார்லிமென்ட்டில் கண்ட திலக்ராஜ் எம் பி “ என்ன தோழரே தடாலடியாக பேசிவிட்டீர்களே.. நாங்கள் சம்பள விடயத்தில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம்..” என்று நட்புடன் சிரித்தபடி சொன்னராம்..அநேகமாக தொழிலாளருக்கு 50 ரூபா கொடுப்பனவு விரைவில் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்….” சொன்னார் கந்தையா அண்ணன்…

“ சரி… புறப்படுவோம்… அதுக்கு முன்னம் ஒரு சின்ன சுவாரஷ்ய விஷயம் ஒன்று இருக்குது..என்று கதையை ஆரம்பித்தார் புஞ்சிபண்டா…

“ முன்னாள் பிரதமர் ஜயரத்ன தனது குடும்ப ஆக்கள் கூட சுற்றுலா போனாராம்… அவரது மகன் அனுராத ஜயரத்ன எம் பி மருமகன் மஹிந்தானந்த எம் பி எல்லோரும் அதில இருந்தாங்களாம்.. ஒரு இடத்தில ஆற்றை கண்டு எல்லோரும் குளிக்க ஆரம்பிச்சதாம்..அப்போ ஆறு ஓரமா உக்கார்ந்திருந்த எங்கட டி எம் ஐயா திடீரென ஆற்றில பாஞ்சு நீந்த முயற்சி பண்ணினாராம்.. வீட்டாக்கள் எல்லாரும் குய்யோ முய்யோ என்று கத்த அவர பாஞ்சு பிடிச்சு கரைக்கு கொண்டு வந்தார்களாம்.. “ நான் திடமா இருக்கேன்.. எனக்கு நீந்த முடியும்..” எண்டு ஆள் சொன்னாலும் உடல் குளிரில் நடுங்கியதால முதலுதவி பண்ணினாங்களாம்..” என்று பண்டா சொல்ல அனைவரும் கொல்லென சிரித்தனர்…

“ இருந்தாலும் தைரியமான மனுஷன் தான் அந்தாள்..” என்று கந்தையா அண்ணன் கூற புஞ்சிபண்டாவும் நயீம் நானாவும் புறப்படத் தயாராகினர்..