பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு -11. ஒண்ணுமே புரியல உலகத்திலே… என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது…” என்று பாடியவாறு கடையை திறந்தார் கந்தையா அண்ணன்..

“ஒண்ணுமே புரியல உலகத்திலே… என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது…” என்று பாடியவாறு கடையை திறந்தார் கந்தையா அண்ணன்..

பேப்பர் கட்டுக்களை அடுக்கிக் கொண்டிருக்கும்போது புஞ்சிபண்டாவும் நயீம் நானாவும் சைக்கிளில் வந்திறங்குவதை கண்ட கந்தையா அண்ணன் “..என்னடாப்பா ஆட்களையே காணேல்ல…நீங்களில்லாம சப்பெண்டு போச்சு…” என்று பேச்சை கொடுத்தார்…

“ இல்லை அண்ணா.. ஒரே வேல.. அதான் வரேல்ல.. நான் வராதபடியா சைக்கிள் இல்லாம புஞ்சிபண்டாவும் வரேல்ல..” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் நயீம் நானா..

“ என்ன பண்டா ஐயா… என்ன தான் நடக்குது நாட்டில…” ஆர்வம் தாங்காமல் கேட்டார் கந்தையா அண்ணன்…

“ என்ன நடக்க இருக்குவா… சஜித் கேஸ் பாரம்.. இண்டைக்கு காலைல மங்கள வீட்டில நடந்த மீடியா கொன்பரன்சால ரணில் ரொம்ப கடுப்பில இருக்கதாம்… எக்ஸக்கட்டிவ் பிரெசிடென்சி சிஸ்டம் நீக்கம் சம்பந்தமா சஜித் சொன்ன கருத்து இப்போ சஜித்துக்கே கேம் ஆகிட்டதாம்…” என்றார் புஞ்சிபண்டா…

“ சரிதானே அண்ணா… நிறைவேத்து அதிகார ஜனாதிபதி முறைய ரத்து செய்றது சம்பந்தமா சயன்டிபிக் முறையில ஆய்வு நடக்கேல்ல… மக்கள் அதுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஆணை வழங்கவில்லை என்று சஜித் சொன்னது சரிதானே..” பதில் கேள்வி கேட்டார் கந்தையா அண்ணன்

“கந்தையா முதலாளி நல்லா கேட்டுக்கொள்ளுங்கோ.. இண்டைக்கு காலையில மங்களட வீட்டில சஜித் நடத்திய பிரஸ் மீட்டிங் முடிஞ்ச பிறகு சீனியர் மினிஸ்டர்மார் கொஞ்ச ஆட்கள ரணில் பார்த்தாராம்… பார்த்தீங்களா சஜித் பேசியதை.. நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேணுமெண்டு தானே போன எலெக்சனில மக்கள் ஆணை கொடுத்தாங்க.. அதுமட்டுமில்ல எங்கட தேசிய மாநாட்டில தீர்மானமும் நிறைவேற்றியிருக்கம்.. இதெல்லாம் தெரியாம உளறியிருக்கிற இவருக்கு பிரசிடெண்ட் எலெக்சனுக்கு நொமினேஷன் கொடுக்கச் சொல்லுறீங்களோ.. தமிழ்க் கூட்டமைப்பு இதுக்கு பிறகு அவருக்கு ஆதரவளிக்குமா… எங்கட கட்சி கொள்கையே தெரியாத டிபியுட்டி லீடர்.. ஐ வில் எக்ஸ்ப்ளெய்ன் திஸ் ரு மிஸ்டர் சம்பந்தன் திஸ் ஈவினிங்.. என்று ரணில் பொரிந்து தள்ளினாராம்…” என்று மூச்சு விடாத குறையாக சொல்லி முடித்தார் புஞ்சி பண்டா..

“ ஓ அப்படி போகுதோ கதை…” என்று கந்தையா அண்ணன் ஒரு பெருமூச்சு விட்டார்..

“ இண்டைக்கு பின்னேரம் தமிழ்க் கூட்டமைப்போட நடந்த சந்திப்பில ஜனாதிபதி பதவிக்கான நிறைவேற்று அதிகாரத்த ஒழிக்கிறது தான் தங்கட கட்சியின் கொள்கை எண்டு றணில் விளக்கினாராம்..” என்றும் மேலதிக தகவலை போட்டுடைத்தார் புஞ்சி பண்டா…

“இன்றைக்கும் கெபினெட் கூட்டத்தில ஒரு யோசனையை ரணில் முன்வைக்க இருந்தாராம்… நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தேவையான 20 வது திருத்தம் செய்யவாம் அது. அதுக்கு அனுமதி கிடைச்சா பிரசிடெண்ட் எலெக்ஷன் நடக்க வாய்ப்பில்ல போல..” என்றார் நயீம் நானா…

“ இன்னுமொரு மேட்டர் இருக்குது… இன்றைக்கு கேபினெட் மீட்டிங் முடிய சஜித் ஆதரவு கட்சித் தலைவர்கள் எல்லாரும் ரணிலிட்ட போய் சஜித்துக்கு ஆதரவா பேச இருந்தாங்களாம்… ஆனால் மினிஸ்டர் மனோ இந்தியாவில இருந்தார்… மினிஸ்டர் திகாம்பரம் கூட்டத்துக்கு போகேல்ல.. ரணிலிட்ட போய் அவங்கட கட்சி விவகாரத்த பேசுறதா எண்டு பல பேர் இப்போ பின்னடிச்சிருக்காங்களாம்…பாருங்க சஜித்தோட இருந்த கூட்டம் இப்போ பின்னடிக்குது.. ஏனெண்டா அடுத்த பார்லிமென்ட் எலெக்சனில நொமினேஷன் மற்றும் நெஷனலிஸ்ட் சீட்டுகளுக்கு ரணில் தான் மனசு வைக்கோணும்..” சிரித்தபடி சொன்னார் கந்தையா அண்ணன்…

“ ஸ்பீக்கர் கரு போட்டி போடவும் வாய்ப்பிருக்கு அப்போ …” ரீயை ருசித்தபடி கேட்டார் நயீம் நானா…

“ வாய்ப்பிருக்கு.. ஏனெண்டா பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் ராஜகிரிய கேட்போர் கூடத்தில கொஞ்ச நாள் கடும் வேலைகள் நடக்குதாம்… எலெக்சனுக்கு தயாராவது… ஆய்வு செய்றது எப்படி அப்படியான வேலையெல்லாம் நடக்குதாம்… அந்த அமைச்சு நவீன் திசாநாயக்க வசமானது… கூட்டி கழிச்சு பாருங்கோ.. புரியும்..” என்று சத்தமாக சிரித்தபடி சொன்னார் புஞ்சிபண்டா…

“ எதிர்க்கட்சி பக்கம் என்ன நடக்குதாம்..” கேட்டார் கந்தையா அண்ணன்..

“ தாமரைக்கோபுர திறப்பு விழாவில நேத்து மைத்ரி ஒரு டோஸ் கொடுத்தார் தானே.. மஹிந்த ஆட்சியில இதுலயும் ஊழல் நடந்திருக்கதா மைத்ரி சொன்னது மஹிந்த ஆட்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்குதாம்… மஹிந்த – ரணில் இந்த நிகழ்ச்சிக்கு போகேல்ல.. மைத்ரி ரெண்டு மூணு நாளா பேசுற பேச்ச பார்த்துதானாம் இவங்க போகேல்ல… இருந்தாலும் மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் தனியா கோபுரத்த சுத்திக் காட்ட ஏற்பாடுகள் நடந்திருக்காம் …” என்றார் புஞ்சி பண்டா..

“ எதிர்க்கட்சி ஆக்களோட நல்லபடியா இருந்தாரே மைத்ரி… ஏன் இந்த திடீர் ரென்சன்…” விடாமல் அடுத்த கேள்வியை கேட்டார் கந்தையா அண்ணன் ..

“ அதுக்குள்ளயும் ஒரு விஷயம் இருக்கு.. மைத்திரி ஐயாவின்ர ஒரு ஓடியோ இணையத்தில உலாவுது.. அது அந்த தாக்குதலுக்கு பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோட மைத்ரி பேசுற தொலைபேசி உரையாடல் மாதிரியானது.. அதில கொஞ்சம் கோபமா பேச்சு நடக்குது.. அந்த ஒலிப்பதிவ எதிர்க்கட்சி ஆக்கள் தான் லீக் செஞ்சிருக்கதா மைத்ரி நினைக்கிறாராம்.. அதுதான் அவ்வளவு கோபத்தில இருக்கார்.. அநேகமா கூட்டணி பேச்சு கூட இழுபறியா இருக்கும்போல…” என்று அதற்கு காரணம் விபரித்தார் நயீம் நானா…

“ ஏனாம் இந்த முறை மைத்ரி அமெரிக்க யூ என் கூட்டத்திற்கு போகேல்ல..” புஞ்சிபண்டா சிரித்தபடி கேட்டார்..

“ ரெண்டு மேட்டர்.. ஒன்று.. இங்க இருக்கிற அரசியல் நிலைம ..கட்சியில இருக்கிற ஓரிரண்டு எம் பிக்கள விட்டு போனா அவங்க மஹிந்தவோட டீலை போட்டுடுவாங்க.. இரண்டாவது அந்த சவேந்திர சில்வா நியமன மேட்டர்.. அதுக்கு பதில் சொல்ல கஷ்டம் எண்டபடியால டோட்டல் விசிட்டையும் கட் பண்ணிட்டாராம் தலைவர்..” நயீம் நானா விளக்கம் கொடுத்தார்..

“ நயீம் நானா.. உந்த தமிழ் ஆக்கள் ரணில சந்திச்சிருக்கினம்.. கோட்டாவ சந்திச்சிருக்கினம்..எங்கடாப்பா உங்கட தலைவர்மார் ஆக்களையே காணேல்ல….” என்று உசுப்பேற்றும்படி கேட்டார் கந்தையா அண்ணன்..

“ கொஞ்சம் பொறுங்க அண்ணா.. எங்கட ஆக்கள் டைமுக்கு வருவாங்க.. ரணில் எடுக்கிற முடிவ அவங்க பார்க்கிறாங்க.. அதன்படி நடக்கும்..” என்று சிரித்தபடி சொன்னார் நயீம் நானா..

“ எப்போ எலெக்சன் முடிஞ்ச பிறகா..” என்று சடாரென அதற்கு ரைமிங் ஜோக் அடித்தார் புஞ்சிபண்டா…

“ எலெக்சன் அறிவிப்பு வாற சனிக்கிழமை நடக்குமாம்.. சஜித் தரப்ப சேர்த்து ஒரு அணி அமைக்க மைத்ரி செட் ஆகுறார்.. தமிழ்க் கூட்டமைப்பு ரணிலோட தான் நிக்கும் போல.. சுதந்திரக் கட்சி டீம் ஒன்று இரகசியமா கோட்டாவை சந்திச்சிருக்குது.. நவம்பர் 15 அல்லது 16 எலெக்சன் நடக்கலாம்… ஆனா மைத்ரி பல காய்கள நகர்த்தலாம்… பொறுத்து பார்ப்பமே..” என்று கூறியபடி சைக்கிளை எடுக்க தயாராகினார் நயீம் நானா…

“ புஞ்சிபண்டா.. நயீம் நானா… நேரம் கிடைக்கும்போது கடைப்பக்கம் வாங்கடப்பா…” என்று கூறியபடி அவர்களை வழியனுப்பினார் கந்தையா அண்ணன்..