பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 10 “ என்ன பண்டா ஐயா ஆளைக் காணேல்ல…” என்று கந்தையா அண்ணன் கூறும்போதே கடைக்குள் நயீம் நானாவுடன் நுழைந்தார் புஞ்சி பண்டா…

 

“ என்ன பண்டா ஐயா ஆளைக் காணேல்ல…” என்று கந்தையா அண்ணன் கூறும்போதே கடைக்குள் நயீம் நானாவுடன் நுழைந்தார் புஞ்சி பண்டா…

“ கொஞ்ச தூர பயணம் போயிருந்தது… நேத்து தான் வந்தது…” என்றார் பண்டா ஐயா…

“ என்னவாம் கத… மஹிந்த பக்கம் செய்தி என்ன சொல்லுது….?” கேள்வியை கேட்டார் நயீம் நானா…

“ கோட்டா தான் ஜனாதிபதி வேட்பாளர்… அதான் முடிஞ்ச முடிவு… உள்ளுக்குள்ள கொஞ்சம் கச்சால் இருக்கு… எண்டாலும் தீர்மானம் ஒண்டு வந்தபிறகு எல்லாம் ஓகே ஆகிடுவாங்க…” என்றார் கந்தையா அண்ணன்…

“ அப்போ அந்த சின்னக் கட்சிகளோட கூட்டணி சைன் பண்ணும்போது தினேஷ் – விமல் – கம்மன்பில வரேல்லையே.? அது ஏனாம் ?” விடாக்கண்டனாக கேட்டார் நயீம் நானா…

“ சின்ன கட்சிகளோட ஒப்பந்தம் செய்யிறத பத்தி தங்களுக்கு முன்கூட்டியே சொல்லேல்ல எண்டு அவங்க குறைப்பட்டிருக்காங்க… ஆனா பெசில் அத சமாளிச்சிப் போட்டாராம்.. சிறு குச்சியும் பல்லுக்குத்த உதவும் என்றதால அவங்கள விடக் கூடாதெண்டு பெசில் சொன்னதாம்.. ஆனா டக்ளஸ் எம் பி போனபடியா அது பெரிசா விளங்காம போச்சு…” என்று அதற்கு விளக்கம் கொடுத்தார் புஞ்சிபண்டா..

“ ஆனா டக்ளஸ் அப்படியெல்லாம் சப்போர்ட் பண்ண அங்க வடக்கில தாமரைமொட்டு தனியே ஒபீஸ் எல்லாம் திறக்குதே..?” கேட்டார் கந்தையா அண்ணன்..

“ அது ஒரு சிக்கல் ஆனது தான்… ஆனா யாழ்ப்பாணம் போக முதல் நாமல் டக்ளசுக்கு போனைப் போட்டு.. தான் அங்க வாறத பத்தி சொல்லி மீட் பண்ண கேட்டிருக்கிறார்.. ஆனா பார்லிமென்ட் போக இருப்பதால டக்ளஸ் கொழும்பு வந்துட்டாராம்… மறுபக்கம் மஹிந்தவும் டக்ளசுக்கு போனில பேசி இது தங்கட கட்சிக்கு ஒரு ஒபிஸ் திறக்கிறது தான் தவிர உங்களுக்கு எதிரான வேலையில்ல எண்டு சொன்னவராம்…எல்லாம் சமாளிப்புகேஷனாத்தான் இருக்குது..” என்றார் பண்டா…

“ எல்லா முஸ்லிம் மினிஸ்டர்மாரும் மினிஸ்ட்ரி எடுத்தாச்சே…” வேறொரு விடயத்துக்கு மாறினார் கந்தையா அண்ணன்..

“ ஆமாம்.. ஹாரீஸ் வரேல்ல… அதனால அது பகிரங்கமா தெரியக் கூடாதெண்டு சொல்லி அலிஸாஹிர் மௌலானாவையும் பைசல் காசீமையும் லேட்டா பதவி எடுக்க சொன்னதாம் முஸ்லிம் கொங்ரஸ் லீடர்… எனக்கு தெரிய முஸ்லிம் கொங்ரஸ் ஆக்கள் பதவி எடுக்க விரும்பி இருக்கேல்ல .. கட்சி ஹை கொமாண்ட் அந்த முடிவில இருந்தது.. ஆனா பௌசி எம்பி கொடுத்த ப்ரெஸ்ஸர்ல தான் எடுத்தாங்களாம்.. மறுபக்கம் வர்த்தக அமைச்சுக்கு பதில் அமைச்சரா இருந்த புத்திக்க பத்திரன ரிசார்ட் மினிஸ்டருக்கு எதிரா பல வேலைகள செய்ய தொடங்கினாராம்.. ரிசார்ட் வேலைக்கு போட்ட ஆக்கள தூக்க ஏற்பாடு நடந்ததாம்… சரி பொலிஸ் , தெரிவுக்குழு என்று எல்லா இடமும் போய் வந்தாச்சு.. இனி பிரச்சினை இல்லை… அதோட மக்கள் பிரச்சினைய கதைக்க கெபினட்லயாவது இருக்கோணும் எண்டு போட்டு ரிசார்ட் மினிஸ்ட்ரி எடுத்தாராம்…” என்று விளக்கினார் நயீம் நானா..

“ அப்போ ஹாரிஸ் கிழக்கில புதுசா ஏதும் புரட்சி பண்ண போறாரோ…?” சிரித்தபடி கேட்டார் பண்டா..

“ இல்லையில்ல.. லீடருக்கு அந்தாள் தெளிவா சொல்லி போட்டாராம்… தன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாமெண்டு.. கல்முனை பிரதேச செயலக விஷயத்தில ஹக்கீம் கூட ஹாரிஸ் பக்கம் தான் நிக்கிறாராம்.. கட்சியெண்டா இப்படி தான்.. பல நிலைப்பாடு இருக்கும்..”என்று அதற்கும் விளக்கம் கொடுத்தார் நயீம் நானா..

“ யூ .என். பி பக்கம் ஒரே அடிபாடாம்… ரணில் – கரு ஒரு பக்கம் சஜித் மறுபக்கம் தனித்தனி டீம் ஆர்மபிச்சிருக்கிறதா பேச்சு.. அநேகமா ரணில் இல்லாட்டி கருதான் ப்ரெசிடெண்ட் வேட்பாளர் போல… சஜித்துக்கு சான்ஸ் கிடைக்காட்டி அவரோட கொஞ்சப் பேர் வெளியால போய் மைத்ரியோட சேர்ந்து பொதுவேட்பாளரா சஜித்தை நிக்க வைக்கவும் ஏற்பாடு நடக்குது.. ஆனால் மைத்திரிய நம்பி போய் கடைசில அதுவுமில்லாம இதுவுமில்லாம போயிடுமோவெண்டும் அந்த தரப்பு யோசிக்குதாம்…” என்று தனக்கு தெரிந்த தகவல்களை குறிப்பிட்டார் பண்டா…

“ அதுசரி… மாகாண சபைத் தேர்தல் நடக்குமோ…” கேட்டார் கந்தையா அண்ணன்…

“ எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கைய பிரதமரிட்ட இருந்து எதிர்பார்த்து காத்திருக்காராம் ஜனாதிபதி.. அது இருந்தா தான் மாகாண தேர்தலுக்கான கெஸட்ட வெளியிடலாம்.. ஆனா அந்த ரிப்போர்ட்ட கொடுக்காம இழுத்தடிச்சு வாறாராம் ரணில்.. சரியெண்டா இண்டைக்கு இரவு அல்லது நாளைக்குள்ள மாகாண தேர்தல அறிவிக்கோணும்.. ஊவா மாகாணசபைய கலைக்கோணும்… அப்படி செய்யாவிட்டா ப்ரெசிடெண்ட் எலெக்சன நேரத்திற்கு நடத்த முடியாது…அதனால ப்ரெசிடெண்ட் எலெக்சன விரும்பும் ரணில் மைத்ரிக்கு சரியா சப்போர்ட் பண்ணாம காலத்த இழுக்கிறார்.. அதான் உண்ம..” என்றார் பண்டா…

“மைத்ரி திருப்பியும் போட்டி போடுவாரோ..?” ஆவலுடன் கேட்டார் நயீம் நானா…

“ அவர் போட்டி போட வாய்ப்பில்லை.. ஆனா போட்டி போடுற மாதிரி காட்டுவார்.. இல்லாட்டி தன்னோட இருக்கிற ஆக்கள் விட்டுட்டு போயிடுவாங்க தானே… எனக்கு கிடைச்ச தகவல்படி அவர் மஹிந்த போடுற வேட்பாளருக்கு சப்போர்ட் பண்ணுவார் போல.. மஹிந்தவோடும் கோட்டாவோடும் தனித்தனியா பேசப் போறாராம் மைத்ரி.. ஜனாதிபதி எலெக்சனுக்கு சப்போர்ட் பண்ணுறேன் ஆனா அடுத்த பிரதமரா வர நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணனும் அப்படியெண்டு மைத்ரி கேக்க போறாராம்… சுதந்திரக்கட்சி வாக்குகள் இல்லாம வெத்துறது கஷ்டம் எண்டபடியால மஹிந்த தரப்பு இதை யோசிக்க வேண்டியிருக்கும்…” என்று அதற்கு பதில் சொன்னார் கந்தையா அண்ணன்…

“சரி.. எனக்கு வேறு ஒரு வேலைக்கு போகோணும்..” என்று பண்டா ஐயா சொல்ல நயீம் நானாவும் புறப்பட தயாரானார்…

கந்தையா அண்ணன் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தார்…