பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 08 “என்ன பண்டா ஐயா.. புதினம் எதுவும் இருக்கோ…” கேட்டபடி கதையை ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்.. அருகில் கதை கேட்கத் தயாராகினார் நயீம் நானா…

பெட்டிக்கடைப் பேச்சு – 08

“என்ன பண்டா ஐயா.. புதினம் எதுவும் இருக்கோ…” கேட்டபடி கதையை ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்.. அருகில் கதை கேட்கத் தயாராகினார் நயீம் நானா…

“ அண்ணே பொதுவேட்பாளரா சஜித்த போடப்போறாங்கோ…” தொடங்கினார் புஞ்சிபண்டா…

“ சஜித் பிரேமதாசாவுக்கு பொது வேட்பாளர் பதவிய குடுத்து எலெக்சனில இறக்க சந்திரிகா அம்மா இறங்கீட்டா.. எஸ் எல் எவ் பி ஆக்கள் கொஞ்ச பேர்.. ரீ என் ஏ , ஜே வி பி ஆக்கள் கூட இரகசியமா பேச்சு நடக்குது… இதுக்கு யூ என் பி க்குள்ள கடும் எதிர்ப்பு வந்திருக்குது… போன எக்ஸக்கட்டிவ் மீட்டிங்ல யாரும் ப்ரெசிடெண்ட் வேட்பாளரபத்தி இனி பேசக்கூடாதெண்டு ரணில் ஓடர் போட்டாலும் அதை மீறி கொஞ்ச பேர் இன்னும் சஜித் ப்ரோமோஷன் வேலைல இறங்கியிருக்காங்க… சஜித்திட வைவ் நேத்து ஹட்டனில இறங்கி மக்கள் கூட்டத்துக்கு போயிருக்கா.. பிரச்சின பெரிசா போக போகுது..” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் பண்டா ஐயா..

“ சஜித் மட்டுமல்ல… யூ என் பில சரத் பொன்சேகா , கரு , ரணில் கூட போட்டி போட ரெடியா இருக்காங்களாம்.. நாட்டு பாதுகாப்பு பிரச்சினை மக்கள் மத்தியில பெரிசா பேசப்படிறதால தானும் போட்டியிட்டா நல்ல ஆதரவு கிடைக்கும் எண்டு சரத் பொன்சேகா நினைக்கிறாராம்…” தன் பங்குக்கு சொன்னார் நயீம் நானா…

“ அதுக்குள்ள இன்னொரு மேட்டர் இருக்குது… அரச புலனாய்வுத்துறை ஆக்கள 24 ஆம் திகதியில் இருந்து விசாரிக்க போகுது பார்லிமென்ட் செலெக்ட் கொம்மிட்டி .. அந்த வாற ஆக்களோட படங்களை மீடியாவுக்கு கொடுக்க சரத் பொன்சேகா முயற்சி பண்ணுறதா ஜனாதிபதி காதில யாரோ போட்டிருக்காங்க.. அவர் அதில கடுப்பா இருக்காராம்…..” என்று மற்றுமொரு தகவலையும் சேர்த்து சொன்னார் நயீம் நானா…

“ போன கிழம சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி தன்னோட பதவிக்காலம் எப்போ முடியப்போகுது என்று கேட்கவிருந்தாரே மைத்ரி.. ஆனா கடைசி நேரம் அந்த கடிதத்த அனுப்பேல்லயாம்.. தனக்கு நெருக்கமான ஆக்களோட பேசி இந்த முடிவ மைத்ரி எடுத்தாராம்…மாகாண சபை எலெக்சனுக்கு போறது பத்தி யோசிக்கிறாராம் அவர்…” என்றார் கந்தையா அண்ணன் …

“நானும் ஒரு விசயம் கேள்விப்பட்டேன்…” என்று புஞ்சிபண்டா சொல்ல…. “அதென்ன… சொல்லுங்கோ ஐயே..” என்று ஆர்வமாக கேட்டார் நயீம் நானா..

“ எலெக்சன் கொமிசன் செயர்மன் மஹிந்தவ பார்லிமென்டுக்கு கூப்பிட்டு பேசினாராம் ரணில்.. மாகாண சபை எலெக்சன் சரியான நேரத்துக்கு நடக்காட்டி பதவிய வீசிப்போட்டு போய்டுவன் என்றாராம்மஹிந்த தேசப்பிரிய.. ஆனா அப்படியெல்லாம் அவசரப்பட வேண்டாம்னு சொல்லிட்டாராம் ரணில்..மைத்ரிய கொண்டுவந்தது நீங்க இப்போ அவர் போற காலத்திலயும் அதப் பார்த்திட்டு போங்க எண்டு நக்கலா வேற சொன்னாராம் ரணில்…” என்று கூறிச் சிரித்தார் பண்டா ஐயா…

“ தூக்குத்தண்டனைய ரத்துச் செய்ய சொல்லி யூ என் பி எம் பி பந்துலால் பண்டாரிகொட யோசனை ஒண்ட பார்லிமெண்ட்ல தனிநபர் பிரேரணைமுன்வச்சுருக்கார்.. அது பார்லிமெண்ட்ல வாரத்துக்கு என்ன காரணம் எண்டு தேடிப்போட்டு அதுக்கு பின்னாடி ரணில் இருக்கிறதா நினைச்சு ரணில் மேல ஆத்திரத்தில இருக்காராம் மைத்ரி… போதைப்பொருளுக்கு எதிரா மரணதண்டனைய அமுல்படுத்தினா மக்கள் ஆதரவு கிடைக்குமெண்டு மைத்ரி யோசிச்சிருக்க இப்படி செஞ்சா கோபம் வரும் தான.. அதான் இண்டைக்கு எம்பிலிப்பிட்டியில வச்சு கிழி கிழியெண்டு கிழிச்சிருக்கார் மைத்திரி.. யார் என்ன சொன்னாலும் மரணதண்டனை முடிவில இருந்து மாறமாட்டன் எண்டு மைத்ரி சொல்லியிருக்கார்..” என்றார் கந்தையா அண்ணன்…

“ இல்லை அண்ணா… அதுக்கு முதல் சுப்ரீம் கோர்ட்டில அதுக்கெதிரா போட்டிருக்கிற கேஸ்கள் க்ளியர் ஆகோணும்..சும்மா வாய்ச்சவடால் பேசி பேசி என்னத்த கிழிச்சவராம்…” உடனடியாக கந்தையா அண்ணனுக்கு பதில் கொடுத்தார் புஞ்சிபண்டா…

“ தானே முன்வந்து பார்லிமென்ட் செலெக்ட் கொம்மிட்டிக்கு போறதா சொல்லியிருக்கிறாரே ரணில்… ஏதும் உள்குத்து இருக்குதோ…” போட்டு வாங்குவதற்காக கேள்வியை கேட்டார் நயீம் நானா …

“ பாதுகாப்பமைச்சர் மைத்ரி தானே… அவர் இல்லாம இந்த இறுதி ரிப்போர்ட்ட எப்படி தயாரிக்கிறது… மறுபக்கம் போன எல்லாருமேமைத்ரி மேல பழியை போட்டிருக்காங்கள்.. அப்படியான பின்னணியில அவர உடனடியா கூப்பிட்டா வர மாட்டார்.. அதனால அவருக்கு ஒரு ஆப்பை சொருகத்தான் ரணில் தானா வந்து தெரிவுக்குழு போக ரெடி எண்டு சொல்லியிருக்கார்… இப்போ ப்ரைமினிஸ்டரே போகும்போது ப்ரெசிடெண்ட் போகத்தான் வேணும்… அப்படி ப்ரெசிடெண்ட் வராட்டி அவர் விரும்புற இடத்துக்கு போக செலெக்ட் கொமிட்டி தயாரா இருக்காம்…” விளக்கினார் கந்தையா அண்ணன் …

“என்ன நயீம் நானா… முஸ்லிம் அமைச்சர்மார் திங்கள் செவ்வாயில பதவி ஏற்பாங்க போல…” சிரித்தபடி சொன்னார் புஞ்சிபண்டா…

அதற்கு சிரித்தபடி தலையாட்டிய நயீம் நானா “ ஹரீஸ் எம் பி வேணாம் என்று சொல்லுறதாம்.. என்ன நடக்குமெண்டு தெரியேல்ல..” என்றார்..

“சரி கிளம்புவம்.. அதுக்குள்ள ஒரு பகிடியொண்டு… அமெரிக்காவில புதுசா பதவி எடுத்திருக்கிற ஸ்ரீ லங்கா தூதுவர் ரொட்னி பெரேரா தன்னுடைய நியமனக் கடிதத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் கொடுக்கப்போனவராம்.. தூதுவரின்ர பெயர சத்தமா வாசிச்ச ட்ரம்ப் என்னய்யா இவ்வளவே நீளமான பெயரா இருக்குது.. ஸ்ரீ லங்காவில எல்லாரின்ர பெயரும் இப்படித்தான் இருக்குமோ..எண்டு பகிடி விட்டாராம்…ஏனெண்டா தூதுவரின்ர பெயர் எழுப்பிட்டி முதியன்சலாகே ரொட்னி மனோரஞ்சன் பெரேரா..” என்று சிரித்தார் கந்தையா அண்ணன்

அதைக்கேட்டு சிரித்த எல்லோரும் கிளம்பத் தயாராகினர்..

“ ஓ சொல்ல மறந்திட்டன்… சென்ட்ரல் பேங்க் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஐயா பதவிய ரிசைன் பண்ணப் போறாராம்.. சில தனிப்பட்ட காரணங்களுக்காக அப்படி செய்யப் போறதா கேள்வி..”என்று கூறியபடி புறப்பட்டார் கந்தையா அண்ணன்..