பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 06 ” எங்க போனாலும் அரசியல் பேசவேணுமெண்டா கடைப் பக்கம் வரத் தானே வேணும் பாருங்கோ…”

பெட்டிக்கடைப் பேச்சு – 06

” எங்க போனாலும் அரசியல் பேசவேணுமெண்டா கடைப் பக்கம் வரத் தானே வேணும் பாருங்கோ…” சிரித்தபடி கந்தையா அண்ணன் கூறியதும் அரசியல் பேசத்தயாராகினர் புஞ்சிபண்டாவும் நயீம் நானாவும்…

“ இன்னும் ஒரு வருசம் பதவியில் இருக்க மைத்ரி ஆசப்படுறாங்..சுப்ரீம் கோர்ட்டில கேக்க போறதாமே… ஜோசியம் பார்த்து அதபடி உள்ள நல்ல நேரத்தில 11 ஆம் திகதி வியாழக்கிழம சுப்ரீம் கோர்ட்டுக்கு லெட்டர் அனுப்ப போறாராம்… மஹிந்த ராஜபக்ஸ போல ஜோசியக்காரனுவல நம்பி ஐயா மோசம் போகப் போறார் போல…” நக்கலாக கதையை ஆரம்பித்தார் புஞ்சி பண்டா…

“ ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அதில ஓரு நிலைப்பாட்டை குடுத்திருக்கு… இந்த வருஷம் பதவிக்காலம் முடியும் என்று முன்னமே ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் சொல்லியிருந்தத வச்சு இந்த வருஷம் தேர்தல நடத்த தேர்தல் கமிஷனும் டிப்பார்ட்மெண்ட்டும் முடிவு செஞ்சிருக்காங்க..இப்போ மைத்ரி ஐயா அவர் நியமிச்ச சி ஜே கிட்ட விளக்கம் கேக்குறது தேவையில்லாத வேல..” சொன்னார் நயீம் நானா..

“ ஆனா ஒரு மேட்டர் பாருங்கோ… இன்னும் ஒரு வருஷம் இருக்கெண்டு எதோ ஒரு காரணத்த சொல்லி ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் பச்ச கொடி காட்டினா…ரணில் ரெண்டு முடிவுகள எடுக்க யோசிச்சு இருக்கிறாராம்… ஒண்டு… உடனடியா பார்லிமென்ட் எலெக்சனுக்கு போறது… அல்லாட்டிப் போனா இம்பீச்மெண்ட் கொண்டுவந்து மைத்திரிய பதவியில் இருந்து தூக்குறது… இது ரெண்டில ஒண்ட ரணில் செய்ய பார்க்குறதா கேள்வி…” என்று பச்சைக்கட்சியின் தகவல்களை அவிழ்த்தார் கந்தையா அண்ணன்…

“ ரெண்டு கட்சிகள் ஒண்டா தேர்தலில போட்டி போட போறதாவும் அதுக்கு பெயர் வச்சதாகவும் மஹிந்த அமரவீர சொன்னது பெரிய சர்ச்சையாமே..” கேள்வியை போட்டு பதில் வாங்கும் நோக்கில் துவங்கினார் நயீம் நானா…

“ ஒவ் ஒவ்… எஸ் எல் எவ் பி + பொதுஜன பெரமுன கட்சிங்க ஒன்றா இருக்கதா காட்டதானாம் வேணுமெண்டு அப்படி ஒரு கதைய விட்டிருக்கு மைத்ரி தரப்பு ஆக்கள் … இது மஹிந்த பெசில் ஆக்களுக்கு டென்ஷன குடுத்திருக்கு.. அப்படி எந்த தீர்மானமும் எடுக்கப்படலன்னு மஹிந்த தரப்பு உடனடியா சொன்னது அது தான்.. ஏனென்டா இப்போ போற போக்க பார்த்தா அந்த அவண்ட்கார்ட் கேசை வச்சு நிறைய பேர கைது பண்ண போறாங்க.. கோட்டபாயவையும் அந்த கேசில உள்ள போடலாம்னு ஒரு கதை ஓடுது….அதனால எதிர்க்கட்சி ஆக்கள் கடுப்பில இருக்குதாம்..” சொன்னார் புஞ்சி பண்டா

” ஜனாதிபதி பதவிக்காலம் இன்னும் ஒரு வருசத்துக்கு இருக்கெண்டு சுப்ரீம் கோர்ட் சொன்னதா வச்சுக்கொண்டாலும் அப்படி சொன்னா இனி மைத்ரி தான் ராஜா…பிறகு அவர் பார்லிமென்ட்ட கலைக்க அதிகாரம் உரிய காலத்தில வரும்…யூ என் பிக்கு தொல்லை தான்…” எரிச்சலுடன் சொன்னார் கந்தையா அண்ணன்…

”இண்டைக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்ததோ…ஏதும் விசேஷமோ…?” நயீம் நானாவிடம் கேட்டார் கந்தையா அண்ணன் …

”அடப் போங்கண்ணே…எதோ பெரிசா அரசியல் பிரளயம் நடக்கப் போகுது எண்டு மீடியா செய்திய போட்டதுக்கென்ன இண்டைக்கு அங்க பெரிசா ஒன்றும் நடக்கலையாம்…வழமையா பேசுறத போல பேசி பார்லிமென்ட் எஜெண்டாவ ஒழுங்கு பண்ணி வச்சிருக்காங்கள் …10 ,11 ஆம் தேதிகளில ஜே வி பி கொண்டுவாற அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேல விவாதம் நடக்கும் அவ்வளவு தான்…” என்று அதற்கு பதிலளித்தார் நயீம் நானா..

”இண்டைக்கு நைட் முஸ்லீம் பொலிட்டீஷியன்ஸ் எல்லாம் மைத்ரிய பார்க்கிறாங்க…ரிசார்ட் – ஹக்கீம் எல்லாம் மினிஸ்ட்ரிகள எடுக்க சொல்லி மைத்திரியும் ரணிலும் சொல்லுறதால அவங்க பதவிகள கூடிய சீக்கிரம் எடுப்பாங்க போல ” தகவல் சொன்னார் புஞ்சி பண்டா..

” இண்டைக்கு லண்டன் போறார் மைத்ரி… வர எப்படியும் மூணு நாள் ஆகும் ….அதுக்குள்ளே இங்க அரசியல் எல்லாம் என்ன நடக்குமோ….”சிரித்தபடி சொன்னார் நயீம் நானா….

” அந்த கதைய கேள்விப்பட்டீங்களோ…ஜெர்மன் எம்பாஸடர் யாழ்ப்பாணம் போனப்போ அங்க கவர்னர் சுரேன் சாதாரண உடுப்போட அவரை சந்திச்சது பெரிசா பேசப்படுது…என்னதான் கவர்னரா இருந்தாலும் ஒரு ப்ரொட்டோக்கோல் தெரிய வேணாமோ ?” கந்தையா அண்ணன் ஒருவித கவலையுடன் சொன்னார்…

” அதிலென்ன தவறு அண்ணா…சாதாரண உடுப்போட சந்திக்கிறதால என்ன பிரச்சின …எங்கட ஆக்கள் எல்லாத்துக்கும் தவறு கண்டு தவறு கண்டு யார் என்ன செஞ்சாலும் அதில ஒரு குத்தம் காணுறதே வேலையா போச்சு…. ஜெர்மன் எம்பாஸடரே ஒன்னும் சொல்லாம இருக்கிறப்போ மத்தவங்களுக்கு என்ன பிரச்சினை…” பதிலுக்கு சொன்னார் புஞ்சி பண்டா..

”சரி பார்ப்பம்..” என்று கந்தையா அண்ணன் சொல்ல புஞ்சிபண்டாவும் நயீம் நானாவும் கிளம்பத் தயாராகினர்.