பெட்டிக்கடைப் பேச்சு

பெட்டிக்கடைப் பேச்சு – 05 “ திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது… அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது…”

பெட்டிக்கடைப் பேச்சு – 05

“ திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது… அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது…” பாடிக்கொண்டே பத்திரிகையை விரித்து நுனிப்புல் மேய ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்…

“ கந்தையா மல்லி… பொலிடிக்ஸ் ஏதும் இருக்கிறதா…” கதையை கேள்வியுடன் ஆரம்பித்தார் புஞ்சி பண்டா…

கந்தையா அண்ணன் அதற்கு பதிலளிக்க திரும்பும்போது நயீம் நானாவும் நாற்காலியை இழுத்து அருகே வந்தார்..

“ சஜித் ஜனாதிபதி வேட்பாளர் எண்டு மங்கள ஐயா எங்கையோ பேசியிருக்கார்…அந்தப் பேச்சால கட்சிக்குள்ள கடும் பிரச்சினையாம்… ரவி கருணாநாயக்க பெரிய பிரச்சினைய கிளப்ப ரெடி ஆகிட்டார்… ஓ லெவல் கூட பாஸ் பண்ணாத ஆள் பிரெசிடெண்ட் ஆகிறதா எண்டு நேத்து ரவி எங்கேயோ பேசியும் இருக்கார்…மறுபக்கம் ரணில் கட்சி சீனியர்ஸ் பலரோட தனிய கலந்து பேசியிருக்கார்..ஆளாளுக்கு நினைச்சதெல்லாம் செய்ய..பேச ஏலாது.. எண்டு ரணில் அதில காட்டமா சொல்லியிருக்காராம்…” சொல்லி முடித்தார் கந்தையா அண்ணன்…

“ ஹரி கத்தாவக் மச்சங்… இனி சஜித் வாறதில என்ன ப்ரோப்ளம் இருக்காம்…?” சற்று கோபப்பட்டவராக கேட்டார் பண்டா…

“ ஒரு பிரச்சினையும் இல்ல பண்டா அண்ணே.. நீங்கள் நினைக்கிறீங்களா இது சஜித் பிரேமதாசாவ கஷ்டத்தில போட யாரோ குடுத்த கேம் ஒண்டு. உண்மையா அந்தாள் வெல்லோணுமெண்டா போட்டி போடுறத ரகசியமா வச்சு கடைசி நாள் ரணிலோட அப்பம் சாப்பிட்டு வெளியே வந்திருக்கோணும்… ஏனெண்டா ரணில் கடைசி வரைக்கும் சஜித்துக்கு போட்டி போட இடம் கொடுக்காது.. சஜித் இளவயசு ஆள்..அவர் ஜனாதிபதியா வந்தா கரு ஜெயசூரியாவின்ற மருமகன் நவீன் போன்ற ஆக்களோட எதிர்காலம் கந்தல் தான்..சோ…லேசுப்பட்ட மாதிரி வேலையில்ல இது…
மங்கள சஜித்த அறிவிச்சது எதோ ஒரு காரணத்திற்காகத்தான்..மங்கள கூட ஜனாதிபதி ரேஸில இருக்கார்… இப்போவே சஜித்தின்ர பெயர சொன்னதன் பிறகு எல்லாம் சேர்ந்து சஜித்தை அடிச்சு துவைச்சு அவரின்ர பெயர டெமேஜ் பண்ணினா இனி அந்த ரேஸில உள்ள ஆக்களுக்கு ஈஸி தானே… கூட்டிக் கழிச்சு பாருங்கோ… புரியும்..” என்று ஒரு கிண்டல் சிரிப்புடன் சொன்னார் கந்தையா அண்ணன்…

பண்டா ஐயா தன் பங்குக்கும் எதாவது சொல்ல வேண்டுமே… “ தயாசிறி செலெக்ட் கொம்மிட்டீ போக போறதில பெரிய பிரச்சினை இருக்கு.. இந்தியாவுக்கு சொந்தமான தாஜ் ஹோட்டல ஏன் சூசைட்காரனுங்க எட்டெக் பண்ணேல்ல.. அதுக்குள்ள இருந்த இந்தியன் டிப்ளமேட் யார் எண்டெல்லாம் அவர் பகிரங்கமா சொல்லப் போக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ரிலேஷன்ஷிப் பாதிக்க போகுது… அதுதான் தயாசிறி பார்லிமென்ட் செலெக்ட் கொமிட்டி போக தயங்குது..” என்றார் புஞ்சி பண்டா..

“ ஆமா.. தாஜ் ஹோட்டலுக்குள்ள வந்த சூசைட் ஆள் போனை பார்த்து பார்த்து பிறகு வெளியே போனத பத்தி தயாசிறி சொல்லுறதும் கொஞ்சம் யோசிக்க வைக்குது தான்… ஆனா இங்க தாக்குதல் நடக்க இருக்கிறத பல தடவ இந்திய இன்ரெலிஜென்ஸ் தானே முன்கூட்டியே சொல்லியிருக்கு.. அப்படி சொன்ன இந்தியாவோட டிப்ளமேட் தாஜ் ஹோட்டலுக்குள்ள அன்றைக்கு போவாரா.. யோசிச்சு பேச வேணும்…” என்று கருத்தை முன்வைத்தார் நயீம் நானா..

“ ஜனாதிபதிக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய லடாயாமே.. உண்மையா?” கேட்டார் புஞ்சி பண்டா..

“ ஓம் ஓம் … இந்த சோபா எக்ரிமெண்ட் எண்ட ஒண்ட இந்த யூ என் பி செஞ்சு அத மறைச்சுப் போட்டுது.. அந்த ஒப்பந்தம் அமுலானா அமெரிக்க படையள் இங்க விசா இல்லாம வரலாமாம்.. இப்படி பல ஆபத்துக்கள்.. அதனால கொஞ்சம் அப்செட்டில மைத்திரி இருக்காராம்.. கொழும்பில இருக்கிற அமெரிக்கன் எம்பாஸடர் அம்மா , மைத்ரிய சந்திக்க டைம் கேட்டு ரெண்டு மாசமா காத்திருக்காவாம்..ஆனா ப்ரெசிடெண்ட் ஒப்பீஸ்ல இருந்து பதில் இல்லையாம்.. அமெரிக்க ஆக்கள சந்திக்கிறத காய்வெட்டி வாறார் மைத்ரி… அவங்கள் கண்டதுக்கெல்லாம் ப்ரெஷர் குடுப்பான்கள் எண்டு மட்டுமில்லாம தானும் எதாவது வார்த்தைய விட்டுட கூடாதெண்டு யோசிக்கிறார் மைத்ரி.. அமெரிக்க வெளிநாட்டமைச்சர் வரவிருந்தாரல்லோ..அந்த காலப்பகுதியில நாட்டில இல்லாம இருக்க அவர காய்வெட்ட தான் கம்போடிய பயணத்த போட்டிருந்தார் மைத்ரி… இப்போ அமெரிக்க அமைச்சர் வாறது கென்சல் ஆன கையோட தன்னோட கம்போடிய பயணத்தையும் கென்சல் பண்ணியிருக்கார் மைத்ரி..” பிரேக்கிங் நியூஸ் போல சொல்லிக்கொண்டே போனார் கந்தையா அண்ணன்..

“நான் ஒரு வேலைக்கு போகோணும்.. அதுக்குள்ள ஒரு இன்ரஸ்டிங் ஸ்டோரி இருக்கு… சொல்லிட்டு போறன்வா..” என்று புஞ்சிபண்டா சொல்ல கந்தையா அண்ணரும் நயீம் நானாவும் சிரித்தபடியே அவர் பக்கம் திரும்பினர்…

“ இந்த கொஞ்ச நாளா சாத்திரம் பாக்கிற ஆக்கள் டெய்லி ஜனாதிபதி வீட்டு பக்கம் போறதாம்.. இப்படி தூரப்பகுதி ஜோசியக்காரன் ஒரு ஆள வரச் சொல்லி அங்கேர்ந்து அழைப்பு போயிருக்குது.. தும்முல்ல சந்தியில இறங்கி ஜனாதிபதி வீட்ட கேட்டு ஓட்டோவில ஏறினா அவன் கொண்டுவந்து விடுவான் எண்டு சொல்ல அந்த ஜோசியக்காரனும் காலம டைம் வந்து இறங்கி ஓட்டோவில ஏறியிருக்கான்.. “அப்பே ஜனாதிபதித்துமா கெதர தான்ன” எண்டு ஜோசியக்காரன் சொல்ல ஓட்டோக்காரன் அந்தாளக் கொண்டு மஹிந்த ராஜபக்ச வீட்டில இறக்கியிருக்கான்.. ஜோசியக்காரனும் என்னடா இது மைத்ரி வீட்டில மஹிந்த படமெல்லாம் போட்டிருக்கு எண்டுபோட்டு உள்ள போனா செக்கியூரிட்டிமார் மஹிந்தவுக்கு போனைப் போட்டு ஜோசியக்கார ஒராள் வந்திருக்கதா சொல்லியிருக்காங்க.. நான் அப்படி யாரையும் வர சொல்லேல்ல எண்டாலும் ஆளை உள்ளே அனுப்பு தேத்தண்ணி குடிச்சுப்போட்டு போகட்டும் எண்டு மஹிந்த சொல்லியிருக்கார்..
ஜோஸ்யக்காரர் உள்ளே போனா அவர ஏற்கனவே தெரிஞ்ச ஆள் எண்டுபோட்டு மஹிந்த பேசியிருக்கார்..

“சொறி சேர் ஜனாதிபதி மாத்தயா வீட்டுக்கு போடுங்கன்னு சொன்னா இங்க கொண்டுவந்து விட்டுட்டாங்க..”எண்டு ஜோசியக்காரன் சொல்ல மஹிந்தவும் “ஆ அப்படியா” எண்டு நாட்டுநடப்பெல்லாம் பேசி தண்ட ஒப்பிஸ் வாகனத்தில ஏத்தி மைத்ரி வீட்டுக்கு அனுப்பி வச்சாராம்..” என்று கதையை சொல்லி முடித்து சிரித்தார் பண்டா..

“ அப்போ சிங்கள ஆக்கள் இன்னமும் ஜனாதிபதித்துமா எண்டா மஹிந்தவ தான் நினைக்கிறாங்க.. அதைத்தானே சொல்ல வாறீங்கள்..” என்று குத்தலாகக் கேட்டார் கந்தையா அண்ணன் ..

“ நாட்டு நிலைமை இப்போ இருக்கிற லீடர்ஸ்ட வேலைகள் தான் அப்படி நினைக்கப் பண்ணியிருக்கு… லேட் ஆகுது நான் போறன்..” என்று கூறி கிளம்பினார் புஞ்சி பண்டா..

நயீம் நானாவும் கந்தையா அண்ணனும் புறப்படத் தயாராகினர்..