இலங்கை

பூனைக்கு மணி கட்டுவது யார் ? – மைத்திரி ரணிலுக்கிடையில் மீண்டும் அதிகார சர்ச்சை !

 

அமைச்சர் ரிஷார்ட் மற்றும் ஆளுநர்கள் ஹிஸ்புல்லாஹ் , அசாத் சாலி ஆகியோரை பதவி விலகக் கோரி அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அது கடும் டென்ஷனை ஏற்படுத்தியுளளதாக நம்பகரமாக அறியமுடிந்தது.

தற்போதைய நிலைமை குறித்து நேற்று தனது சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்த ஜனாதிபதி , என்ன நடவடிக்கைகளை எடுக்கலாமென வினவியிருந்தார். எந்த குற்றச்சாட்டுக்களும் நீதிமன்றத்தில் நிரூபிக்கபடாத நிலையில் அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய முடியாதென ஜனாதிபதிக்கு ஆலோசனை சொல்லப்பட்டது.

அதேபோல ஆளுநர்மாரையும் உடனடியாக பதவி நீக்குவது தொடர்பில் சிக்கல் நிலைமை எழுந்துள்ளது. எதுவித குற்றங்களுமின்றி ஒருவரை பதவி நீக்கம் செய்து அவர் நீதிமன்றம் சென்றால் அது பாதகமாக முடியுமென்பதே அதற்கான காரணமாகும்.

ஆனால் அமைச்சர் அல்லது ஆளுநர்மாரை பதவி விலகச் சொல்லி ஜனாதிபதி கோரிக்கை விட முடியுமென ஜனாதிபதியிடம் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.

இந்த நிலைமையே இப்போது அரசியல் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

“ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்மாரை பதவி விலக அவர் முதலில் கேட்கட்டும்.பின்னர் அமைசசர் ரிசார்ட்டை பதவி விலகுமாறு கேட்கலாம்” என்ற கடும் நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் இருக்கிறார். ரணிலின் இந்த முடிவு ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் “ரிஷார்ட்டை பதவி விலக ரணில் கோரி ரிசார்ட் விலகினால் ஆளுநர்மாரை விலகச் சொல்லி கேட்கலாம். அப்படியில்லாமல் வெறுமனே ஆளுநர்மாரை விலகச் சொல்ல முடியாது.அமைச்சரை நீக்கும் அதிகாரமும் பிரதமருக்கே உண்டு. அவர் முதலில் செய்யட்டும்” என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் இருக்கிறாரென சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான இந்த இழுபறி அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரமடையச் செய்துளளது.

இதேவேளை – தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தால் அத்துரலியே ரத்தன தேரரின் உடல்நிலை பாதிக்கப்படலாம் என்பதால் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர்மட்ட தேரர்கள் சிலர் ஜனாதிபதியிடம் இன்று காலை கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிந்தது.

 

( இந்தச் செய்தியை பிரதியெடுப்போர் எமது செய்தித்தளத்திற்கான நன்றியை தெரிவித்து மீள்பதிவிடவும் )