இலங்கை

புவக்பிட்டி முஸ்லிம் ஆசிரியைமாருக்கு இடமாற்றம் வழங்கிய ஆளுநர் – ஹிஜாப் அணிவது தொடர்பில் சர்ச்சை !

 

அவிசாவளை ,புவக்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் முஸ்லிம் ஆசிரியைமார் ஹிஜாப் அணிந்து வருவதற்கு பாடசாலை சமூகம் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து அங்கு அங்கு கடமையாற்றும் 10 முஸ்லிம் ஆசிரியைகளை மேல் மாகாணத்தின் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தார் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி.

இன்று காலை ஆசிரியைமார் பாடசாலைக்கு சென்றபோது பாடசாலை கேட்டை மூடிய பாடசாலை கல்வி அபிவிருத்தி சங்க உறுப்பினர்களான பெற்றோர், ஹிஜாப் அணியாமல் சாரி அணிந்து வந்தால் மாத்திரமே அவர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியுமென கூறியுள்ளனர்.

இதனையடுத்து மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் ,மாகாண கல்வியமைச்சின் செயலாளர் விஜேபந்து ,பாடசாலை அதிபர் மனோகரன் ஆகியோரையும் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளையும் அழைத்து பேச்சு நடத்தினார் ஆளுநர்.

பாடசாலையில் காலை அவமதிக்கப்பட்டமையால் அங்கு மீண்டும் கடமைக்கு செல்ல முடியாதென ஆசிரியைகள் கூறியதையடுத்து அவர்களை கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யுமாறு ஆளுநர் பணித்துள்ளார்.