உலகம்

புர்கினா பாசோவின் படையின் தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவின் படையினர் நடத்திய தாக்குதலில்   குறைந்தது 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, புர்கினா பாசோவின் பதற்றமான வடக்கு பிராந்தியத்தில் நடந்த மோதலில் பல படை வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு முதல், புர்கினா பாசோ பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது.

இதில் 500ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதோடு, 9,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 2,80,000ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த சில நாட்களில், அந்த நாடு பயங்கரவாத தாக்குதல்களின் எழுச்சியைக் கண்டுள்ளதால், அச்சத்தினால் பிராந்தியத்தில் உள்ள பலர் நாட்டில் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்துள்ளனர்.

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக,  பல பிராந்தியங்களில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், நாட்டின் வடக்கு லோரூம் மாகாணத்தில் உள்ள டைட்டோ கிராமத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் நேற்று முன்தினம் குறைந்தது 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.