உலகம்

புரூணையில் கடுமையாக்கப்படும் சட்டங்கள் – ஓரினச்சேர்க்கைக்கு மரணதண்டனை

 

தென்கிழக்கு ஆசிய நாடான புரூணையில் கள்ள உறவும் , ஓரினச்சேர்க்கையும் குற்றமாகக் கருதப்படுவதால் மன்னர் ஹசனால் போல்கியா இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டுவந்துள்ளார்.

புரூணையில் குற்றவாளிகள் மீது கல் எறிந்து கொன்று மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திருட்டை ஒழிக்கவும் தண்டனையை கடுமையாக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி முதல் முறை திருடுகிற குற்றவாளிகளுக்கு வலது கையை வெட்டி விடவும் இரண்டாவது முறை அதே நபர் திருடினால் அவருக்கு இடது காலை வெட்டி விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

இப்படி கடுமையான தண்டனை விதிக்கிறபோது திருட்டை ஒழித்துக்கட்டி விடலாமென புரூணை அரசு நம்புகிறது.

இந்த தண்டனைகள் வரும் 3-ந் திகதி (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பை அந்த நாட்டின் சட்ட மா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இப்படி தகாத உறவு, ஓரினச்சேர்க்கை, திருட்டு ஆகிய 3 குற்றங்களுக்கும் தண்டனையை அதிகரிப்பது என கடந்த 2013-ம் ஆண்டு முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் வலதுசாரி அமைப்புகளின் கடும் எதிர்ப்பினால், எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அதிகாரிகள் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததால் இதுவரை தாமதம் ஏற்பட்டது
இதேவேளை இந்த புதிய தண்டனைகளை அமுல்படுத்துவதை புரூணை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தி உள்ளது.

ஷரீயா சட்டம் அமுலில் உள்ள புரூணையில் மதுபானம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.