இலங்கை

”புதிய கூட்டணி யாருக்கும் எதிரானதல்ல” – ஆறுமுகம் தெரிவிப்பு !

 

தங்களுடைய புதிய கூட்டணி எந்தவொரு கூட்டணிக்கும் எதிரானது அல்ல எனத்
தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான்.
தங்களுடைய கூட்டணியின் கதவு திறந்தே இருக்கிறது. யார் வந்தாலும்
சேர்த்துகொள்வோம் என்றார்.

தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்வதே கூட்டணியின் பிரதான
வகிபாகமாகும் என்றும். வடக்கு கிழக்கு உள்ளிட்ட சகல பிரதேசங்களில் வாழும்
தமிழ்ர்களுக்காக ஓரணியில் ஒன்றுதிரளுமாறும் அழைப்பு விடுத்தார்.

புதிய கூட்டணிக்காக ஆவணங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு, கொட்டகலை
சீ.எல்.எப்பில் இடம்பெற்றது. அதன்பின்னர் அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.

இந்த கூட்டணி யாருக்கும் எதிரான கூட்டணி அல்ல. எங்களை விடவும் மூத்த
தலைவர்கள் இருக்கின்றனர். இந்த நாட்டின் மூத்த தலைவர். வட மாகாண முன்னாள்
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருக்கிறார். ஆனந்த சங்கரி, பி.பீ.
தேவராஜ் உள்ளிட்டோர் இருக்கின்றனர் அவர்களுடன் கலந்தாலோசித்து
செயற்படுவோம்.

கூட்டணிக்கு பெயர்வைப்பதோ, தலைவர் செயலாளர்களை தேர்ந்தெடுப்பதோ
முக்கியமானதல்ல. செயற்படவேண்டும். இது அடுத்தடுத்த தேர்தலுக்கான கூட்டணி
அல்ல. எந்தவொரு விடயமாக இருந்தாலும் இனிமேல், கூட்டணியுடன்
கலந்தாலோசித்தே முடிவெடுப்போம் என்றார்.