உலகம்

“பிரெக்ஸிட்டை நிறைவேற்ற மக்கள் சக்திவாய்ந்த உத்தரவு” – பொரிஸ் ஜோன்சன் !

இங்கிலாந்தில் மீண்டும் பிரதமராகும் பொரிஸ் ஜோன்சன் “பிரெக்ஸிட்டை நிறைவேற்ற இங்கிலாந்து மக்கள் சக்திவாய்ந்த உத்தரவை வழங்கி உள்ளனர் என கூறி உள்ளார்.

650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கிலாந்தை பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் தற்போது 4 கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குள் எண்ணும் பணி துவங்கியது. இதில் துவக்க நிலையில், கருத்து கணிப்புகளுக்கு மாறாக தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை பெற்றது. ஆனால், சிறிது நேரத்திலேயே நிலைமை மாறி, கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெறத்தொடங்கியது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். கன்சர்வேட்டிவ் கட்சி 337 இடங்களில் அதிக பெரும்பான்மை வெற்றி பெற்று உள்ளது . தொழிலாளர் கட்சி 199 இடங்களில் வென்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது அரசாங்கம் பிரெக்ஸிட்டைச் செய்வதற்கான சக்திவாய்ந்த புதிய உத்தரவை பெற்று உள்ளதாக தெரிகிறது என கூறி உள்ளார்.

மேலும் பொரிஸ் ஜோன்சன் கூறியதாவது:-

பிரெக்ஸிட்டைச் செய்து முடிக்க, பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு மட்டுமல்லாமல், இந்த நாட்டை ஒன்றிணைத்து முன்னோக்கி எடுத்துச் செல்லவும் இந்த ஒரு நாடு கன்சர்வேடிவ் அரசுக்கு ஒரு சக்திவாய்ந்த புதிய உத்தரவு வழங்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.

இது இப்போது ஒரு வரலாற்றுத் தேர்தலாக மாறும் என நான் நினைக்கிறேன். இந்த புதிய அரசாங்கத்தில், இங்கிலாந்து மக்களின் ஜனநாயக விருப்பத்தை மதிக்க, இந்த நாட்டை சிறப்பாக மாற்றுவதற்கும், ஒட்டுமொத்த மக்களின் திறனையும் கட்டவிழ்த்து விடுவதற்கும் வாய்ப்பு அளித்துள்ளது இந்த நாடு. என்று அவர் கூறினார் .

 

பிரிட்டன் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 12- க்கும் மேற்பட்டோர் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

உள்துறை அமைச்சராக இருந்த பிரீத்தி பட்டேல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றிபெற்றுள்ளார். திறைசேரி தலைமைச் செயலராக இருந்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த அலோக் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.

சைலேஸ்வரா, சுயெல்லா பிரேவர்மன், பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திர சர்மா, லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ, லேபர் கட்சி சார்பில் நவேந்தரு மிஸ்ரா ஆகிய புதுமுகங்களும் வெற்றி பெற்றுள்ளனர்.