உலகம்

பிரித்தானியாவில் அடுத்த பிரதமர் யார்?

பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்தும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அடுத்தமாதம் 7ம் திகதியுடன் விலகுவதாக தெரேசா மே நேற்று அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து புதிய பிரதமர் பதவிக்கான போட்டி கன்சர்வேட்டிவ் கட்சியில் ஆரம்பமாகியுள்ளது.
இதுவரையில், வெளியுறவு செயலாளர் ஜெரமி ஹன்ற், சர்வதேச அபிவிருத்தி செயலாளர் ரோய் ஸடுவார்ட், முன்னாள் வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜோன்சன், முன்னாள் தொழில் மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மெக்வெய் ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதென்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்களுக்காக முதலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதிகூடிய வாக்குகளைப் பெற்ற இரண்டு பேர் தெரிவு செய்யப்படுவார்கள்.
பின்னர் குறித்த இரண்டு பேர்தொடர்பிலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, புதிய கட்சித் தலைவர் தெரிவு செய்யப்படுவதுடன், அவரே பிரதமராகவும் தெரிவு செய்யப்படுவார்.