உலகம்

பிரான்ஸின் புதிய பிரதமராக ஜீன் கெஸ்டெக்ஸ் நியமனம்

பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் இராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக ஜீன் கெஸ்டெக்ஸ் புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் பிரான்ஸ் அரசு பெரும் பொருளாதார பாதிப்பை அடைந்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவியை இராஜினாமா செய்தார். எட்வர்ட் பிலிப் இராஜினாமாவை ஏற்றுக்கொண்ட இமானுவேல், பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் கெஸ்டெக்ஸ்சை நியமனம் செய்துள்ளார்.

பிரதமராக பதவி வகித்த எட்வர்டிற்கு ஜனாதிபதி இம்மானுவேலை விட அதிக மக்கள் செல்வாக்கு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பிரான்ஸில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் தனது செல்வாக்கை அதிகரிக்க இம்மானுவேல் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்து அதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.