விளையாட்டு

‘பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடுவதற்கு பாதுகாப்பான நாடு’ – தனுஷ்க

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் பாதுகாப்பான நாடு என தெரிவித்துள்ள, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டியின் பின்னர் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“அதிவிசேடமான கிரிக்கெட் தொடர் ஒன்று நிறைவடைந்துள்ளது. பாகிஸ்தான் தமது இரசிகர்களிடம்  மீண்டும் கிரிக்கெட்டை கொண்டுவந்துள்ளது. அவர்களது சிறந்த விருந்தோம்பல் மற்றும் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏனைய நாடுகளையும் பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் விளையாட வரவழைக்கும் என நம்புகின்றேன். பாக்கிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவது பாதுகாப்பானது மற்றும் அவர்களின் இரசிகர்கள் அதற்கு தகுதியானவர்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட  இருபதுக்கு-20 தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என வெள்ளை அடிபபடையில் கைப்பற்றியது.

லாஹூரில் நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

ஓஷத பெர்னாண்டோ மாத்திரம் நிலையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

அறிமுக போட்டியில் விளையாடிய ஓஷத பெர்னாண்டோ இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 78 ஓட்டங்களை பெற்றார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் அமீர் 3 விக்கெட்டுகளையும், இமாட் வசீம் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணியின் சார்பாக 27 ஓட்டங்களுடன் பாபர் அஸாம் ஆட்டமிழக்க, தொடர்ந்து 52 ஓட்டங்களை பெற்றிருந்த ஹரிஸ் சொஹைல் ஆட்டமிழந்தார்.

அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

இலங்கை அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்த, லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.