விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் – ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நேற்று முன்தினம் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 115 ரன்னும், கேப்டன் சொயிப் மலிக் 60 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 143 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 153 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆரோன் பிஞ்ச் தொடர்ச்சியாக அடித்த 2-வது சதம் இதுவாகும். முதல் போட்டியிலும் அவர் சதம் விளாசி இருந்தார். தொடக்க விக்கெட்டுக்கு ஆரோன்பிஞ்ச்-உஸ்மான் கவாஜா (88 ரன்) இணை 209 ரன்கள் சேர்த்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி போட்டி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நாளை நடக்கிறது.