Breaking News

பாகிஸ்தானில் விமான விபத்து: 97 பேர் உயிரிழப்பு இருவர் உயிருடன் மீட்பு !

 

பாகிஸ்தானில் 99 பேருடன் சென்ற சர்வதேச பயணிகள் விமானம், கராச்சி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் , குடியிருப்புவாசிகள் என 97 பேர் உயிரிழந்தனர்.

கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமானநிலையத்தை நெருங்கியபோது, விமானம் தரையிறங்குவதில் கோளாறு ஏற்பட்டது. விமானத்தை இயக்கி வந்த விமானி, இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கினார்.

அருகில் உள்ள 2 விமான நிலையங்களில் ஒன்றில் தரையிறங்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் விமான நிலையத்தை வந்தடையும் முன்னரே அருகில் அமைந்துள்ள ஜின்னா வீட்டு வசதி குடியிருப்பின் மீது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களும் குடியிருப்பில் வசித்து வந்தவர்களும் சிக்கினர்.

விபத்து நேரிட்டதும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.. இவர்கள் மட்டுமன்றி ராணுவத்தின் அதிவிரைவுப் படையினரும், சிந்து மாகாண ராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நொறுங்கி விழுந்த விமானத்தின் சில பாகங்கள் தீப்பிடித்து அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.37 மணிக்கு விமான நிலையத்துடனான தொடர்பை விமானம் இழந்துவிட்டது என்று விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் கூறினார். விமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் குலாம் தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த குடியிருப்பில், வீடுகள் இடிந்து விழுந்தது மட்டுமன்றி, தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் , இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. விமானத்தின் உடைந்த பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அந்த விமானம் குடியிருப்பின் மீது விழுவதற்கு முன், அதன் இறக்கைகளில் இருந்து தீப்பிழம்பு வந்ததாக விபத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார்.

உயிரிழந்த அனைவரும் விமானத்தில் வந்தவர்களா அல்லது குடியிருப்புவாசிகளா என உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள், ஜின்னா மருத்துவமனைக்கும் சிவில் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. பலர் தீக்காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் வந்த மற்ற பயணிகளையும் குடியிருப்புவாசிகளையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்து நிகழ்ந்த பகுதியில் தெருக்கள் குறுகலானதாக இருந்ததாலும், பொதுமக்கள் திரண்டதாலும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது..

உயிர் தப்பிய இருவர் – இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த ‘பேங்க் ஒவ் பஞ்சாப்’ வங்கியின் தலைவர் ஜப்பார் மசூத் உள்பட 2 பேர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார் .

விசாரணைக்கு உத்தரவு: இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய 4 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை விரைவில் முடிக்குமாறு அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2016-ஆம் ஆண்டில் நேரிட்ட விமான விபத்தில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர். அதன் பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய விமான விபத்து இதுவாகும்.