இலங்கை

பட்ஜெட்டை எதிர்க்காவிடின் சு.க வுடன் அரசியல் கூட்டு வேண்டாம் – மஹிந்தவிடம் கோரிக்கை !

வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்காவிடில் அந்தக் கட்சியுடன் அரசியல் கூட்டு வைக்கும் பேச்சுக்களை இனியும் நடத்தக் கூடாதென கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்படியாக நடந்துகொள்ளும் ஒரு கட்சியுடன் அரசியல் உறவை வைத்திருப்பது மக்களிடத்தில் மேலும் அதிருப்தியை தேடித் தருமென்றும் அந்த எம் பிக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் வரும் அமைச்சுக்களுக்கும் நிதி ஒதுக்கீடு இருப்பதால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காமல் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதிருக்க சுதந்திரக்கட்சி உத்தேச தீர்மானம் எடுத்துள்ள நிலையில் எதிர்க்கட்சி எம் பிக்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இதேவேளை இந்த விடயத்தில் நிதானமாக நடந்து கொள்ளவேண்டுமெனவும் சுதந்திரக்கட்சியுடன் பேச்சு நடத்தி ஒரு முடிவுக்கு வரலாமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தனது எம்பிக்களிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.