உலகம்

படை பலத்தை அதிகரிக்க வடகொரிய ஜனாதிபதி உத்தரவு

 

வட கொரியா முப்படைகளின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங்-உன் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ள சூழலில் அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த நாட்டு வடகொரியாவின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வட கொரிய கடற்படைக்காக புதிதாகக் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை ஜனாதிபதி கிம் ஜோங்-உன் பார்வையிட்டார். அந்த நீர்மூழ்கிக் கப்பல் மிகவும் திருப்தியளிப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.
மேலும், முப்படைகளின் பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கிம் ஜோங்-உன் உத்தரவிட்டார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட ஆயத்தமாகி வரும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.