விளையாட்டு

பங்களாதேஷ் வீரர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கின்றது 

 

போட்டிகளில் இருந்து விலகியிருப்பதன் ஊடாக, நாட்டில் கிரிக்கெட்டை சீர்குலைக்க வீரர்கள் சதி செய்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட்  சபை குற்றம் சாட்டியுள்ளது.

அந்நாட்டு தேசிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர்.

தமது 11 கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த கிரிக்கெட் நடவடிக்கையிலும் பங்கேற்கப்போவது இல்லையென அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஊதியம் உயர்வு, மேம்பட்ட வசதிகள் மற்றும் உள்நாட்டு ஒருநாள் போட்டித் தொடர்களில் மாற்றங்களை கொண்டுவருதல் என்பன, வீரர்களின் கோரிக்கைகளாக அமைந்துள்ளன.

நேற்றைய தினம் இடம்பெற்ற அவசர கூட்டத்தின்போது, பங்களாதேஷ் கிரிக்கெட்  சபை வீரர்களை விமர்சித்துள்ளது.

அவர்கள் விளையாட விரும்பவில்லை எனின்  , அவர்கள் விளையாடத் தேவையில்லை என, பங்களாதேஷ் கிரிக்கெட்  சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் கூறியுள்ளார்.

வீரர்கள் விளையாடாவிட்டால் என்னத்தைப் பெறப்போகின்றார்கள், கோரிக்கைகளுக்காக விளையாடுவதை ஏன் நிறுத்த வேண்டுமென எனக்கு புரியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சர்ச்சையை தீர்க்கப்படாவிட்டால், நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள, இந்தியாவுடனான, இரண்டு போட்டிகளைக் கொண்ட  டெஸ்ட் தொடர் பாதிக்கப்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் தாம் தொடர்ந்து விளையாடத் தயார் என,  பங்களாதேஷ் இருபதுக்கு-20 அணியின் தலைவராகவும் செயற்படும் ஷகிப் அல்-ஹசன் கூறியுள்ளார்.

“நாம் அனைவரும் கிரிக்கெட் மேம்பட வேண்டுமென விரும்புகிறோம்.  நம்மில் சிலர் இன்னும் 10 வருடங்கள் விளையாடுவார்கள் சிலர் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் விளையாடுவார்கள்.எனினும் எங்களுக்குப் பின் வரும் வீரர்களுக்கு ஒரு நல்ல சூழலை உருவாக்க விரும்புகிறோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.