உலகம்

நைஜீரியாவில் 18 இந்திய மாலுமிகளுடன் கப்பல் கடத்தல்

நைஜீரியாவின் போனி கடற்கரை பகுதி அருகே 18 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.

கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கப்பல் தலைமை அதிகாரி, மும்பையில் உள்ள மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் வெளியிடப்படவில்லை. கடத்தப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆயுதங்களுடன் வந்த நைஜீரிய கடற்கொள்ளையர்கள், மாலுமிகள் பயணம் செய்த கப்பலை தாக்கி கடத்தி சென்றனர்.கப்பல் கடத்தல் நடந்த இடம், கடத்தல் எளிதாக நடக்கும் இடங்களில் முதலிடத்தில் உள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டது.

கப்பல் கெப்டனின் தந்தை கூறுகையில், எனது மகன் ஹொங்காங்கை சேர்ந்த எங்லோ ஈஸ்டர்ன் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கெப்டன் பொறுப்பில் உள்ளார். தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். பணிக்கு செல்லும் முன்னர் இரவு 10.15 மணியளவில் மனைவியுடன் பேசினார். மறுநாள் காலை அவர் கடத்தப்பட்டதாக, அவர் பணியாற்றிய நிறுவனத்திடம் இருந்து வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த மே மாதம் பணிக்கு சென்றா். 4 மாதங்களில் பணிக்கு திரும்புவதாக இருந்தது. அவரை எதிர்பார்த்து காத்திருந்தோம். அதிக வேலை உள்ளதாகவும், விரைவில் வீடுதிரும்புவேன் எனக்கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

அதேநேரத்தில், கடத்தப்பட்ட கப்பல், நைஜீரிய கடற்படை கண்காணிப்பில், பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் விவரத்தை அறியவும், அவர்களை மீ்ட்கவும் உதவ வேண்டும் என நைஜீரிய அரசிடம் இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.