உலகம்

நைகரில் சன நெரிசலில் சிக்கி 20 பேர் பலி !

 

தென்கிழக்கு நைகர் நகரில் ஏற்பட்ட சன நெரிசலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அண்டை நாடான நைஜீரியாவைச் சேர்ந்த அகதிகள் உணவு மற்றும் பணத்திற்காக டிப்பா நகரில், வரிசையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகிழக்கு நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய வன்முறைகளால் இடம்பெயர்ந்த சுமார் 120,000 மக்கள் இப்பகுதியில் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை இந்த முகாமில் வாயில்கள் திறக்கப்பட்டபோது மக்கள் உதவிப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் போர்னோ மாநில ஆளுநரானால் இப்பகுதியில் உள்ள அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.