இலங்கை

நெடுந்தீவில் பருவகால நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம் !

பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 75,000 மீன் குஞ்சுகள் நெடுந்தீவு நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் குறித்த கருத்திட்டமானது தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது.

தேர்;ந்தெடுக்கப்பட்ட நீர்நிலைகளில் மீன் குஞ்சுகளை இறக்கிவிடும் திட்டம் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) கடற்படையினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலும்மயிலும் குகேந்திரன்(வி.கே.ஜெகன்) கலந்து கொண்டு திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

நெடுந்தீவு பிரதேசத்தில் தேரந்தெடுக்கப்பட்ட நீர் நிலைகளான நெலுவிலி குளம்(15000 மீன் குஞ்சுகள்), வடக்குறாவெளி குளம்(15000 மீன் குஞ்சுகள்), பெரிய வெட்டுக்கிளி குளம்(15000) மற்றும் சமனன் குளம்(30000) ஆகிய குளங்களில் சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுதிமதியான 75000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

ஏதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படும் குறித்த மீன் வளர்ப்பு திட்டத்தின் ஊடாக சுமார் 13.5 மெற்றிக்தொன் மீன்களை அறுவடை செய்ய முடியும் என்று துறைசார் நிபுணனர்களினால் மதிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்வின் கருத் திட்டத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்தத் திட்டத்தின் ஊடாக சுமார் 1.6 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட வருமானம் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பயனடையவுள்ளன.

குறித்த மீன்வளர்ப்பு திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட நீர்வாழ் உயிரின வள விரிவாக்கல் உத்தியோகஸ்தர் சங்கீதன், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் நெடுந்தீவு அமைப்பாளர் முரளி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் நெடுந்தீவு பிரதேச செயலாளர் உட்பட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்திய மீனவர்களின் எல்லைமீறிய மீன்பிடிச் செயற்பாடு காரணமாக நெடுந்தீவு பிரதேச கடற்றொழிலாளர்கள் பாரிய வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இவ்வாறான திட்டங்கள் தமக்கு ஆறுதலாக அமைந்துள்ளதாக குறித்த திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நெடுந்தீவு பிரதேசத்தில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். குடாநாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள பருவ கால நீர்நிலைகளையும் ஆராய்ந்து நன்னீர் மீன் வளர்ப்பிற்கு பொருத்தமானவற்றை அடையாளப்படுத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார்ந்தவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.