உலகம்

நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களை ரத்துச் செய்தது பிரிட்டிஷ் எயார்வேஸ் : பயணிகள் தவிப்பு

100-க்கும் மேற்பட்ட விமானங்களை பிரிட்டிஷ் எயார்வேஸ் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்ததால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் கம்யூட்டர் வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹீத்ரோ மற்றும் காட்விக் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் 100- க்கும் மேற்பட்ட விமானங்களை பிரிட்டிஷ் எயார்வேஸ் ரத்து செய்துள்ளது.

முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் இரண்டு விமான நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர். விமான ரத்தால் பயணம் செய்ய முடியாத பயணிகள் 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விமான நிலையத்திற்கும் லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க், பிலேடெல்பியா, பிட்ஸ்பர்க், சார்லோட், நஷ்வில், மற்றும் மியாமியில் இருந்து வரவேண்டிய விமானங்கள் நீண்ட தாமத்திற்குப் பிறகு தரையிறங்கின. கணினியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுக்கான காரணத்தை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.