இலங்கை

நீதியான விசாரணைகள் நடந்து முடியும்வரை அமைச்சுப் பதவி ஏற்கோம் – மாநாயக்கர்களிடம் முஸ்லிம் தலைவர்கள் திட்டவட்டம் !

 

அண்மைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடந்து முடியும்வரை அமைச்சு மற்றும் இதர பொறுப்புக்களை ஏற்கப் போவதில்லையென முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று கூட்டாக மாநாயக்க தேரர்மாரிடம் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் அரசியல் முக்கியஸ்தர்கள் மாநாயக்க தேரர்களிடையேயான சந்திப்பு இன்று கண்டியில் நடைபெற்றது.

குற்றம்சாட்டப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் பதவிகளை ஏற்குமாறு தேரர்மார் இங்கு கேட்டுக் கொண்டனர். குறிப்பாக ரிஷார்ட் பதியுதீன் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து தன்னை க்ளியர் செய்து கொள்ளவேண்டுமெனவும் தேரர்மார் கேட்டுள்ளனர்.

இங்கு பேசிய ரிசார்ட் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் போலித்தன்மை குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளார். அப்போது பதிலளித்துள்ள தேரர்மார் விசாரணைகள் இல்லாத இதர பிரமுகர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று செயற்பட கேட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதும் அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதால் – விசாரணைகள் முடிந்து நியாயமான ஒரு தீர்ப்பு கிடைக்கும்வரை எந்த பதவிகளையும் ஏற்கப்போவதில்லையென்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துவரும் கருத்துக்கள் குறித்து கடும் அதிருப்தியை மாநாயக்க தேரர்மார் வெளியிட்டுள்ளனர். அந்த கருத்துக்களில் தங்களுக்கும் உடன்பாடு இல்லையென்று முஸ்லிம் அரசியல்வாதிகள் மாநாயக்க தேரரிடம் கூறியுள்ளதுடன் அதற்காக வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.