உலகம்

நிலாவின் சுற்றுப்பாதையை எட்டும் சந்திரயான் 2

சந்திரயான் 2 விண்கலம் வரும் 20ம் தேதி நிலாவின் சுற்று வட்டப்பாதையை எட்டும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இது குறித்து ஆமதாபாத்தில் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது, ‘கடந்த 22ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பின் அதன் சுற்றுவட்டப்பாதையின் உயரம் 5 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக வரும் புதன் அதிகாலை 3.30 மணியளவில் சுற்றுவட்டப்பாதை மேலும் உயர்த்தப்படும். நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலத்தை அனுப்புவதற்கான பணி முக்கியமானது. இதன் பின் புவி சுற்று வட்டப்பாதையிலிருந்து விலகி சந்திரயான், நிலவை நோக்கி பயணிக்கும். வரும் 20ம் தேதி அது நிலாவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும். அதன் பின்பும் அதன் சுற்றுவட்டப்பாதை தொடர்ந்து உயர்த்தப்படும்.

இறுதியாக செப்.7 ல் சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து பிரிந்து விக்ரம் கலம் நிலாவின் தென்துருவத்தில் தரையிறங்கும். விண்கலம் நல்ல நிலையில் உள்ளது அதன் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. வரும் டிசம்பரில் சிறிய செயற்கைகோள்களை ஏவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.- இவ்வாறு சிவன் கூறினார்.