உலகம்

நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் ஜெட் எயார்வேஸ் !

 

சர்வதேச விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் ஜெட் எயார்வேஸ் நிறுவனத்தை தற்காலிக மூட தற்போதைய எஸ்பிஐ தலைமையிலான நிர்வாகம் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சில தினங்களுக்கு முன் ஜெட் எயார்வேஸ் நிறுவனத்துக்கு வர வேண்டிய 1500 கோடி ரூபாய் முதலீடுகள் வராமல் போனது. இதனால் நிறுவனத்தை நடத்துவதே மிகவும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதே நேரத்தில் ஜெட் எயார்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் ஜெட் எயார்வேஸ் நிறுவன பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்திருந்ததையும் தற்போது பின் வாங்க வைத்திருக்கிறார்கள் எஸ்பிஐ வங்கியினர்.

இதிஹாட் (Ethihad) மற்றும் டிபிஜி கேப்பிட்டல் (TPG Capital) ஆகிய இரண்டு நிறுவனமுமே நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கக் கூடாது என வெளிப்படையாகச் சொல்லி விட்டன . அப்படி மீறி வாங்குவதாகப் பேசிக் கொண்டிருந்தால் கூட இந்த ஏலத்தில் இருந்து இருவருமே விலகிக் கொள்வோம் எனவும் எஸ்பிஐ வங்கியை எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் மொத்தம் 124 விமானங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜெட் எயார்வேஸ் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஒற்றை இலக்கத்தில் விமானங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது ஜெட் எயார்வேஸ் சார்பில் 5 ஏடிஆர் ரக விமானங்களும், ஒன்று அல்லது இரண்டு போயிங் 737 ரக விமானங்கள் மட்டுமே பறந்து கொண்டிருக்கின்றன.

விமான நிறுவனத்தை நடத்த பணம் இல்லை என்பது ஒரு பக்கம் பிரச்னையைக் கொடுத்தால், மறு பக்கம் விமானங்களை இயக்காவிட்டால் அந்த வழித்தடங்களில் வேறு விமான நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விடும் எனச் சொல்கிறார்கள். இப்படி எல்லா வழிதடங்களையும் பறி கொடுத்துவிட்டால் யார் ஜெட் எயார்வேஸை வாங்குவார்கள், பிறகு ஜெட் எயார்வேஸில் வாங்க என்ன இருக்கிறது..? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

ஏற்கனவே பயணிகள் விமான இயக்குநரகத்தில் இருந்து ஜெட் எயார்வேஸின் வழித் தடங்களில் ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ மற்றும் டாடா விஸ்தாரா களம் இறங்க பல்வேறு அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இந்திய முதலீட்டாளர்களுக்கு ஜெட் எயார்வேஸ் நிறுவனம் மீது நம்பிக்கை குறைந்து வருவதையும், மற்ற விமான நிறுவனங்களான ஸபைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனம் மீது நம்பிக்கை அதிகரிப்பதையும் அந்தந்த நிறுவனப் பங்குகள் விலை அதிகரிப்பதில் பார்க்க முடிகிறது.