விளையாட்டு

நியூசிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்பில் உள்ள நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது. மற்றொரு போட்டியில் ஆசிய அணிகளான பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் சந்திக்கின்றன.

உலகக் கிண்ணகிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. இதில் லீட்சில் நடக்கும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. எஞ்சிய 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் உள்ள சர்ப்ரஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானுக்கு இன்றைய போட்டி பெரிய அளவில் கடினமாக இருக்காது. தங்களது ரன்ரேட்டை உயர்த்திக்கொள்ள இந்த போட்டியை பயன்படுத்திக்கொள்ள முனைப்பு காட்டுவார்கள்.

இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சு தாக்குதல் மூலம் 224 ரன்னில் கட்டுப்படுத்தியதை பாகிஸ்தான் வீரர்கள் மறந்து விடமாட்டார்கள். அந்த போட்டியில் இந்தியா பெரும்பாடு பட்டு 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே ஆப்கானிஸ்தானை எந்த வகையிலும் சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வீரர்களை பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

லண்டன் லோர்ட்சில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் நடப்பு சம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வி என்று 12 புள்ளியுடன் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா, முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்து விட்டது.

நியூசிலாந்து அணி 5 வெற்றி, ஒரு முடிவில்லை, ஒரு தோல்வி என்று 11 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. முதல் 6 போட்டிகளில் தோல்வியே சந்திக்காத நியூசிலாந்து அணி, முந்தைய லீக்கில் பாகிஸ்தானிடம் தோற்றது.

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில்,கொலின் முன்ரோ ஆகியோரின் துடுப்பாட்டம் கடந்த சில ஆட்டங்களில் சரியில்லை. அவர்கள் நிலைத்து நின்று விளையாடினால் நடுவரிசை துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடி குறையும். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன், ஆல்-ரவுண்டர்கள் கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி அரைஇறுதியை உறுதி செய்து விடும். ஆனால் அது எளிதல்ல . இரு அணிகளும் ஏறக்குறையை ஒரே மாதிரியான பலத்துடன் காணப்படுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

இவ்விரு அணிகளும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 136 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 90-ல் ஆஸ்திரேலியாவும், 39-ல் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. 7 போட்டிகளில் முடிவில்லை. உலகக் கிண்ண கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் இவ்விரு அணிகளும் 10 போட்டிகளில் சந்தித்து அதில் 7-ல் ஆஸ்திரேலியாவும், 3-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.