இலங்கை

நியாயத்துக்கும் இனவாதத்திற்குமிடையிலான போட்டி இது – பதவி தூசு என்கிறார் ரிஷார்ட் !

 

“ என் மீது சுமத்தப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுக்கள் எந்தவிதமான அடிப்படைகளும் அற்றவை . இது நியாயத்திற்கும் இனவாதத்திற்குமிடையிலான போட்டி. இதில் எது வெல்கிறது என்று பார்ப்போம்.இந்த பதவி பகட்டு எல்லாம் எங்களுக்கு தூசு.ஆனால் யாரோ சொல்கிறார்கள் என்று ஓட நாங்கள் தயாரில்லை..”

இவ்வாறு சற்று முன்னர் “தமிழன்” செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்டார் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன்.

“அமைச்சர் ரிஷார்ட் பதவி விலகப் போகிறார்… அதற்கு அழுத்தங்கள் வந்துவிட்டன என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளனவே.. அவை உண்மைதானா என்று கேட்கப்பட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது ,

என்னிடம் ஜனாதிபதியோ அல்லது வேறு யாருமோ அழுத்தங்கள் வழங்கவில்லை.பதவி விலகும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்கிறேன்.

என் மீது வைக்கப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுக்கள் எந்த அடிப்படையும் அற்றவை .நம்பிக்கையில்லா பிரேரணை நியாயத்திற்கும் இனவாதத்திற்குமிடையிலான போட்டி. அதில் எது வெல்கிறது என்று பார்ப்போம்.

இன்று எனது சமூகத்தின் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்படும்போது என் மீது வன்மங்கள் பிரயோகிக்கப்படும்போது இந்தப் பதவி பட்டங்கள் எங்களுக்கு பெரிதல்ல.அதை தூக்கி வீசிவிட்டு செல்வதும் எங்களுக்கு பெரிதல்ல. ஆனால் யாரோ சொல்கிறார்கள் என்று நான் ஏன் விலக வேண்டும்.நான் ரணிலின் ஏஜெண்டும் அல்ல மைத்திரியின் ஏஜெண்டும் அல்ல.அவர்கள் வரச் சொல்லும்போது வரவும் போகச் சொல்லும்போது போகவும் நாங்கள் ஒன்றும் அவர்களின் அடியாட்கள் அல்ல.

இன்று அடிமைப்பட்ட நிலையில் உள்ள மக்களின் குரலான எம்மை எந்த ஒரு காரணமும் இல்லாமல் போகச் செல்வது தார்மீகமானதா என்று நான் கேட்கிறேன்.எமது கட்சி திங்கட்கிழமை கூடவுள்ளது.அதில் இப்போதைய நிலைமைகள் குறித்து கட்சி ஆராயும் – என்றார் அமைச்சர் ரிஷார்ட்