இலங்கை

நாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்

வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நாட்டின் பல பகுதிகளில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 12 மாடி கார் தரிப்பிடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக கொழும்பு 07 பகுதியிலுள்ள நொரிஸ் கனல் வீதியில் கண் மருத்துவமனைக்கு அண்மித்த பகுதியில் கார் தரிப்பிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு பொது மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி வாகனத் தரிப்பிட வசதிகள் இல்லாததன் காரணமாக குறித்த பகுதியில் அதிகளவு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலைமையானது அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அனுமதிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது.

அதன்படி, இதன் முதலாவது திட்டம் கொழும்பு லேக்ஹவுஸ் அருகே தொடங்கியுள்ளதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்காக 1.113 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதேவேளை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, டி.எஸ்.சேனநாயக்க மாவத்தை சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ், நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் வாகனத் தரிப்பிடங்கள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் கொழும்பு புறநகர் பகுதிகளான பத்தரமுல்ல, அனுராதபுரம், குருநாகல் ஆகிய இடங்களிலும் கார் தரிப்பிடங்களை அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.