Breaking News

நாடு திரும்பும் இலங்கையருக்கு முன்கூட்டியே PCR பரிசோதனை செய்துவிட்டு அனுப்ப லெபனான் இணக்கம் !

 

தாய்நாட்டுக்கு திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் PCR பரிசோதனையைக் கட்டணமின்றி தமது நாட்டிலேய மேற்கொள்வதற்கும் லெபனான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக கொவிட் 19 நோய்த்தொற்று பரவல் அதிகளவில் உள்ள நாடுகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனையை அந்தந்த நாடுகளிலேயே மேற்கொண்டு மருத்துவ அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளைக் கண்டறியுமாறு ஜனாதிபதி அண்மையில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

வெளிநாடுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது மீண்டும் நாட்டுக்கு வருகைதந்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு மேலதிகமாக ஆகும்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதுவராலயம் லெபனான் வெளிநாட்டு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் – இலவசமாக அந்த நாட்டிலேயே PCR பரிசோதனையை மேற்கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் கணிசமானவர்கள் கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் போது இந்த நிலைமை மேலதிக பிரச்சினையாக உள்ளதனை கொவிட் ஒழிப்பு செயலணியுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளில் இருந்தும் மீண்டும் நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு, அந்தந்த நாடுகளில் வைத்தே PCR பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.