உலகம்

நவாஸ் ஷெரீஃப் பிணையில் விடுதலை

3 மாத சிறைவாசத்திற்கு பின்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சின் அனுமதி பெற்று, நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் தேதி ஷெரீஃபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பிணை வழங்க வேண்டும் என்று கோரி, நவாஸ் சார்பில் அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நவாஸுக்கு 6 வாரங்கள் பிணை வழங்குவதாக அறிவித்தது. பிணை உத்தரவு லாகூர் சிறை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதையடுத்து நவாஸ் ஷெரீஃப் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார்.