Breaking News

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா: பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் பிரதமரின் பணிப்புரை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் அதிகபட்ச பக்தர்களை ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிணர் அனில் ஜாசிங்க ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் போது சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பக்தர்களை ஆலய வளாகத்தினுள் அனுமதிக்குமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு யாழ். மாநகர பதில் முதல்வர் து. ஈசன் அண்மையில் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நயினாதீவு, மடு தேவாலய திருவிழாக்களில் அதிகபட்சம் 300 பக்தர்களை பங்கேற்க அனுமதிக்கப்பட்டது அதற்கமைய நல்லூர் ஆலய வளாகத்திலும் 300 பக்தர்களையேனும் பங்கேற்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் தற்போது யாழ்ப்பாணத்திறுகு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி பிரதமரின் பணிப்புரை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.