Breaking News

நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்.

நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பு காரணமாக இன்று  காலமானார்.

சின்னபுள்ள படத்தில் அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ். இவர் அண்மையில் வெளியான எல்.கே.ஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். 2009-இல் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, 2014-இல் அவர் அதிமுகவில் இணைந்தார்.

இவர் நடிகர், அரசியல்வாதி மட்டுமில்லாது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்நிலையில், அவர் மக்களவைத் தேர்தலுக்காக ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரம் சென்றிருந்ததாக தெரிகிறது.  அப்போது அவருக்கு இல்லத்தில் வைத்து திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.

ஜே.கே.ரித்திஷுக்கு வயது 46.