உலகம்

நகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி – ஜனாதிபதி எர்டோகன்

துருக்கியில் 24 மாகாணங்களுக்கு உட்பட்ட 538 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் ஜனாதிபதி தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆளும் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. தனது கட்சி 778 நகராட்சிகளில் வெற்றி பெற்றதாகவும், இதில் 16 மிகப்பெரிய நகரங்களின் மேயர் பதவியும் அடங்கும் என எர்டோகன் அறிவித்தார்.

தனது கட்சியை, தொடர்ந்து 15-வது முறையாக வெற்றி பெறச்செய்ததற்காக மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என அவர் உறுதியளித்தார்.

இதற்கிடையே துருக்கியின் 3 முக்கிய நகரங்களான இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர் ஆகிய நகரங்களின் மேயர் பதவியை எதிர்க்கட்சியான குடியரசு மக்களின் கட்சி வென்று இருக்கிறது. குறிப்பாக தலைநகர் அங்காராவில் குடியரசு மக்களின் கட்சி வெற்றி பெற்றிருப்பது எர்டோகனுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.