இலங்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா கொடுப்பனவு – அமைச்சர் மனோ !

 

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், மலையக மக்களை, தேசிய நீரோட்டத்தில் இணைய விடாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்ததாகவும் குற்றம் சுமத்தினார்.

தேசிய தொலைக்காட்சியில் நேற்று (17) பின்னிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைய விடாமல் தடுத்தனர். அது ஒரு பாவச் செயலாகும். மக்களை ஓர் அறைக்குள் வைத்து மூடி, திறப்பை தம்வசம் வைத்துக் கொண்டது போல, வாக்குகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, தேர்தல் காலங்களில் பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி, பெற வேண்டியதை பெற்றுக் கொண்டார்கள். நாங்கள் அவ்வாறு அரசியல் வியாபாரம் செய்யவில்லை. இப்போது நாம் அந்தக் கதவுகளை உடைத்துள்ளோம்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் நாம் அறிவோம். அரசாங்கத்திடம் நாம் கேட்டுக் கொண்ட 50 ரூபா நாளாந்த மேலதிகக் கொடுப்பனவு அடுத்த மாதத்திலிருந்து வழங்கப்படும். அது தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டுள்ளோம். ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இந்தத் தொகை வழங்கப்பட வேண்டிய பொறிமுறை பற்றியே ஆராய்ந்து வருகிறோம்.

ஆயிரம் ரூபா சம்பளம் என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் அறிவிக்கப்பட்டதாகும். தற்போது தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளம் போதுமானதல்ல. அதனை அதிகரிக்க பெருந்தோட்டத் துறை மறுசீராக்கம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதேவேளை, திருகோணமலை கன்னியா பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் அந்நிகழ்ச்சியின் போது குறிப்பிட்டார். வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் பேசுவோருக்கிடையில் எழுதப்படாத ஒப்பந்தம் காணப்படுவதாகவும், மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுவதே அவர்களது தொழிலாக இருக்கிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இனவாதம் பேசுவதாக சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்துடனான எதிர்கால பயணம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மனோ கணேசன், நல்லாட்சி அரசாங்கத்தில் ஏராளமான காத்திரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வப்போது இடம்பெறும் சிறு தவறுகளை பெரிதுபடுத்திப் பேசும் சிலர், மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய நல்லிணக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்வேன். நான் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் நாடோடி போல் சென்று, இரவு பகல் பாராமல் பணியாற்றுகிறேன். நாம் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக செயற்படவில்லை, அங்கு குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை. பத்திரிகையாளர்களை கொலை செய்யவுமில்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏனைய பங்காளிக் கட்சிகள் இணையும் வகையில் புதிய கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

(நிர்ஷன் இராமானுஜம்)