Breaking News

தொண்டா மறைவின் பின்னர்… – ஸ்பெஷல் கட்டுரை !

 

• கடைசி நேரத்தில் தந்தை ஆறுமுகத்திற்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்ட கோதை நாச்சியார்.

• அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய இ.தொ.கா பிரமுகரின் எஸ்.எம்.எஸ்.

• தனது கட்சியின் முக்கிய பதவியை தன் புதல்விக்கு வழங்கவிருந்த தொண்டா

• அடுத்த தலைவர் தெரிவில் பிரச்சினை வருமா?

 

 

கடந்த 26ஆம் திகதி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மரணித்த செய்தி கொழும்பை அதிர வைத்த செய்தியாக அமைந்திருந்தது.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு கலந்துகொள்ள கொட்டகலையிலிருந்து கொழும்பு வந்த ஆறுமுகம் தொண்டமான் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த புதிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார். தனது கட்சி உறுப்பினர்களுடன் உயர்ஸ்தானிகரை சந்தித்த அவர், பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் பத்தரமுல்லையில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற தொண்டமான், குளித்த பின்னர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துள்ளது. அவருடன் பேச குடும்ப உறுப்பினர்கள் முயன்ற போதும் அவர் அப்படியே சரிந்ததால் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அங்கிருந்த அவரது புதல்வர் நடவடிக்கை எடுத்தார்.

கோட்டாவுக்கும் மகிந்தவுக்கும்
பறந்த தகவல்!

தொண்டமானின் இந்த நிலவரம் குறித்த தகவலை முன்னாள் மாகாணசபை அமைச்சர் ரமேஷ், ஜனாதிபதி கோட்டாவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். உடனடியாக சுகாதார சேவைகள் பணிப்பாளரைத் தொடர்புக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய, தலங்கம வைத்தியசாலைக்கு விசேட மருத்துவ நிபுணர்களை அனுப்பி அமைச்சருக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் தொண்டமான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் முன்னரேயே உயிரிழந்தார்.

அதேபோல் பிரதமர் மகிந்தவுக்கும் இந்த தகவலை அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த பிரதமர், உடனடியாக வைத்தியாசாலைக்கு விரைந்தார். இதர கட்சித் தலைவர்களுக்கும் இந்த தகவல் பறந்தது. முன்னாள் அமைச்சர் மனோ கணேசனை தொடர்பு கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் இந்த தகவலை அவருக்கு கூறியதும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு விரைந்தார். செல்லும் வழியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இதர பங்காளிக் கட்சித் தலைவர்களைத் தொடர்பு கொண்டு இந்த தகவலை பகிர்ந்த மனோ, ‘அவருடன் நாங்கள் எவ்வளவு தான் அரசியல் ரீதியிலான விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும் அவர் எமது சக நண்பர். எனவே, நாம் கட்சி பேதங்களை மறந்து அஞ்சலி செலுத்த வேண்டும்” என அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

அதேபோல் வைத்தியசாலைக்கு ரவி கருணாநாயக்க, மகிந்த அமரவீர, பந்துல குணவர்தன உட்பட பலரும் வந்திருந்தனர். வைத்தியாசாலைக்கு விரைந்த பிரதமர் மகி;ந்த அங்கு ஜீவன் தொண்டமானி;;டம் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார். பின்னர் தொண்டாவின்; மகள் விஜியுடன் பேசி அவருக்கும் ஆறுதல் கூறினார் மகிந்த. ‘வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் போது உங்களை சந்தித்து வந்தது பற்றியே கூறிக் கொண்டிருந்தார் அப்பா” என்று அவர் மகிந்தவிடம் அழுதபடியே கூறினார்.

அனைவரின் ஆறுதல்களும் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து நள்ளிரவு பூதவுடல் மரணப் பரிசோதனையின் பின்னர் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு ஜயரத்ன மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பூதவுடலை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட ஜனாதிபதி முயன்றபோதும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் செல்லவில்லை என்று தெரிகின்றது.

தொண்டா வைத்திருந்த திட்டம்!

அமரர் ஆறுமுகம் தொண்டமான் கடந்த ஒரு வருட காலமாகவே குடும்ப உறுப்பினர்களுடன் மிக நெருக்கமாகப் பழகி வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததே அதற்கான காரணமாகும்.

இதனால் தான் இலங்கைக்கு தற்காலிகமாக வந்த அவரது புதல்வி விஜயலட்சுமியை நிரந்தரமாக இங்கேயே தங்க வைத்து விட்டார். கடந்த ஒரு வருட காலமாகவே விஜி தன் தந்தைக்கு ஒரு ஆலோசகர் போலவே செயற்பட்டு வந்தார்.

இங்கு ஒரு மிக முக்கிய விடயத்தினைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது ஆறுமுகம் தொண்டமான் தனது இரண்டாவது புதல்வி விஜிக்கு கட்சியின் மிக முக்கிய பொறுப்பொன்றை வழங்கவிருந்தார். அதற்கான கடிதமும் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தனது பிறந்த தினம் (29ஆம் திகதி) அன்று அதனை மகளுக்கு வழங்கவிருந்தார் தொண்டமான். ஆனால் துரதிருஷ்டவசமாக அது சாத்தியப்படாமல் போயிற்று.; தனது ஆலோசகர் போல செயற்பட்ட விஜிக்கு தொண்டா கட்சிக்குள் என்ன பதவியை வழங்கவிருந்தார் என்பதை இந்த சமயத்தில் இங்கு குறிப்பிட நான் விரும்பவில்லை.

எவ்வாறாயினும், இறுதிக்கிரியை ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த அந்த சமயம் இன்னொரு சோகமான நிகழ்வும் நடந்தது. தொண்டமானின் மூத்த புதல்வி கோதை நாச்சியார் ஓமான், மஸ்கட் நகரில் மருத்துவராக பணி புரிகின்றார். தந்தை மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் அவர். அவரின் மீது ஆறுமுகமும் உயிர் போல பாசம் வைத்திருந்தார். ஆனால், தற்போதைய கொரோனா சூழ்நிலையால் உடனடியாக அவரால் கொழும்புக்கு வர முடியாமல் போனது.

குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உதவியை நாடினர். இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் சாதாரண விமான சேவைகள் நடக்காத காரணத்தினால் தனியார் ஜெட் விமானம் ஒன்றை சேவைக்கு அமர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதன்படி தமது சொந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் ஜெட் விமானமொன்று அவரை ஏற்றிக்கொண்டு மஸ்கட்டிலிருந்து இந்தியாவின் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு விமான நிலையம் ஊடாக வியாழன் நள்ளிரவு கொழும்பை வந்தடைந்தது.

ஆனாலும், கோதை நாச்சியார், தந்தையின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள இப்பொழுதுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் சட்ட ஏற்பாடுகள் இடம் அளிக்கவில்லை. இதனால் அவர் நீர்கொழும்பு, வைக்கால பகுதியில் உள்ள டொல்பின் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். பதினைந்து நிமிடமாவது தந்தையைப் பார்க்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்கள் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளதால் அவரை அனுமதிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டது.

 

இருந்தாலும் தந்தையின் முகத்தை எப்படியும் பார்த்துவிட வேண்டுமென அவர் துடித்ததால் அரச உயர்மட்டத்திலிருந்து இவருக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. அதன் அடிப்படையில் கடும் நிபந்தனைகளுடன் தந்தையாரின் முகத்தைப் பார்த்து நேரடியாக அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. வியாழக்கிழமை இ.தொ.கா தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடல் வெள்ளிக்கிழமை முற்பகல் வெவன்டனுக்கு எடுத்துச் செல்லப்படவிருந்தது. அதற்கு முன் அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை இ.தொ.காதலைமையகத்திற்கு இராணுவ மற்றும் சுகாதார பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் அழைத்துவரப்பட்ட கோதை நாச்சியாருக்கு 15 நிமிடங்கள் மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கே எவரையும் இருக்க சுகாதார அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அந்த 15 நிமிட அஞ்சலியின் பின்பு மீண்டும் நீர்கொழும்பு ஹோட்டலுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். தந்தையின் இறுதிக்கிரியைகளில் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாத நிலையில் கதறியழுதபடி இ.தொ.கா தலைமையகத்தை விட்டு வெளியேறினார் கோதை நாச்சியார்.

அரசை அதிருப்திக்குள்ளாக்கிய இ.தொ.கா பிரமுகரின் எஸ்.எம்.எஸ்.

வெள்ளிக்கிழமை காலை இலங்கை விமானப்படை மைதானத்திலிருந்து இருந்து புறப்பட்ட எம்.17 ரக விசேட ஹெலிகொப்டர் குடும்ப உறுப்பினர்களுடன் இறம்பொட – வெவன்டன் நோக்கி புறப்பட்டது. கம்பளையில் தரையிறங்கிய ஹெலிகொப்டரில் இருந்து இறக்கப்பட்ட பூதவுடல் தாங்கிய பேழையை தரை வழியாக மக்கள் அஞ்சலியுடன் எடுத்துச் செல்வதே ஏற்பாடாக இருந்தது. அங்கு தான் பிரச்சினையே ஆரம்பமானது.
மக்கள் கூட்டம் சுகாதார விதிமுறைகளை மீறி இருந்தமையும், தந்தையின் பின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜீவன் தொண்டமான் ஜீப்பில் வணக்கம் செலுத்தியபடியே சென்றமை தேர்தல் மற்றும் சுகாதார ஒழுங்குவிதிகளை மீறியது என்பதாலும் பெரும் சர்ச்சை எழுந்தது. சிலர் அரசாங்கத்தைக் கடுமையாகக் குறைக் கூறி விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடினார். அதன் பின் இது தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார சட்டத் திட்டங்களை மீறுவதால் இப்படி மக்களை ஒன்று திரட்டி ஊர்வலம் போவதை நிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர். அனில் ஜாசிங்க இ.தொ.காவின் முக்கிய பிரமுகர் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு எஸ்;.எம்.எஸ் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்த எஸ்.எம்.எஸ்ஸ{க்கு வந்த பதில் அனைவரையும் அதிர வைத்தது.

‘நீங்கள் உங்கள் எல்லைக்குள் நின்றுகொள்ளுங்கள். இது எங்கள் விடயம். நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்” என்பது தான் பதிலாக வந்த அந்த எஸ்.எம்.எஸ்ஸின் ஆங்கில மொழிப்பெயர்ப்பாகும்.
இ.தொ.கா பிரமுகரின் இந்த பதில் அரசுக்கு கடும் எச்சரிக்கையையும் விசனத்தினையும் ஏற்படுத்தியது. ஏற்கெனவே மரண ஊர்வல விமர்சனங்களினால் கொதிப்படைந்திருந்த அரச உயர்மட்டம் நுவரெலியாவில் உடனடியாக சனிக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கினை அமுல்படுத்தியது. இன்று ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு முழு நாளும் நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும். அதேசமயம் அரச முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு அரச மரியாதைகளுடன் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி நிகழ்வை நடத்துவர்.

ஜீவன் வேட்பாளர் எனின்
கட்சித் தலைவர் யார்?

ஜீவன் குமாரவேல் தொண்டமானை கட்சியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்திற்கு ஆறுமுகம் சார்பில் களமிறக்கத் தீர்மானித்து அதனைப் பேச ஒரு குழு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் சென்றிருந்தது.
அவர்கள் கீழ்மாடியில் காத்துக் கொண்டிருந்த போது மேல்மாடியில் இந்தியப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் பிரதமர் மகிந்த. அந்த உரையாடல் முடிந்த கையோடு கீழே இறங்கி வந்து
இ.தொ.கா முக்கியஸ்தர்களை சந்தித்தார் பிரதமர்.இந்தியப் பிரதமர் தெரிவித்த அனுதாபத்தை இ.தொ.கா முக்கியஸ்தர்களிடம் பகிர்ந்தார் மகிந்த.

 

பின்னர் ஆறுமுகம் தொண்டமானின் மரண சான்றிதழைப் பிரதமரிடம் கையளித்தார் செந்தில் தொண்டமான். பின்னர் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமானை களமிறக்கும் கட்சியின் தீர்மானத்தினை பிரதமரிடம் இ.தொ.க பிரமுகர்கள் தெரிவித்தனர். கட்சி கூறும் விடயத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரிடம் தெரிவிப்பதாக மகிந்த இதன்போது சொன்னார்.ஆறுமுகத்தின் பூதவுடலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைக்கவே அவரது குடும்பத்தினர் உத்தேசித்தனர். ஆனால் சுகாதார பாதுகாப்பு மற்றும் இடவசதி போன்ற காரணங்களுக்காக அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த பின்னணியில் இன்று அமரர் ஆறுமுகத்தின் இறுதிக்கிரியை நோர்வூட் மைதானத்தில் நடைபெறுகின்றது.

தேர்தலுக்கு முன்னர் கட்சியின் தலைவர் பதவி யாருக்கு என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த பதவிக்கு ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான், விஜயலக்ஷ்மி தொண்டமான், மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. பொதுச் செயலாளர் பதவியில் அனுஷா சிவராஜா உடனடியாக விலகும் சாத்தியமில்லை என்று தெரிகின்றது. தொண்டமான் என்ற பெயரில் வரும் இக்கட்சி ஓர் குடும்பக் கட்சி அல்ல. இக்கட்சி தொழிலாளர்களுக்கான கட்சி என்றால் மருதபாண்டி ராமேஸ்வரனை தலைவராக நியமித்து மக்களின் மனங்களை வெல்ல இதுவொரு நல்ல சந்தர்ப்பம். அதேவேளை விஜயலக்ஷ்மி அரசியலுக்கு முழு நேரம் வந்தால் அவரையும் ஒரு பொறுப்பில் அமர்த்தி பெண் ஆளுமையை மக்கள் சேவைக்கு பயன்படுத்த கட்சிக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

மறுபுறம், எப்படியோ ஆறுமுகம் தொண்டமானின் மறைவினால் ஏற்பட்டுள்ள அனுதாபம் ஜீவன் தொண்டமானின் வாக்குகளாக மாறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிரடி ஆளுமை ஒன்று இ.தொ.காவிற்குள் உருவாக வேண்டும். இப்பொழுதுள்ள சிரேஷ்டஉறுப்பினர்கள் அதற்கு விட்டுக்கொடுப்பு
டன் செயற்பட வேண்டும். விட்டுக்கொடுப்புடன் செயற்படாத பட்சத்தில் கட்சி பிளவுறுவதனைத் தவிர்க்க முடியாது. அப்படி கட்சி பிளவடையும் பட்சத்தில் அது அவர்களுக்கே வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு பாடத்தினையும் கற்றுக் கொடுக்கும் என்றே கூற முடியும்.

– ஆர்.சிவராஜா –

(கறுப்பு வெள்ளையில் உள்ள படங்கள் அமரர் தொண்டமானின் இளமைக்கால படங்கள் )