Breaking News

தேர்தல் மேலும் தாமதமாகும் அறிகுறி – இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தவும் ஆலோசனை !

 

– நமது நிருபர் –

எதிர்வரும் பொதுத் தேர்தலை ஒகஸ்ட் மாத முற்பகுதியில் நடத்த தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

ஆனால் சுகாதார அமைச்சு கூறும் சுகாதார வழிகாட்டியை பின்பற்ற தேவையாயின் அதற்கு போதியளவு கால அவகாசம் தேவையென தேர்தல் ஆணைக்குழு கருதுவதாக தெரிகிறது.

வாக்காளர் அட்டை விநியோகம் ,வாக்களிப்போருக்கு விஷேட மையை விரலில் சுகாதார பாதுகாப்புகளுடன் தடவுவது , தேர்தல் உத்தியோகத்தர்களுக்கான விசேட ஆடைகள் , வாக்கெடுப்பு – வாக்கு எண்ணும் நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு உட்பட தேர்தல் ஏற்பாடுகளை செய்ய போதியளவு கால அவகாசம் உள்ளதா என்பதை தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது.

நாளை கொழும்பில் கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் இதனை தீவிரமாக ஆராயவுள்ளனர்.

சமூக இடைவெளிக்குள் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவேண்டுமென்பதால் இரண்டு கட்டங்களில் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்தும் ஆர்யபடவுள்ளது.

“ அடுத்தடுத்த நாள் தேர்தலை நடத்த சட்டத்தில் இடமில்லை. இன்று வாக்களிப்பு நடந்தால் 14 நாட்களின் பின்னரே அடுத்த வாக்களிப்பு நடைபெற வேண்டும்.வாக்குகளை என்னும் விடயத்திலும் சிக்கல் இருக்கக் கூடாது.எனவே நாளை ஆணைக்குழு இவற்றை விரிவாக ஆராயும்..” என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் கூறின.

இந்த நிலைமையில், தேர்தல் ஒகஸ்ட் மாதத்தையும் தாண்டுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.