Breaking News

தேர்தல் முடிவுகளை அறிவிக்க ஓரிரு தினங்களாகுமென்கிறது தேர்தல் ஆணைக்குழு !

 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிவிக்க இரண்டு அல்லது மூன்று தினங்களாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெறும் தினமான ஒகஸ்ட் 5ஆம் திகதி இரவு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாது எனவும், வாக்கு பெட்டிகள் அதிவுயர் பாதுகாப்புக்கு மத்தியில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வைக்கவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த அடுத்த தினமான ஒகஸ்ட் 6ஆம் திகதி காலை முதல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அன்றைய தினம் இரவு வேளைக்குள் நாட்டை ஆளப்போகும் கட்சி அல்லது சுயேட்சைக்குழு எது என்பது தொடர்பில் உறுதியாக அறிந்துகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

விருப்பு வாக்குகளை கணக்கெடுத்து நிறைவு செய்ய இரண்டு தினங்கள் எடுக்கும் என மஹிந்த தேசப்பிரிய கூறுகின்றார்.

வாக்கெண்ணும் அதிகாரிகளுக்கு இடையில் சமூக இடைவெளியை பேணுதல், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.