உலகம்

தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் : ஆஸ்திரேலியாவில் தற்கொலைக்கு முயலும் அகதிகள்

 

ஆஸ்திரேலியாவில் ஆட்சி செய்து வரும் லிபரல் கட்சி அகதிகள் விவகாரத்தில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறது.

2013–ம் ஆண்டு முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் அந்த அரசு, படகு மூலம் வரும் அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளது. அதன்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மனுஸ் மற்றும் நவுரு தீவுகளில் தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் அண்மையில் பொது தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தால் தங்களின் எதிர்காலம் மாறக்கூடும், தாங்கள் விரைவில் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவோம் என அகதிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால், ஆளும் லிபரல் தேசிய கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.

இந்நிலையில், அகதிகள் குறித்து கடுமையான சட்டங்களை செயற்படுத்தியுள்ள அதே ஆளும் தரப்பு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பது தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கடும் விரக்தி அடைந்துள்ள அகதிகள் பலர் தற்கொலைக்கு முயன்று வருகின்றனர். இதுவரை 10–க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.