Breaking News

தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற அபிப்பிராயத்தை கோர தேர்தல் ஆணைக்குழு யோசனை !

நாட்டில் தற்போதுள்ள நிலைமையின் பிரகாரம், அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்ப நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்படுவது சிறந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

ஆணைக்குழு நேற்றைய தினம் கூடி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதுடன், தீர்மானத்தை ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவுகின்றமையை கருத்திற் கொண்டு, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நடவடிக்கைகளை பிற்போட்டதுடன், நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை மே மாதம் 14ஆம் திகதிக்கு முன்னரான திகதியொன்றில் நடத்த வேண்டும் என இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதன்படி, நாடாளுமன்றம் கூடும் திகதியொன்றை ஜனாதிபதி வர்த்தமானி ஊடாக மீண்டும் அறிவிக்க வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதுவும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலப் பகுதிக்குள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நாடாளுமன்றம் இந்த ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதியாவது கூட வேண்டியுள்ளது.

ஜுன் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றம் கூட வேண்டும் என்றால், மே மாதம் 27 அல்லது 28ம் திகதிகளில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதுடன், அதன் முதற்கட்ட நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியாவது ஆரம்பிக்க வேண்டும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது, ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாத நிலைமை தோன்றியுள்ளதாக கூறும் தேர்தல்கள் ஆணைக்குழு, ஜுன் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றம் கூடாத பட்சத்தில் அரசியலமைப்பில் பிரச்சினை எழும் எனவும் கூறியுள்ளது.

இதனால், இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்றத்தில் வழிக்காட்டல் அவசியானது என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.