Breaking News

தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் – உயர்நீதிமன்றில் வாதம் முன்வைப்பு !

 

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஒத்திவைப்புக்கெதிரான மனுக்கள் மீதான விசாரணையின் ஐந்தாம் நாளான இன்று ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாதத்தின் போது இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியோர் குணமடையும் வீதம் அதிகரித்துள்ளமை மற்றும் மரண வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளமை ஆகியன இலங்கையில் கொரோனா வைரஸ் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ரொமேஷ் டி சில்வா மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தில் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், சுகாதார நடைமுறைகளை எதிர்வரும் காலங்களிலும் பின்பற்றுதல் அவசியம் எனவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் ஒழிப்பிற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தொற்று எச்சரிக்கை தொடர்ந்தும் காணப்படுவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.