இலங்கை

தென்கயிலை ஆதீனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து யாழில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

தென்கயிலை ஆதீனம் வணக்கத்துக்குரிய தவத்திரு அகத்தியர் அடிகளாரின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் முகமாக சுவாமிகள் மீதும் காணி உரிமையாளர் மீதும் மேற்கொள்ளப்பட்ட சுடுநீர் தாக்குலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் கோரியும் சைவ மகாசபையினால் கண்டன ஆர்ப்பாட்டம் நல்லூர் கைலாச பிள்ளையார் கோயில் முன்பாக இடம்பெற்றது .

இதில் யாழ்ப்பாணம் சின்மய மிஷன் குருமுதல்வர் வணக்கத்துக்குரிய சதாகாசிதானந்தா சுவாமிகள் யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் ஆலய ஆதீன குருக்கள் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் திரு ஆறுதிருமுருகன் உட்பட பல சமயத்தலைவர்களும் அரசியல்வாதிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இங்கு உரையாற்றிய ஆறுதிருமுருகன் ,

ஆதீன குருமுதல்வரின் அவமதிப்பு தொடர்பில் இந்துமத விவகார அமைச்சரின் உடனடி நடவடிக்கையும் மலையக நாடளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக கண்டனத்தை பதிவு செய்தமை வரவேற்கத்தக்கது.

ஆதீனஅவமதிப்பு தொடர்பிலும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அத்தனை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் குரல்கொடுங்கள் வெளிநடப்பு செய்து பாராளுமன்ற வெளிமுற்றத்தில் அமர்ந்து போராடுங்கள் இல்லையேல் அனைவரும் கூட்டாக இராஜினாமா செய்து எதிர்ப்பை வெளியிடுங்கள் – என்றார்