விளையாட்டு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: இந்திய அணியில் டோனி இல்லை

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவுக்கு வருகை தந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போலவே 38 வயதான விக்கெட் கீப்பர் டோனி அணியில் இடம் பெறவில்லை.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஒதுங்கி இருக்கும் டோனி, தனது எதிர்கால திட்டம் குறித்து இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காயத்தால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடாத சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்புகிறார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் தொடரில் ஆடிய வீரர்கள் அப்படியே நீடிக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வொஷிங்டன் சுந்தரும் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

இந்திய 20 ஓவர் அணி வருமாறு:- விராட் கோலி (அணித் தலைவர் ), ரோகித் சர்மா (துணை கெப்ரன் ), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குருணல் பாண்ட்யா, வொஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.