உலகம்

துரிதமாக அதிகரிக்கும் பிரித்தானிய சனத்தொகை காரணம் இதுதான்2028ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் சனத்தொகை கிட்டத்தட்ட 70 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, குடியேற்றமே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக, தேசிய புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சனத்தொகை மூன்று மில்லியனால் அல்லது  4.5 சதவிகிதத்தால் அதிகரிக்கும் எனவும், இது 2018 நடுப்பகுதியில் 66.4 மில்லியனாக இருந்ததாகவும், 2028 நடுப்பகுதியில் 69.4 மில்லியனாக அதிகரிக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின், பிற பகுதிகளை விட இங்கிலாந்தின் சனத்தொகை மிக விரைவாக உயருமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இது 2018 நடுப்பகுதியிலிருந்து 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 5 சதவிகிதம் அதிகரித்து 58.8 மில்லியனாக அதிகரிக்குமெனவும், இது வடக்கு அயர்லாந்தில் 3.7 சதவிகிதம் (2 மில்லியன்), ஸ்கொட்லாந்தில் 1.8 சதவிகிதம் (5.5) மில்லியன்) மற்றும் வேல்ஸில் இது 0.6 சதவீதம் (3.2 மில்லியன்) எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில், பிரித்தானியாவின் சனத்தொகை வளர்ச்சியில் 27 சதவிகிதம் இறப்புகளை விட அதிகமான பிறப்புகளைக் கொண்டிருக்குமெனவும், இதில் 73 சதவீத வளர்ச்சியானது  சர்வதேச இடம்பெயர்வுகளின் விளைவாகவே ஏற்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புள்ளிவிபர வல்லுநர்களின் ஆய்வுகளுக்கு அமைய, 2031ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியாவின் மக்கள் தொகை 70 மில்லியனைக் கடக்கும் எனவும், இது  2043ற்குள், 72.4 மில்லியனை எட்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்காக  இருக்கும் எனவும், எதிர்பார்க்கப்படும் வயதானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும், பிரித்தானிய தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1993இல்  பிரித்தானிய சனத்தொகை 57.7 மில்லியனாக இருந்தது, 2004இல் இது 60 மில்லியனைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது.